இந்த வாரம் கலாரசிகன் - 03-05-2026
நான்கு நாள்களுக்கு முன்பு, ஓவியர் கோபுலுவின் நினைவு நாளையொட்டி வெளிவந்திருந்த விளம்பரம் பழைய நினைவுகளைக் கிளறியது.
நான்கு நாள்களுக்கு முன்பு, ஓவியர் கோபுலுவின் நினைவு நாளையொட்டி வெளிவந்திருந்த விளம்பரம் பழைய நினைவுகளைக் கிளறியது. அவருடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிட்டவில்லை என்பது எனது துர்பாக்கியம். ஆனால், பல முறை சந்திக்கும் வாய்ப்பை 'சாவி' வார இதழில் பணிபுரிந்த நாள்கள் ஏற்படுத்திக் கொடுத்தன.
ஓவியர் கோபுலு, ஆசிரியர் சாவியின் நெருங்கிய நண்பர். இரண்டு பேரும் ஆரம்ப நாள்களில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதுடன் சாவி சாரின் 'வாஷிங்டனில் திருமணம்', 'கோமகனின் காதல்', 'விசிறி வாழை' படைப்புகளுக்கு உயிரோட்டமாகப் படம் வரைந்தவர் ஓவியர் கோபுலு.
நாற்பதுகளில் தொடங்கி தொண்ணூறு வரையில், தமிழ் இதழியலைப் பொருத்தவரையில் அந்த அரை நூற்றாண்டு காலத்தை ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை எத்தனை ஓவியர்கள்...
Advertisement
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாணி... தனித்துவம்...வீச்சு... அதுமட்டுமல்ல, அவர்களுக்கென்று ஆயிரக்கணக்கில் ரசிகர்களும் இருந்தனர்.
மாலி, ராஜு, சில்பி, மணியம் என்று தொடங்கி, கோபுலு, ஸ்ரீதர், ராணா, மாயா, லதா, வாணி, ஸிம்ஹா, உமாபதி, கல்பனா, விஜயா, சித்ரலேகா, ஸூபா, ரஸாக், சந்திரா, ராகவன், சுப்பு, ஜி.கே மூர்த்தி, நடனம், வர்ணம், ராமு, ஜெயராஜ், தாமரை, மாருதி என்று தொடர்ந்து அடுத்தகட்டமாக மணியம் செல்வன், அரஸ், மருது, கரோ, வேதா, பத்மவாசன், ஷியாம், கண்ணா, பொன். வள்ளிநாயகம், சுமன், தமிழ் என்று நீள்கிறது ஓவியர்களின் வரிசை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ண கான சபா செயலாளர் பிரபுவும் நானும் பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். ஓவியர் கோபுலு குறித்த பேச்சு வந்தது.
'சுவாமி, என்கிட்ட பழைய கல்கி தீபாவளி மலர்கள் நிறைய சேர்த்து வைத்திருக்கிறேன். எதுக்கு தெரியுமோ? அதில் வந்திருந்த கோபுலுவின் ஓவியங்களுக்காகத்தான்...'' என்று பேச்சுவாக்கில் அவர் குறிப்பிட்டதும், நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
அவரிடம் இருந்த அத்தனை தீபாவளி மலர்களையும் வாங்கிவந்து ஸ்கேன் செய்து, எண்மப் பதிவு (டிஜிடலைஸ்) செய்து பத்திரப்படுத்தி விட்டேன்.
ஓவியர் கோபுலுவின் மறைவைத் தொடர்ந்து மணியம் செல்வனிடம் அவரது படத்தை வரையச்சொல்லி, அதை அட்டைப் படமாக்கி கதிரில் ஒரு சிறப்பிதழ் வெளியிட முடிந்தது, 'தினமணி' ஆசிரியராக நான் அடைந்த மிகப் பெரிய பேறு.
ஓவியர் கோபுலுவின் மகன் ராஜேசுவரன் தகவல் தொழில்நுட்ப விற்பன்னர். நான் பயன்படுத்தும் சாம்சங் கேலக்ஸி போன்ற அறிதிறன்பேசிகளின் கண்டுபிடிப்பில் அவரது பங்களிப்பு முக்கியமானது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முதல் அவென்யுவில் கோபுலு வாழ்ந்த வீட்டில் அவரது அறையை நினைவு அறையாக மாற்றி இருந்தார்.
அவரது ஓவியங்கள் பல அதில் இடம் பெற்றிருந்தன. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.
கோபுலு உள்ளிட்ட ஓவிய மேதைகள் அனைவரின் படைப்புகளையும் ஒரே இடத்தில், இன்றைய தலைமுறையினர் கண்டுகளிக்கும் விதத்தில் ஏன் ஓர் ஓவியக் கண்காட்சியை நாம் நடத்தக் கூடாது? கலைவாணர் அரங்கம் போன்ற இடத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் நிகழ்ச்சியாக பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சியில் அந்த ஓவியர்கள் குறித்த குறிப்பு
களுடன் நடத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்...
ஓவியர்கள் குறித்த தகவல்களையும், அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களையும் திரட்டித் தர யாராவது முனைந்தால் அப்படியொரு கண்காட்சியை முன்னின்று நடத்த 'தினமணி' நாளிதழ் தயாராக இருக்கும். ஓவியர் கோபுலுவின் 11-ஆவது நினைவு நாளில் நான் விடுக்கும் வேண்டுகோள்...இது!
பலரும் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ என்று மேற்கோள் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் குறித்துக் கேள்விப்பட்ட அளவுக்கு அவர்களது கருத்துகளைப் படித்தவர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். ஏசு கிறிஸ்துவுக்கு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த தத்துவ மேதைகள்தான் இன்றைய மேலைநாட்டு தத்துவ விசாரங்களுக்கு அடிப்படை.
கேள்வி- பதில், சம்பாஷணை முறையில் தத்துவ விசாரங்களை நடத்தும் பாணி பிளேட்டோவினுடையது.
சாக்ரடீஸ் அவரது குரு என்றால், அரிஸ்டாட்டில் அவரது சீடர். இன்று வரையில் அவரது படைப்புகள் அறிவு ஜீவிகளின் தளத்தில் படிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஸ்லாகிக்கப்படுகின்றன என்பதில் இருந்து அவற்றின் ஆழத்தையும், கருத்தாக்கத்தையும் நாம் உணர முடியும்.
யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய தத்துவங்கள் எல்லாமே பிளேட்டோவின் தாக்கம் கொண்டவை. சாக்ரடீஸூக்கு முந்தைய பித்தகோரஸ், ஹெராக்ளிட்டஸ், பார்மேணிடஸ் உள்ளிட்ட தத்துவ மேதைகளின் தாக்கமும் பிளேட்டோவிடம் காணப்பட்டது என்று சொல்வார்கள். அவரது படைப்புகளிலேயே உன்னதமானது என்று கருதப்படுவது 'ரிபப்ளிக்' அல்லது 'குடியரசு'.
'குடியரசு' என்பதால் இந்தப் படைப்பு ஆட்சிமுறை முறை குறித்த அரசியல் முன்மொழிவு என்று நினைத்துவிடலாகாது. தனிமனிதனுக்கான நீதி, சமுதாய நெறி, கல்வி, அரசு, ஆட்சிமுறை, குழந்தைகள், மகளிர் நலன், அறம் என்று பல்வேறு கருத்துகளை 'குடியரசு' என்கிற பிளேட்டோவின் படைப்பு உள்ளடக்குகிறது. சமுதாயமும் தனிமனிதனும் இணைந்து
முன்னேறும் கருத்து பிளேட்டோவினால்தான் முன்மொழியப்படுகிறது.
சாக்ரடீஸ், கிளாக்கன், கிபாளஸ், திராசிமாக்கஸ், அதைமாந்தஸ், கிளைடோபோன், பாலிமார்க்கஸ் உள்ளிட்ட சில கிரேக்க தத்துவ மேதைகள் சந்தித்து உரையாடுவதுபோல அமைந்திருக்கிறது பிளேட்டோவின் 'குடியரசு'. இதில் மையக் கதாபாத்திரம் சாக்ரடீஸ். பத்து பிரிவுகளாக இந்த உரையாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
ஆர். இராமானுஜாசாரி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் பிளேட்டோவின் 'குடியரசு' புத்தகத்தை அண்மையில்தான் பாகம், பாகமாக நகர்ந்து முழுமையாகப் படித்து முடித்தேன். புரிந்துகொள்ள இன்னொரு முறை படிக்க வேண்டும். அவ்வளவு கனமான, ஆழமான கருத்துகள்.
மதுரை 'தீக்கதிர்' நாளிதழில் பணிபுரிந்த கவிஞர் கவிதா குமாரை சந்தித்துப் பல ஆண்டுகளாகி விட்டன. அண்மையில் அவரது துளிப்பா ஒன்று கண்ணில் பட்டது. நேரில் சந்தித்துப் பாராட்டுவதுவரை காத்திருக்கப் பொறுமையில்லை. இங்கே பதிவு செய்கிறேன்.
தேடியும் கிடைக்கவில்லை
மணலும் கழுதைகளும்
ஆறுகள் தொலைந்த ஊர்!