சிரசு பெருவிழா: ஏன், எதற்கு, எப்படி?
விதர்பத் தேசத்தை ரைவதன் எனும் மன்னன் ஆண்டு வந்தார். தனக்குப் பிறகு நாடாள வாரிசு இல்லையே என்ற கவலை அவருக்கு இருந்தது.
விதர்பத் தேசத்தை ரைவதன் எனும் மன்னன் ஆண்டு வந்தார். தனக்குப் பிறகு நாடாள வாரிசு இல்லையே என்ற கவலை அவருக்கு இருந்தது. குழந்தை வரம் வேண்டி பிரம்மதேவனை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார். மகிழ்ந்த பிரம்மதேவன், வேண்டும் வரம் கேள் என்றார்.
அதற்கு, தாலாட்டிப் பாடி மகிழ ஒரு வாரிசு வேண்டும் என்றார் மன்னன். பிரம்மதேவனின் அருளால், பார்வதியின் அம்சமான ரேணுகாதேவியே மகளாகப் பிறந்தாள். குழந்தை வளர்ந்து குமரியானாள். மகளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமே என்று ரைவதனுக்கு எண்ணம் உண்டானது.
பார்வதிக்கு பரமசிவன்தான் கணவர். அதுபோல ரேணுகாதேவிக்கு ஈசனின் அம்சமாக ஜமதக்னி முனிவர் கணவராக வந்தார். இவர்களுக்கு விஷ்ணுவின் அவதாரமாக பரசுராமர் உள்ளிட்ட 4 குழந்தைகள் பிறந்தன. வழக்கமாக, ரேணுகாதேவி ஆற்றுக்கு நீர் எடுக்கச் செல்வாள். ஆற்றங்கரை மண்ணையே குடமாகச் செய்து நீர் எடுக்கும் அவளின் திருக்கரங்கள் பட்டவுடனே மண் குழைந்து பானையாக மாறும்.
Advertisement
Advertisement
ஒருநாள் வானில் மிதந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் உருவம் நீரில் பிம்பமாகத் தோன்றியது. யார் இது இத்தனை அழகாக என்று நினைத்த அவளின் கவனம் சிதறியது. இதனால், மண் குழைந்தது, மனமும் கலைந்தது. இதனை ஞான திருஷ்டியால் அறிந்த ஜமதக்னி முனிவர் அக்னியாகக் கோபத்தில் கொதித்தார். உடனே தனது மகன் பரசுராமரை அழைத்து, 'தாயின் தலையை வெட்டிக் கொண்டு வா' என்று ஆணையிட்டார்.
தந்தையின் சொல்லையே வாக்காகக் கருதி பரசுராமர் தனது தாயின் தலையை வெட்டப் புறப்பட்டார். மகன் வெட்டவரும் தகவலறிந்த தேவி, ஒரு மீனவன் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள். எல்லோரையும் மீறி தேவியை பரசுராமர் வெட்ட வந்தார். அவரைத் தடுத்த மீனவரையும், அவனது மனைவியையும் வெட்டிவிட்டு, தாயின் சிரசைக் கொய்தார். வாக்கை நிறைவேற்றிவிட்டு, தந்தையின் முன் கண்ணீருடன் நின்றார் பரசுராமர். தன் சொல்லைக் காத்த தனயனிடம் வேண்டும் வரம் கேள் என்று தந்தை கூறினார். தாயை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று பரசுராமர் கேட்டார்.
கலசத் தீர்த்தத்தை வழங்கி, உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்று ஜமதக்னி முனிவர் கூறினார். சந்தோஷத்துடன் ஓடிய பரசுராமர் வெட்டுப்பட்டவர்களின் தலையை ஓட்டி உயிர்ப்பித்தார். அப்போது மீனவப் பெண்ணின் உடலில், தாயின் தலையைப் பொருத்திவிட்டார். உடனே இப்படியாகிவிட்டதே என வருந்தியபோது, உடலும், தலையும் மாறிய தேவி, மாரியம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்று ஜமதக்னி முனிவர் ஆசி வழங்கினார்.
அன்று முதல் மாரியம்மனாகவும், கெங்கையம்மனாகவும் ரேணுகாதேவி அருள்புரிகிறார். வெட்டப்பட்ட தேவியின் தலையை மீனவப் பெண்ணின் உடலோடு பொருத்தும் திருவிழாவே கெங்கையம்மன் சிரசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அம்மனின் மாமியார் வீடாகக் கருதப்படும் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலிலிருந்து, தாய் வீடான கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலுக்கு அம்மன் ஊர்வலம் வருவதே இத்திருவிழாவின் சிறப்பு.