முகப்பு
வெள்ளிமணி

ஆபிரகாமின் விசுவாசம்!

செல்வாக்கு மிக்க மனிதரான ஆபிரகாமுக்கு எல்லாம் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியது.

Updated On : 11 ஆகஸ்ட் 2017, 11:04 am IST
பகிர்:

செல்வாக்கு மிக்க மனிதரான ஆபிரகாமுக்கு எல்லாம் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியது. அதுபோல அவரின் மனைவி சாராளும் மிகுந்த துயரம் அடைந்தாள். அவர்களது துயரத்தைக் கண்ட தேவன் ஆபிரகாமை அழைத்து, "வானத்தில் உள்ள ஏராளமான நட்சத்திரங்களைப் பார். அவற்றை உன்னால் எண்ண முடியாது, உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்'' என்று வாக்களித்தார்.

ஆனால் ஆபிரகாம் 100 வயதையும் சாராள் 90 வயதையும் எட்டியிருந்தனர். இருப்பினும் இத்தனை முதுமையில் மகப்பேறு எப்படிச் சாத்தியம் என்று அந்தத் தம்பதியர் அவநம்பிக்கை கொள்ளவில்லை.  கடவுள் வாக்குக் கொடுத்தது போலவே அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தார். அவனுக்கு ஈசாக்கு எனப் பெயரிட்டனர். 

ஈசாக்கு பெரியவனாக வளர்ந்து நின்றபோது ஆபிரகாமின் விசுவாசத்தை தேவன் சோதிக்க விரும்பினார். ஆபிரகாமை அழைத்த தேவன், உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். (ஆதியாகமம் 22:2)

Advertisement

Advertisement

இதைக் கேட்ட ஆபிரகாம் உடனே கீழ்ப்படிந்தான். தன்னுடைய மகனைப் பலியிட தேவன் கேட்டுக்கொண்டபோது கூட, அதை யாரிடமும் சொல்லி புலம்பவோ, மனதிற்குள் தேவனை தூற்றவோ இல்லை. ஏனென்றால், "உன்னை பெருக பண்ணுவேன்' என்று தேவன்தானே சொன்னார். இவ்வாறு சொன்ன அவர் எப்படி என் மகனை பலியிட அனுமதிப்பார் என்ற விசுவாசம் அவருக்குள் இருந்தது.

மகனையும் தன்னுடன் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டு மூன்று நாள் பயணப்பட்டு, கடவுள் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தை அடைந்தனர். 

பின்னர் தன்னுடன் வேலைக்காரர்களிடம் நீங்கள் இங்கே இருங்கள் நானும் என் மகனும் அந்த மலையின் மீது சென்று தேவனை வணங்கிவிட்டு வருகிறோம் என்று விசுவாசத்துடன் கூறினார். மலைக்கு ஆபிரகாமும் ஈசாக்கும் நடந்து செல்கின்றனர். அப்போது  ஈசாக்கு கேட்கிறார் தன் தந்தையாகிய ஆபிரகாமைப் பார்த்து, "அப்பா, விறகும் இருக்கிறது, நெருப்பும் இருக்கிறது ஆனால் பலியிட ஆடு இல்லையே'' என்று. அப்பொழுதும் ஆபிரகாம் விசுவாசத்தோடு "தேவன் பார்த்துக்கொள்வார்'' என்றே தன் மகனிடம் கூறுகிறார். 

அந்த மலையில் ஒரு பலி பீடத்தைத் தயார் செய்து விறகுகளை அடுக்கினார். மகன் ஈசாக்கை பலி பீடத்தில் படுக்க வைத்து அவனைக் கட்டிப்போட்டார். பிறகு பலியை நிறைவேற்றத் தன் கத்தியை வெளியே எடுத்து அவனை வெட்டுவதற்குத் தயாரானார். 

அந்த நேரத்தில் கடவுள் தனது தூதன் வழியாக ஆபிரகாமைத் தடுத்தார். "ஆபிரகாமே! ஆபிரகாமே! பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.'' (ஆதியாகமம் 22:12) 

உடனே ஆபிரகாம் தன்னுடைய மகனை பலிபீடத்தில் இருந்து இறக்கி விட்டான். பின்னால்  புதரில் கொம்புகள் சிக்கியிருந்த ஆட்டுக்கடாவைக் கண்டான். அதைப் பிடித்து தேவனுக்குப் பலியிட்டான். கடவுள் மீது ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசமும் கீழ்ப்படிதலும் அவர் "விசுவாசிகளின் தகப்பன்' என்று அழைக்கப்படக் காரணமாயிற்று.  

இதில் ஆபிரகாம் எந்த நிலையிலும் தேவன் மீது சந்தேகம் கொள்ளவில்லை. தேவன் மீது கோபமும் கொள்ளவில்லை. எனவே தேவன் அவருடைய சந்ததியை ஆசீர்வதித்து பலுகிப் பெருகச்செய்தார். 

இந்த ஆபிரகாமைப்போல விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டும். நம்மை ஆசீர்வதிப்பதே தேவனுடைய சித்தம். நம்மை பெருகச்செய்வதே தேவனின் சித்தம். நாமும் ஆபிரகாமைப் போல தேவன் மீது விசுவாசம் வைப்போம்; தேவன் நம்மையும் நம் சந்ததியையும் ஆசீர்வதிப்பார்.
- ஒய். டேவிட் ராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.