அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
அறமும் அரசியலும் என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாடு என்றால்,
'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்
Advertisement
Advertisement
செல்வரும் சேர்வது நாடு.' (குறள் 731)
என்றார் திருவள்ளுவர். அவர் கூறும் தக்கார் என்றால் தகுதிவாய்ந்த அறிஞர்கள் என்று பொருள். அவர்கள் கற்றல் கேட்டலாகிய பெரியோர்களாக இருப்பர்.
ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் குறிப்பில்தான் தக்காரும் சேர்வது நாடு எனப்பட்டது. இந்தக் கருத்தை அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் எனப் பாண்டிய மன்னன் தனது நாடாண்ட திறத்தால் உணர்ந்து மொழிந்ததாகப் புறநானூற்றில் (183) அவனே கூறினான்.
இவர்களின் பங்களிப்பு எல்லாம் எப்போதும் நாட்டுக்கு உரித்தாயினும் ஒரோவழி தடுமாறும்
அரசியலாம் அறச்சிந்தனைக்கு ஊறு ஏற்படுங்கால்
உற்றுழி உதவுபவர்களாக அறிஞர்கள் இருப்பர் என்பது கருத்து.
மக்களால் கூடிவாழும் ஆட்சி நிலையில் அறப் பிறழ்ச்சி ஏற்படும் என்பதால்தான் அரசியல் கற்றுத் தேர்ந்து சோழநாட்டின் அமைச்சராக இருந்த தெய்வச் சேக்கிழார், அறப்பிறழ்ச்சி வருதற்கான மூலத்தை ஆராய்ந்து கூறுகையில்,
மாநிலம் காவலனாவான் மன்னுயிர் காக்கும் காலை,
தான் அதனிற் கிடையூறு, தன்னால் தன்பரிசனத்தால்
ஊன மிகுபகைத் திறத்தால் கள்வ ரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம்காப் பான் அல்லனோ!
என்றார். (திருநகரச் சிறப்பு 36)
பாடல் கூறும் ஐந்து காரணங்களால் இடையூறுகள் நேரக் கூடும். மன்னன் தானெடுக்கும் தவறான சில முடிவுகளால் அறப்பிறழ்ச்சி நேரலாம், தன்னாலன்றித் தன் ஆட்சியாளர்களாலும் ஊறு நேரிடும் என்ற கருத்து அரசியலின் முதிர்ச்சியான அனுபவ வாசகமாகும்.
இவ்விரண்டுக்கும் மேலான பகை, கள்வர், விலங்கு முதலியவற்றால் வரும் துன்பங்கள் ஆட்சிக்கான அயன்மைக்குரியன. தன்னாலும் தன்பரிசனத்தாலும் என்ற இரண்டும்தான் ஆட்சிச் சக்கரம் சரியானபடி நாள்தோறும் சுழலுதற்குரியதில் ஏற்படும் இடையூறுகள் பற்றியன என்பதால் மன்னனும் ஆட்சியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனச் சேக்கிழார் முன் எடுப்பாகக் கருதிக் கூறியது அரசியல் தேர்ச்சியையும் அவர்தம் முதிர்ச்சிகளையும் காட்டுதற்குரித்தாம் எனலாம். இந்நிலையில் ஆட்சி இயந்திரம் பழுதுபடுமானால் 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என எச்சரிக்கிறார் இளங்கோவடிகள்.
இக்கருத்துக்குச் சரியான எடுத்துக்காட்டாகவே அவர்தாம் எழுதிய சிலப்பதிகாரத்தில் பாண்டியனின் தவறான முடிவும் அரண்மனைச் சிலம்பு திருடப்பட்டதையும், கதையாக உலகறியப் பறைசாற்றினார்.
அப்பறைஒலி முழக்கத்தையே அறம் கூற்றாகும் எனப் பிரகடனப்படுத்தினார் எனலாம்.
இந்தக் கருத்து மன்னராட்சி- மக்களாட்சி என்ற அரசியலின் பொதுமைக்குரியதாகும். அதனால்தான் ஆட்சி என்பது சுகபோகத்துக்குரியதாகக் கருதக் கூடாது என்ற எச்சரிக்கை வாசகமாகவே 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' (186) என மோசிகீரனார் எனும் புலவர் அறம் நிலை நிறுத்த நாடாள்வோர்க்கு உரிய கடமையாகக் கூறினார்.
இந்த அடிப்படையில்தான் ஆட்சி அதிகாரங்களெல்லாம் அறவழிப்பட்டதன்றி மறவழி (தீங்கு) பட்டதன்று என உணரச் செய்யும் விதமாகவே இளங்கோவடிகள் சிலம்பு குறித்த வழக்கில் தடுமாறிய பாண்டியன் தானே தண்டனையைக் 'கெடுக என் ஆயுள்' எனத் தேடிக் கொண்டதை வேறொரு மன்னன் மூலம் (சேரன் செங்குட்டுவன் மூலம்) சிலாகித்துக் கூறும்போது
மன்பதை காக்கும் தன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்
எனத் தம்மால் தம் குடிமக்கள் சிறப்பாகக் காக்கப்பட்டாலும், அதாவது ஒவ்வொரு பொழுதும் அறிவு தூங்காமையாக இருந்து நாட்டைக் காத்தாலும் நடக்கும் தீமைக்கெல்லாம் அரசே காரணம் என மக்கள் குறை கூறுவர் என்பதால், ஆளுமைக்குரிய குடியினில் பிறத்தல் துன்பமல்லது எல்லோராலும் தொழுதற்குரியதாக அமையாது என்பதைச் சொல்லாமல் சொல்வதாய்ப் பாண்டியனின் உரை உள்ளதாக அரசியலின்
அறம்சார் உண்மையை இளங்கோ வழிமொழிந்தது வையத்துக்கே வழிகாட்டும் திருவாசகமன்றோ!
இப்படிச் சங்க இலக்கியந்தொட்டு வழிவழியாக அரசியலில் அறம் காக்கப்படுதலை உணரும் நிலையில், மக்களாட்சி முறையில் கட்சிகளின் செயல்பாடுகள் மிகுந்து விட்டாலும் அறம் காக்கப்பட வேண்டியதின் முகிழ்ப்பைப் பேரறிஞர் அண்ணா, 1967-இல் அரியணை ஏறியபோது, 'கட்சிகள் வரும்- போகும்; ஆனால் ஆட்சி என்பது நிலையானது' என்று கூறியதில் அறப்பிறழ்ச்சியில்லாத ஆட்சி என்ற குறிப்பை ஆட்சியின் நிரந்தர நிலைப்பாட்டால் உறுதிபடக் கூறியது உலகளாவிய அரசியலுக்கும் பொருந்தும்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.