முகப்பு
வெள்ளிமணி

ஆழியில் அணை கட்டிய வரலாறு

சீதா பிராட்டியாரை சிறை மீட்க இலங்கைக்குச் செல்ல நினைத்த ராமபிரான், முதலில் தவமிருந்தார்.

Updated On : 21 நவம்பர் 2014, 3:04 pm IST
பகிர்:

சீதா பிராட்டியாரை சிறை மீட்க இலங்கைக்குச் செல்ல நினைத்த ராமபிரான், முதலில் தவமிருந்தார். கடற்கரையில் தர்ப்பைகளைப் பரப்பி வருணனை நினைத்து தன் புஜத்தையே தலையணையாக வைத்து கிழக்கு முகமாகப் படுத்துத் தியானத்தில் மூழ்கினார். மூன்று நாட்கள்... ஏகாக்ர சிந்தையோடு மனோ, வாக்ய, காய சுத்தியோடு அவர் தவமிருந்தும் சமுத்திர ராஜன் அவர் முன் தோன்றவில்லை. அதனால் ராமருக்கு அபார கோபமுண்டாயிற்று. தம்பியை கூப்பிட்டார். ""லஷ்மணா! என் வில்லைக் கொண்டு வா. அருமையான அஸ்திரங்களையும் எடுத்து வா. இந்த மூடனுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன்.

மூடர்களிடம் மட்டும் பொறுமை காட்டிப் பயனில்லை என்று பெரியவர்கள் சொன்னது மிகச் சரியாகப் போயிற்று. என் அஸ்திரங்களால் இந்த சமுத்திரத்தை வற்றச் செய்கிறேன். நம் வானரர்கள் கால்களால் நடந்தே சமுத்திரத்தைக் கடந்து போகச் செய்கிறேன்'' என்று கர்ஜித்தார்.

லட்சுமணன் எடுத்து தந்த கோதண்டத்தை வளைத்து நானேற்றி பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துப் பிரளய கால அக்னியைப் போல மின்னி நின்றார். அப்போது கடல் கொந்தளித்து ஆர்ப்பரித்து மலைபோன்ற அலைகள் எழும்பிக் குதித்தன. சூரியன் பயந்து மறைந்தான். எங்கும் இருள் சூழ்ந்தது. மக்கள் நடுநடுங்கினர். இடியும் மின்னலும் சீறின. பிரளய காலம் வந்து விட்டதாய்த் தேவர்கள் மருண்டனர். லட்சுமணன் மட்டும் ஓடி வந்து, ராமரின் வில்லைப் பிடித்துக் கொண்டு, ""வேண்டாம் அண்ணா... வேண்டாம்!'' என்று கெஞ்சினார்.

Advertisement

Advertisement

அந்த நேரத்தில் என்னவோ, ஏதோவென்ற குழப்பமான மனதோடு, ""ராம ராம'' என்று ஜெபித்தபடி வருணபகவான் ராமர் முன் ஓடோடி வந்து அவரைப் பார்த்து நின்றான். ""ராகவ சிம்மமே! மன்னிப்பீர்.

மன்னிப்பீர்! பிழை பொறுத்தருள்க. நீவிர் வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை கட்டுகையில் அதனை அடித்துக் கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்!'' என்று கும்பிட்டு நின்றான். ஒருவாறு சினம் தணியப்பெற்ற ராமர், ""வருணா! என் வில்லில் அம்பு தொடுக்கப்பட்டுவிட்டால் அது வீண் போகவே போகாது. அதனால் அதனை ஏதோ ஓர் இடத்தில் எய்தாக வேண்டும். அது எந்த இடம் என்று மட்டும் நீ சொல்!'' என்கிறார்.

""வடதிசையில் "துரும குல்யம்' என்று எனக்கு ஒரு தலம் இருக்கிறது. அதனை பல ராட்சசர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு பல அதர்ம காரியங்கள் செய்து அட்டூழியம் செய்து விடுகின்றனர். அவர்கள் மீது இதனை எய்து காத்தருள்வீர்'' என்று வருணன் வேண்ட, ராமர் அந்த அம்பை விடுவித்தார். அது நேராய் அந்த இடத்திற்குச் சென்று அதைப் பிளந்தது. பிளந்த இடத்திலிருந்து சமுத்திரம் என தண்ணீர்

பொங்கிப் பிரவாகிக்க அத்தனை ராட்சசர்களும் அதில் விழுந்து மாண்டனர். அந்த இடம் விரணகூஜம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என்று அழைக்கப்படுகிறது.

ராமர் அந்த இடத்தில் "சகல வளங்களும் பெருகுக'' என்று அருளாசி வழங்கினார். இதனால் இன்புற்ற வருணன் ராமனைப் பணிந்து ஒரு வானர வீரனை அழைத்து அவருக்கு அறிமுகப் படுத்தினான்.

""ரகு நந்தரே! இதோ இவன் நளன் என்ற வானர வீரன். விஸ்வகர்மாவின் புதல்வன். தன் தந்தைக்குச் சமமானவன். அவரிடம் இருந்து கட்டும் கலையில் வரங்கள் பல பெற்றவன். இவனே என்மேல் அணை கட்டட்டும். நான் தாங்குகிறேன்!'' என்று சொல்லிச் சென்றான்.

உடனே நளன் என்ற அந்த மகாபலம் பொருந்திய வானர வீரன் எழுந்து ராமரைப் பணிந்து, ""தசரத குமாரா! வருணன் கூறியது உண்மையே. நகரங்களை சிருஷ்டிப்பதிலும் கட்டுமானக் கலையிலும் தலைசிறந்த என் தந்தை தனது திறமை அனைத்தையும் எனக்கு வழங்கியிருக்கிறார். அதனால் என் முழு திறமையையும் பயன்படுத்தி அற்புதமான அணை ஒன்றை உருவாக்கித் தருகிறேன். கவலை வேண்டாம். அணை கட்டத் தேவையான பொருள்களை மட்டும் வானர வீரர்களை விட்டுச் சேகரித்துக் கொண்டு வரக் கட்டளையிடுவான்!'' என்று விளக்கமாய்க் கூறினான்.

அவ்வளவுதான்... ராமர் கட்டளையிட்ட மறுகணமே வானரவீர்ர்கள் சிட்டாய்ப் பறந்து சென்று காடுகளில் நுழைந்து ஆயிரக்கணக்கில் மருதம், பனை, அசுவகர்ணம், ஆச்சா, கர்ணீசாரம் போன்ற மிகப் பெரும் விருட்சங்களை வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்து போட்டனர்.

இன்னொரு குழு வானரங்கள், பெரும் பாறைகள், கற்குன்றுகள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் பெயர்த்துக் கொண்டு வந்தார்கள். நான் அனைத்து வானர வீரர்களின் துணையுடன் அந்த ராட்சச மரங்களை முதலில் கடலில் போட்டு அதன்மீது கற்களையும் குன்றுகளையும் வீசி அணைகட்டத் துவங்கினான்.

கற்களும் பாறைகளும் கடலில் வீசப்பட்டபோது எழுந்த சப்தம் நாளாதிசைகளிலும் பரவி கேட்போரின் செவிகளைச் செவிடாக்கும்படி செய்தன! அளவு கோல்களைக் கோணாமல் பிடித்தல், கயிறு கட்டி நிற்றல் என்று அந்த வானர சேனைகளுக்கு நளன் பயிற்சி தந்தான்.

முதல் நாள் 14 யோசனை தூரம் அணை கட்டப்பட்டது. மறுநாள் இன்னும் விரைவாக்க கட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் 20 யோசனை தூரம் அணை கட்டப்பட்டது. 3 ஆவது நாள் 23 யோசனை தூரம் என்று சுவேலமலை வரையும் அணை கட்டி முடித்தார்கள்.

மொத்தம் இந்த 100 யோசனை தூரத்தையும் ஐந்தே நாள்களில் அணை கட்டி முடித்த அதிசயத்தைக் காண ஆகாயத்தில் தேவர்கள் கூட்டம் அலைமோதியது! நளனையும் வானர சேனையையும் ராமர் புகழ்ந்து கொண்டாட அவர்கள் ராமபிரானைப் பணிந்து நின்றார்கள்!

(பழனிப்பதி மீது பாடிய "தலைவலி மருந்தீடு காமாலை'' எனத் துவங்கும் திருப்புகழ் பாடலில் ""அலைகடலை அடைத்தே மகா தோர ராவணனை மணிமுடி துணிந்து'' என்ற வரிகளில் இந்த நிகழ்ச்சியை அருணகிரி நாதர் சுட்டிக் காட்டியுள்ளார்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.