முகப்பு
வெள்ளிமணி

நிலப் பிரச்னைகள் தீர...

Updated On : 28 ஜூன், 2024 at 11:58 AM
பகிர்:

மகாபலி சக்கரவர்த்தி ஆண்ட இடம் "மாமல்லபுரம்' என அழைக்கப்பட்டது. இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மன் காலத்தில் விரிவு பெற்ற ஊரின் நடுவே அமைக்கப்பட்டது தலசயனப் பெருமாள் கோயிலாகும். நாளடைவில் கடற்கரையிலிருந்து விஜயநகர அரசர்கள் காலத்தில் ஊருக்குள் கொண்டுவந்து கட்டப்பட்டது.

வைணவ திவ்ய தேசங்களில் 63}ஆவது தலம் என்பதோடு, பூதத்தாழ்வாரின் அவதாரத் தலமுமாகும் கூட!

"கடல்மல்லைத் தல சயனத்தில் உறையும் இறைவனை பவளத்தூண், அமுதம், தீங்கரும்பு, பொற்குன்று, பக்தர்கள் இடர் கடியும் கற்பகம்' என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

தலம் என்றால் தரை. ஆதி

சேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் திருமால் இங்கு பாம்பின் மேல் துயிலாமல் தரையிலேயே படுத்து அறிதுயில் கொண்டிருப்பதால் தலத்திலே சயனம் கொண்டுள்ள பெருமாள் என வணங்கப்படுகிறார்.

மன்னன் மல்லேஸ்வரன் தினம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்து வந்தான். அன்னதானம் திடீரென்று நிறுத்தப்பட்டதால், கோபமடைந்த அடியார்கள் மன்னனுக்கு சாபமிட்டனர். புண்டரீக புஷ்கரிணியில் முதலையாக வாழ்ந்து வந்தான் மன்னன்.

புண்டரீக மகரிஷி பெருந்தவம் புரிந்து முடித்ததும், தாமரை மலர்களைக் கொய்து, நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க எண்ணினார். அப்போது மகரிஷியிடம், தனது சாபத்துக்கு விமோசனம் அருள முதலை மன்னன் வேண்டினார். பூக்களைப் பறித்து ஒரு கூடையில் நிரப்பி, செல்லும் வழியில் கடல் குறுக்கிட்டதால், இரவு, பகலாக தன் கைகளால் கடல்நீரை வெளியே இறைக்கத் தொடங்கினார். கை சோர்ந்த போது, ஒரு முதியவர் அங்கு வந்து, ""எனக்கு பசிக்கிறது; உணவு தாருங்கள். நான் இறைக்கிறேன்'' என்றார் . மகரிஷியும் உணவு கொண்டுவரச் சென்றபோது, அவர் வைத்துச் சென்ற பூக்களைச் சூடிய முதியவரோ திருமாலாக சயனக் கோலத்தில் காட்சி தந்தார்.

உடனே, "தான் எப்போதும் இறைவனின் திருவடியை தரிசிக்க வேண்டும். உலக உயிர்கள் அனைத்தும் பசியின்றி சுகமாக வாழ வேண்டும். மன்னன் மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும்'' என வேண்டினார் மகரிஷி. அவ்வாறே வரமளித்தார் திருமால்.

கருவறையில் வெறுந்தரையிலே எம்பெருமான் சயனித்திருக்க, புண்டரீக மஹரிஷி கை கூப்பிய வண்ணம் அருகில் உள்ளார். மகரிஷிக்கு சயன கோலத்தில் நிலத்தில் கிடந்து காட்சி அளித்ததால் இப்பெருமாள் "தலசயனப் பெருமாள்' என்று அழைக்கப்

படுகிறார். நிலமங்கைத் தாயாரும் தரையிலேயே அமர்ந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு.

உற்சவர் உலகுய்ய நின்றார். உலக மக்களைக் காப்பாற்றுவதற்காக, தன் கையில் ஒரு சிறுதாமரை மொக்குடன் நின்றவாறு உலா வருகிறார். கையில் தாமரை மொட்டுடன் இருக்கும் உற்சவர் திவ்ய தேசங்களில் இங்குதான்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாயார்

தரிசனத்துக்கு உகந்த நாள்களாகும்.

"செவ்வாய்க்கிழமையன்று 9 வெண்தாமரை பூக்கள், நெய், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு நெய், தீப ஆராதனை செய்து நிலமங்கைத்தாயாரை ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்ய நிலப் பிரச்னைகள் தீரும், திருமண விருட்சம் என்ற புன்னை மரத்தை வெள்ளி, பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத்தடை நீங்கும். இங்குள்ள

"அர்த்த சேது' என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் ராமேசுவரத்தில் நீராடிய பலன் உண்டு. பிரதோஷம், சுவாதி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளைகளில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி "ருணவிமோசன ஸ்தோத்திரம்'கூற கடன் தொல்லை தீரும்' என்பது ஐதீகம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில்

இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது.

விவரங்களுக்கு 9840408650.

இரா. இரகுநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.