முகப்பு
வெள்ளிமணி

சோமனுக்கு அருளிய சோமநாதர்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமையுடையதாகும்.

Updated On : 6 ஜூலை 2018, 12:50 pm IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமையுடையதாகும்.  சந்திரன் வழிபட்டு சிவனருள் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. ஐந்து நிலை கோபுரத்துடன் கூடிய இக்கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது. மூலவர் சோமேஸ்வரர், உற்சவர் சோமநாதர். அம்பாள் ஆனந்தவல்லி. கோயிலின் தல விருட்சம் வில்வம். தீர்த்தம் சந்திர புஷ்கரணி. இங்கு காரண ஆகமப்படி கோயிலின் வழிபாடுகள் நடைபெறுகின்றன. புராண காலத்தில் இந்த ஊர் சந்திர பட்டணம் என்று வழங்கப்பட்டு வந்துள்ளது.
27 நட்சத்திர தேவதையர்களின் கணவனான சந்திர பகவான்,   தட்சனின் சாபத்தால்  வெப்பு நோயால் பாதிக்கப்பட்டு, களையிழந்து தேயத் தொடங்குகிறான். தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க  அகத்திய முனிவரின் வாக்குப்படி,  வில்வ வனத்தில் அருள்காட்சி தரும் லிங்கத்திற்கு தனியே கோயில் கட்டி பூஜித்ததால் அவனது பிணி நீங்குகிறது. சந்திரன் தன்னுடைய கலைகளால் அபிஷேகம் செய்ததால் இங்குள்ள சுயம்பு லிங்கம் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார்.  இத்தலத்தில் சந்திர பகவான் தம் இரு மனைவியரான ரோஹிணி, கார்த்திகை ஆகிய இருவருடன் தனிச் சந்நிதியில் காட்சியளிப்பது சிறப்பம்சம்.
ராமாயண காலத்தில் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடி ஸ்ரீராமன் இலங்கைக்குச் செல்லும் போது இத்தலத்திற்கு வானரப் படையுடன் வந்து சோமநாதரை வழிபட்டார்.  அப்போது,  ராமனிடம் "சீக்கிரமே சீதையை அடைவாய்' என்று சிவபெருமான் ஆசி வழங்கியதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.  ராமபிரான் இங்கு வந்தபோது உடன் வந்த வானர சேனைகளின் பசியைத் தீர்த்த இடம் இது. அதனால் "வானர வீர மதுரை' என இந்த ஊர் பெயர் பெற்றதாகவும் பின்னர் இதுவே மருவி "மானாமதுரை' என மாறியதாகவும் சொல்லப்படுகிறது. 
பலராமர் தனது தீர்த்த யாத்திரையின் போது சூரன் ஒருவனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க, இத்தலத்திற்கு வந்து சோமேஸ்வரரை பூஜித்து பாவ விமோசனம் பெற்று பின்பு, துவாரகைக்கு சென்றதாக புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன.
அவதார புருஷர், அவதூத மஹான் என்று அழைக்கப்படும் சதாசிவ பிரம்மேந்திரர்  காட்சி தந்த தலங்கள் ஐந்து. இவற்றுள் ஜோதி ரூபமாக காட்சி தந்த இடம் மானாமதுரை.  இந்த மஹானின் திருமேனி ஆலய பிரகாரத்தில் காணப்படுகிறது. வருடம் தோறும் சித்திரை பஞ்சமி நாளில்  சதாசிவ பிரம்மேந்திரரின் ஆராதனை பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
மதுரையில் ஆட்சி செய்த நாயக்க வம்சத்திற்குப் பின் அந்நியர்கள் (வேற்று மதத்தினர்) மதுரையம்பதியைக் கைப்பற்ற முனைந்தனர். அப்போது, சிவகங்கை மன்னர் சசிவர்ணரும், சேது காவலரும் இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். சேது சேனை, வீரத்திற்கு இலக்கணம் வகுத்த தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரன் தலைமையிலும், சிவகங்கை மறவர் படை, விவேகத்தில் சிறந்த தாண்டவராயப் பிள்ளை தலைமையிலும் வீறு கொண்டு எழுந்தது. அவர்கள் ஆலவாய் அண்ணலையும் அங்கயற்கண்ணியையும் தக்க பாதுகாப்புடன் மானாமதுரைக்குக் கொண்டு வந்து சோமநாதர் கோயிலில் பாதுகாப்பாக வைத்ததாக சொல்லப்படுகிறது. மீனாட்சியும் சொக்கநாதரும் இரண்டு ஆண்டுகள் இவ்வாலயத்தில் இனிது வீற்றிருந்து பின்னர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன. 
இங்கிருக்கும் சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை மனமுருகி வழிபட்டால் தீராத சரும நோய்கள் குணமாகும் என்று சொல்லப்படுகிறது.  இங்கு,  ஆடித் தபசு திருநாளில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை அணிந்து கொள்ள, திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வித்தால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 
மதுரையைப் போலவே இங்கும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக அதே சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் என்றால் இங்கு ஆனந்தவல்லி சோமநாதராகக் காட்சியளிக்கிறார். மதுரையில் கள்ளழகர் என்றால் மானாமதுரையில் காட்சி தருபவர் வீர அழகர்.  மதுரையம்பதியில் மீனாட்சி சொக்கநாதருக்கு நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகை  ஆற்றில் இறங்கும்  வைபவம், திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 
திருப்பணி:  தற்போது திருப்பணி வேலைகள் மிகப் பெரிய அளவில் தொடங்கி முழுவீச்சில் நடைபெறுகிறது. பக்தர்கள் இப்புனித பணியில் பங்கேற்று அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோமநாதர் அருளைப் பெறலாம். 
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது மானாமதுரை. 
தொடர்புக்கு:  99422 26962/ 96296 73713.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.