முகப்பு
வெள்ளிமணி

ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா!

ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், பருவ வயதை எட்டிய தனது மகள் புஷ்கலாவையும் அழைத்துக்கொண்டு

Updated On : 30 நவம்பர் 2012, 11:53 pm IST
பகிர்:

திருவிதாங்கூர் மன்னருக்கு பட்டு வஸ்திரங்களும் துணிமணிகளும் நெய்து, அவரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியில் இருந்தார்கள் மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர சமூகத்தினர் சிலர். பாண்டி நாட்டில் இருந்து திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனைக்குத் தேவையான துணிமணிகள் வழக்கமாகச் சென்று வந்தன.
 ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், பருவ வயதை எட்டிய தனது மகள் புஷ்கலாவையும் அழைத்துக்கொண்டு திருவிதாங்கூருக்கு பயணப்பட்டார். பாண்டிய நாடு வழியே பயணித்து, ஆரியன்காவுக் கணவாய் வழியாக திருவிதாங்கூர் செல்ல ஏற்பாடு. அவர்கள் ஒருவழியாக மலைப் பாதையில் ஏறி, ஆரியங்காவு சென்றடைந்தனர். ஆனால், அடர்ந்த அந்தக் காட்டுப் பகுதியைக் கண்டு புஷ்கலாவுக்கு அச்சம் ஏற்பட்டது. எனவே, தன் மகளை அங்கிருந்த தர்மசாஸ்தா கோவிலின் பூசாரி வீட்டில் தங்கவைத்துவிட்டு, தான் திரும்பி வரும்வரை தன் மகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி பூசாரியிடம் கேட்டுக்கொண்டு, வியாபாரி மட்டும் திருவிதாங்கூருக்குச் சென்றார்.
 இங்கே தர்மசாஸ்தாவான ஐயப்பன் கோயில் சந்நிதியில் தன்னாலான கைங்கரியங்களைச் செய்து வந்தாள் புஷ்கலா. பூஜைக்கு பூக்கள் பறித்துச் செல்வது, நீர் சுமப்பது, கோலமிடுவது, அழகுபடுத்துவது என அவளின் வாழ்க்கை அங்கே ஐயனுடன் ஐக்கியமானது. நாளாக நாளாக, ஐயன் மீது காதல் பிறந்தது.
 திருவிதாங்கூர் சென்ற வியாபாரி தனது வேலையை முடித்துவிட்டு, காட்டுப் பாதையில் ஆரியங்காவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு மத யானை அவரைத் தாக்க வந்தது. அச்சத்தால் அலறி ஓடிய அவரை இளைஞன் ஒருவன் வழிமறித்தான். மத யானையை அடக்கி, யானையிடம் இருந்து அவரைக் காத்து, ஆசுவாசப் படுத்தினான். இளைஞனின் தெய்வீகக் களையும் வீரமும் அவரை மகிழ்வடையச் செய்தது. அந்த இளைஞனிடம் தான் என்ன கைம்மாறு செய்வேனோ என்று கேட்டார் அந்த வியாபாரி. இளைஞனோ, அவரது பெண்ணை மணம் முடித்துத் தர வேண்டும் என்று கோரினான். இவரும் அதற்கு உடன்பட்டார். அடுத்த நொடி அந்த இளைஞன் மறைந்து போனான்.
 வியாபாரி ஆரியங்காவு வந்து சேர்ந்தார். என்ன ஆச்சரியம். எந்த இளைஞனை வனத்தில் பார்த்தாரோ அதே கோலத்தில் அங்கே ஐயப்பன் எழுந்தருளியிருந்தார். அவருக்கு உண்மை புரிந்தது. தன்னைக் காக்க வந்தது இந்த ஐயப்பனே என்றும், தன் மகளின் கைங்கரியத்தில் மகிழ்ந்த ஐயப்பனே அவளைக் கரம் பற்ற விரும்பினார் என்றும் தெரிந்தது. "ஹே ஐயனே நீயே என் மகளை ஆட்கொள்ள அன்று வந்தாயா?‘ என்று அரற்றிய அந்த வியாபாரி, கோயில் பூசாரியிடம் நடந்தது கூறினார். அவரது மகளும் தன் நிலையைக் கூற, ஐயப்பனுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடானது. திருவிதாங்கூர் மன்னர் அனுமதி தர, மதுரையில் இருந்த தன் சொந்தங்களுக்கு அழைப்பு அனுப்பி, திருமண ஏற்பாடுகளைச் செய்தார் அந்த வியாபாரி. அதே நாள்... தர்மசாஸ்தாவான ஐயப்பன் நேரில் எழுந்தருளி, புஷ்கலாவைக் கரம்பிடித்து, தன்னுள் ஏற்றுக் கொண்டார்.
 இந்தத் திருமண நிகழ்வு இன்றும் வருடந்தோறும் கொண்டாடப் படுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருமண விழாவில், மதுரையில் இருந்து செüராஷ்டிர இனத்தவர் தங்கள் குலப் பெண்ணான புஷ்கலைக்கு சீதனம் எடுத்து வந்து, இதில் கலந்து கொள்கின்றனர். இவ்வகையில், சபரிமலையில் தர்மசாஸ்தா பிரம்மசாரியாக வீற்றிருக்கிறார். இங்கே ஆரியங்காவில், புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்ட கோலத்தில் கிருஹஸ்தராகக் காட்சி அளிக்கிறார்.
 பரசுராம úக்ஷத்ரம் என்று வர்ணிக்கப்படும் பகுதி. ஸ்ரீபரசுராமர் பல்வேறு தலங்களை எழுப்பினார். தர்ம சாஸ்தாவுக்கு அவர் பல ஆலயங்களை எழுப்பியுள்ளார். அதில் ஓர் ஆலயம் என்று பக்தர்கள் கொண்டாடுகின்றனர். சபரிமலையில் நடப்பது போன்றே இங்கும் பூஜா விதிகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இங்கே ஐயப்பன் திருமணக் கோலத்தில் காட்சி தருவதால், ஐயப்பனைத் தரிசிக்க விரும்பும் பெண்களும் தம்பதியராக இங்கு தரிசனம் செய்ய வரலாம்.
 திருமணத் தடை உள்ளவர்கள் ஐயனை வேண்டிக் கொண்டால் தடை நீங்கும்.
 சந்நிதி திறந்திருக்கும் நேரம்: காலை 7-11 வரை மாலை 4-7வரை.
 இருப்பிடம்: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 23 கி.மீ. கொல்லம், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.