முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

பாரம்பரிய துண்டு போடுதலும் பழக்கமாகி வரும் குதிரை பேரமும்

வியாபாரத்தில் ஆரம்பத்தில் இருந்த 'துண்டு போடுதல்' நடைமுறை பற்றியும் தற்போதைய அரசியல் குதிரை பேரம் பற்றியும்....

Updated On : 11 ஜூன் 2026, 1:07 pm IST
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள்... - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக கால்நடை வியாபாரத்தில் (மாடு, ஆடு வாங்குதல் - விற்பனையில்) "துண்டு போடுதல்"  என்ற பழமையான வணிக மரபு உள்ளது. "துண்டு போடுதல்" என்பது கால்நடை வாங்குபவருடனோ அல்லது தரகருடனோ, அதனை விற்பவர் ஆகிய இருவரும் தமது கைகளை ஒரு துணியால் (பொதுவாக தோள்துண்டு / டவல்) போர்த்தி மூடி, அதன் கீழ் விரல்களைத் தொட்டுப் பிடித்து, எண்ணிக்கையை - மரபுவழியில் அறியப்பட்டுள்ளபடி - சங்கேதமாகத் தெரிவித்துக் கொள்வதாகும். இதன் மூலம் வெளிப்படையாக விலை சொல்லாமல் – சந்தையிலுள்ள மற்றோர் அறியாமல் - ரகசியமாக விலைப் பேச்சு நடைபெறும். இந்த மரபு, விற்பவர் கௌரவம் /கண்ணியம், இருதரப்பு நம்பிக்கை, வியாபார நுணுக்கம் ஆகியவற்றைக் காப்பது என்பனவற்றின் கலவையாகும்.

தமிழக "துண்டு போடுதல்" நடைமுறையில் விலை வெளிப்படையாகச் சொல்லப்படாமல், குறிப்பிட்ட அந்த வியாபாரத்தில் தொடர்புள்ளவர்கள் மட்டுமே - அதாவது ஒருபுறம் வாங்குபவர் அல்லது தரகர், மறுபுறம் விற்பனையாளர் ஆகிய இருவர் மட்டுமே - உண்மையான ஆரம்ப விலையையும் இறுதியாகத் துண்டுமறைப்பிற்குக் கீழ் ‘விரல் மொழி’யால் ஒப்புக்கொள்ளப்பட்ட இறுதி விற்பனை விலையையும் அறிந்திருப்பர். இதனால் வெளிப்புறப் போட்டியாளர்களோ அல்லது பிற வியாபாரிகளோ சொல்லப்பட்ட, வாங்கப்பட்ட விலை விவரங்களை அறிய முடியாது. மேலும், விலைப்பேச்சுத் தொடக்கத்தில், விற்பவர் நிர்ணயித்த விலையைவிட, விரல்பேச்சு முடிவில் குறைவான தொகைக்கு விற்றாலும் அவரது கௌரவம் பங்கப்படாமல் காக்கப்படும்.

தமிழகத்தின் "துண்டு போடுதல்" என்ற நடைமுறைபோலவே சந்தையில் ‘விலை ரகசியம்’ காக்கும் முறைகள் உலகின் வேறு பகுதிகளில் ஆங்காங்குள்ள பண்பாட்டு நிலைகளுக்கேற்பப் பல்வேறு வடிவங்களில் வழக்கத்திலிருந்தது அறியப்பட்டுள்ளது. இருப்பினும் "துண்டு போர்த்தல்" வடிவம் தமிழ்நாட்டின் தனித்துவம், தனிச்சிறப்பு என்பது குறிப்பிட உரியது.

Advertisement

Advertisement

‘விலை ரகசியம்’ காக்கும் மரபுகளுடன் தொடர்புடைய சில, இதோ:

  • அயர்லாந்தில் சில சந்தைகளில், விலைப் பேச்சு – கைபிடித்தல் ('Secret bidding') மூலம் உறுதி செய்யப்படுவதுண்டு. சில இடங்களில் வாங்குபவர்கள் அல்லது விற்பவர்கள் தாங்கள் நிர்ணயித்த அல்லது உத்தேச விலையை சிறு காகிதத் துண்டில் எழுதி மடித்து, இரு விரல்களுக்குள் வைத்து நீட்டி, விற்பவர் அல்லது வாங்குபவர் உள்ளங்கையில் அழுத்தி ரகசியமாகத் தரும் 'மௌன அறிவிப்பு' முறை இருந்தது அறியப்பட்டுள்ளது.

  • அமெரிக்காவில் ‘குதிரை வணிகம்’ பெரும்பாலும் ஏலம் முறையில் நடைபெறும். ஏலக்காரர் (Auctioneer) விலை சொல்லும் ‘ஒருதரம், இருதரம், மூன்றுதரம்’ எனும் (chant) முறையில் வியாபாரம் நடைபெறும். விலை அனைவருக்கும் தெரியுமாறு அறிவிக்கப்படும். விலை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டாலும் குதிரை வணிகம், தந்திரப்பேச்சு, ஏமாற்று முதலியவற்றுக்குப் பெயர் பெற்றதாகும்.

  • சில இடங்களில் 'அமைதியான ஏலம்' (silent auction) முறையில், விலை மறைமுகமாக எழுதப்பட்டு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருந்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  • ஜெர்மனியில் "பசு வியாபாரம்" எனும் நேரடிப் பொருள் தரும் குஹாண்டல் (Kuhhandel) என்ற சொல் உள்ளது. ஆனால், அதன் உருவகப் பொருள் ஆங்கிலத்தின் குதிரை வியாபாரம் (horse-trading) என்பதற்குச் சமமானதே. அதாவது அரசியல் அல்லது வணிகத்தில் நடக்கும் மறைமுகப் பேரங்கள், பரஸ்பர சலுகைகள், பின்னறை ஒப்பந்தங்கள் போன்றவற்றை அந்தச் ஜெர்மானியச் சொல் (குஹாண்டல்) குறிக்கும். 'பசு வியாபார’ விலைப் பேச்சு முடிந்ததும் கைபிடித்தல் (Handschlag) மூலம் விற்பனை / ஒப்பந்தம் உறுதியென்பது வெளிப்படுத்தப்படும்.

  • ஜெர்மனியிலும் சில இடங்களில் 'அமைதியான ஏலம்' (Silent Auction) முறையும் இருந்துள்ளது. இதில் வாங்குபவர்கள் தங்கள் விலையை எழுதித் தருவர். விலை வெளிப்படையாகச் சொல்லப்படாது; மறைமுகமாகவே விலை சமர்ப்பிக்கப்படும்.

  • ஸ்காட்லாந்தில் ‘அதிர்ஷ்டப் பணம்’ (luck penny) என வழங்கப்படும் பழக்கம் உள்ளது. விலை பேசி முடிந்ததும் விலை சொல்லப்படாவிட்டாலும் விற்பவர் வாங்குபவருக்கு ‘அதிர்ஷ்டப் பணம்’ எனும் சிறிய தொகையை வெளிப்படையாகத் திருப்பித் தருவார். இது விற்பனை உறுதி செய்யப்பட்டதற்கான மறைமுக சங்கேதமாகவும் விலையின் அளவிற்கேற்பவும் இருக்குமாம்.

அரசியல் குதிரை பேரம்

மகத்துவ ஜனநாயகத்தின் மங்கள முகத்தைக் கோரமாக்கும் வகையில், "விலை ரகசியம்" என்ற கருத்து, அரசியல் குதிரை பேரம் (Political Horse Trading) எனும் உவமையுடன் எவ்வாறு இணைத்துப் பிரதிபலிக்கத் தொடங்கியது என்பதை ஆராய்வது தற்காலச் சூழல்களில் பொருத்தமானதாகவே இருக்கும்.

18-19 ஆம் நூற்றாண்டுகளில் குதிரைகளை விற்கும் தொழிலில் நடைபெறும் கடுமையான தந்திரம், ஏமாற்று நிறைந்த சந்தைப் பேச்சுவார்த்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ‘குதிரை வியாபாரம்’ (Horse Trading)  என்ற சொல், காலப்போக்கில் அரசியலில் ஓர் இழிவான அர்த்தத்தைப் பெற ஆரம்பித்தது. ‘குதிரை வியாபாரம்’ என்பது மெல்ல மறைந்து, ‘குதிரை பேரம்’ என்ற கோரம்தோன்றிவிட்டது.

பெரும்பாலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்லது தக்கவைப்பதற்காக அல்லது இருக்கும் அரசை வீழ்த்துவதற்காக அறநெறிகளுக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் அடித்தளப்பங்கம் விளைவிக்கும் வகையில் செய்யப்படும் சூழ்ச்சிகளையும் ரகசிய ஒப்பந்தங்களையும் ‘குதிரை பேரம்’ என்ற சொல் குறிப்பதாகியுள்ளது.

மேலும், மசோதாக்கள், தீர்மானங்களுக்கு ஆதரவு வாங்குதல்; உறுப்பினர்களை மாறுபட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்தல்; ஒரு குழுவினரை அல்லது ஒரு பிரிவு உறுப்பினர்களைச் சட்டமன்ற/ நாடாளுமன்ற அவைகளில் நடுநிலை வகிக்க உறுதி செய்தல்;  முக்கிய வாக்கெடுப்புகளின்போது அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய வைக்க ஏற்பாடுகள்; சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய வைத்தல் மூலம் அவையின் நிகர எண்ணிக்கையைக் குறைத்தல்  போன்ற முழுமையான ‘அறம்பிறழ்’ செயல்களை உள்ளடக்கிய இருதரப்பு முயற்சிகளைக் குறிக்கவும் ‘குதிரை பேரம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே, ‘குதிரை பேரம் ’என்ற இருசொற்கூட்டு, குதிரை எனும் விலங்கு விற்பனையைத் தாண்டி, அரசியலில் ஆள்களை (சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களை) வலைவீசிப் பிடிப்பதற்கான உவமையாகியுள்ளது. சந்தர்ப்பவாதம், அரசியல் நிலைத்தன்மையை ஆட்டங்காணச் செய்தல், ஜனநாயக செயல்முறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்தல் ஆகியவற்றின் முடைநாற்றம் குதிரை பேரத்தில் வீசும்.

அரசியல் குதிரை பேரத்தின் முக்கிய அம்சங்களாக இருப்பவை:

-        ஒரு சிறிதும் வெளிப்படைத்தன்மை இல்லாத ‘அடர் ரகசிய’ பேரம் பேசுதல்;

-         சம்பந்தப்பட்ட இருதரப்பும் விலையையோ நிபந்தனைகளையோ தத்தமக்குச் சாதகமாக்க முயற்சிகள் மேற்கொள்வது;

-         ‘வாங்கப்படும் குதிரைகளுக்கான வசதிகள்’ குறித்த நம்பிக்கை தரும் உத்தரவாதங்கள் ஆகியவை.

(நம்பிச் செல்லும் குதிரைகள் நட்டாற்றிலும் விடப்படலாம், காரியம் முடிந்ததும்!)

‘குதிரை பேரம்’ ஒரு நகைமுரண்.

அரசியல் ஆள்பிடிப்புக்குக் ‘குதிரை பேரம்’ எனப் பெயர் புழக்கத்தில் வந்துள்ளதை, அடிப்படையில் ஒரு நகை முரண் என்றே கூற வேண்டும்! ஒருவேளை மனிதன் ‘சமூக விலங்கு’ (Social animal) என்பதால் மனிதனை விலங்குடன் இணைத்து உவமைப்படுத்துதல் நியாயப்படுத்தப்பட உரியதுதானோ?

தாம் இதுவரை கொண்டிருந்த கொள்கைகளை; சார்ந்திருந்த கட்சி மற்றும் சக தொண்டர்களிடமிருந்த பலகால உறவை; தமக்கு தம் கட்சிக்கு / கூட்டணிக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை, மக்களாட்சியின் மாண்பினை – ஏன், அறம்சார்ந்த அத்தனையையுமே - பணம், பதவி, அதிகாரம், மற்ற பிற வசதிகளுக்காக - சரேலென்று ஒரு கணத்தில் உதறித்தள்ளி, குதிரைப் பாய்ச்சலாக வேறு ‘கரை’க்கு தாவுதலால்தானோ என்னவோ, அவ்வாறான மனிதர்களை விலங்குடன் (குதிரையுடன்) இணைத்து ‘குதிரை பேரம்’ என்ற இழிசொற்பொருள் உருவாகி வழக்கமாகியிருக்கலாம் என எண்ணவும் வழியுள்ளது (இவ்வகைப் பேரங்களில் வாங்கப்படுவன உண்மையில் குதிரைகள்தானா? அல்லது கோவேறு கழுதைகளா? அல்லது பண்டு, திருவாதவூரராகிய மாணிக்கவாசகருக்கு உதவச் சிவபெருமான் மாற்றியனுப்பிய காட்டுநரிகளா? எனும் ஐயம் எழுவதுங்கூட நியாயமானதே!). 

அரசியல் கட்சிகளின் சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பதவிகள், ஆதரவு, வாக்குகள் ஆகியவற்றை மறைமுகமாகப் பரிமாறிக் கொள்வது. வெளிப்படையாகச் சொல்லப்படாமல், பின்னறைப் (Back-room) பேச்சுவார்த்தைகளில் விலை (அதாவது பணம், பதவி, அதிகாரம் பிற வசதி வாய்ப்புகள்) தீர்மானிக்கப்படுகின்றன. இங்கு "விலை" என்பது பணம் மட்டுமல்ல. அரசியல் குதிரை பேரம், பாரம்பரிய தமிழகக் கால்நடை விற்பனையில் (துண்டு போடுதல்) போல - ஆனால் இழிநிலையால் மாறுபட்ட - ஒரு மறைமுக விலைப் பேச்சுமுறைதான்.

இந்திய அரசியலில் குதிரை பேரம்

இந்திய அரசியலில் குதிரை பேரங்கள் என்பது சமீபத்திய நிகழ்வுகளல்ல. விடுதலையடைந்த இந்தியாவின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே நாட்டின் அரசியல் கலாசாரத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக குதிரை பேரம் கூடவே பயணித்து வந்துள்ளது. குறிப்பாகக் கூட்டணி அரசாங்கங்கள் மற்றும் தொங்கு நாடாளுமன்றம் / சட்டமன்றங்கள் அமையும்போது குதிரை பேரங்களின் கோர வெளிப்பாடுகள் வெகுபட்டவர்த்தனமாகவும் மிகவும் வெட்கமற்றதாகவும் வளர்ந்துள்ளன.

'பெரும் பிளவின் ஆண்டு' (Year of Great Splits) என்று இந்திய அரசியலில் குறிக்கப்படும் 1967-ஆம் ஆண்டில் அதுவரை இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சி, முதன்முறையாகக் குறிப்பிடத்தக்க கட்சித் தாவல்களை எதிர்கொண்டது. தலைமை மீது வளர்ந்து வந்த உள்கட்சி அதிருப்தி, எதிர்ப்பு மற்றும் பூசல்களால் அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் பலர் பிரிந்து சென்று தனித்தனிக் குழுக்களை உருவாக்கினர். சித்தாந்த உறுதிப்பாட்டைக் காட்டிலும் அரசியல் சந்தர்ப்பவாதமே அரசியலை வடிவமைக்கத் தொடங்கிய ஒரு இந்திய சகாப்தத்தின் தொடக்கத்தை அப்போதைய நிகழ்வுகள் குறித்தன.

பின்னர், 1989 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு அரசியல் களம் பெருமளவில் மாற்றங்கண்டது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி அரசாங்கங்களின் சகாப்தத்திற்கு அக்கால நிகழ்வுகள் வழிவகுத்தன. சிறிய பிராந்தியக் கட்சிகள் தேசிய அளவில் அதிகாரத்தைப் பெற்றன. குதிரை பேரங்களே அதிமுக்கிய உத்திகளாகின. அக்காலத்தில் பெரும்பாலும் நிலையற்ற அரசாங்கங்களே அமைந்தன.

அண்மைக் கால இந்தியாவில் குறிப்பிடத்தக்க குதிரை பேர நிகழ்வுகள்

·  கோவாவில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சட்டமன்றம் அமைந்தது. இதில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரசாங்கத்தை அமைக்கும் நிலைக்கருகே இருந்தபோதிலும், குதிரை வேகத்தில் செயல்படத் தவறியது. ஆனால், கூட்டணிக் கட்சிகளைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக லஞ்சமாகப் பணம், பதவிகள் தாரளமாக வழங்கப்பட்ட - சாதுர்யமான குதிரை பேரத்தால் - குறைவான இடங்களைக் கொண்டிருந்த பாஜக, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் அவியல் கூட்டணி ஒன்றைத் திரட்டி ஆட்சியலமர்ந்தது.

·    குதிரை பேரத்தின் பரபரப்பான எடுத்துக்காட்டுகளில் மற்றொன்று கர்நாடகத்தில் 2019-ல் நிகழ்ந்தது. 2018-ல் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாததால், தொங்கு சட்டமன்றமே அமைந்தது. அகண்ட சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், காங்கிரஸ் - (மதச்சார்பற்ற) ஜனதா தளம் கட்சி இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தன.

இருப்பினும், பாஜக திட்டமிட்டு அரங்கேற்றிய ஏற்பாட்டின்படி கணிசமான எண்ணிக்கையில் காங்கிரஸ் மற்றும் (மதச்சார்பற்ற) ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் ஓராண்டுக்குள்ளேயே கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது. லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகளை அறவே புறந்தள்ளி, மக்களது கட்டளையை மனக்கவலையேதுமின்றி மீறி, பாஜக அரசாங்கத்தை அமைத்தது.

·      மார்ச் 2020-ல், மத்தியப் பிரதேசமும் இதேபோன்ற ஒரு அரசியல் நாடகத்தைக் கண்டது. காங்கிரஸிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா, 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவுக்குப் பாய்ந்ததால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்த மாபெரும் கட்சித் தாவல் மாநிலத்தில் மக்கள் வாக்கைப் பெறாத பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வழியமைத்தது. கட்சி மாறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பெருநிதிக் கொடைகள் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளுடன், இந்த முழு நிகழ்வும் குதிரை பேரத்திற்கு மற்றோர் இந்திய எடுத்துக்காட்டாகியது.

·      மகாராஷ்டிரத்தில் சிவசேனைக் கட்சியைச் சிதைத்த ஷிண்டேயின் குதிரை பேர முயற்சிகளுக்கு பாஜக துணை நின்றது.

·     அண்மையில் நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. 108 இடங்களுடன் புதிய கட்சியான த.வெ.க. தனிப்பெருங்கட்சியானது.

தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ், தேர்தல் முடிவு வந்தவுடனேயே அணிமாறி த.வெ.க.வில் கூட்டுக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து சில நாள்கள் நீடித்த இழுபறிக்குப் பின் தி.மு.க. கூட்டணியிலிருந்த மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இறுதியாக வி.சி.க. ஆகிய கட்சிகளும் தவெக அரசமைக்க ஆதரவளித்தன.

இதற்கிடையில் அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற மன்னார்குடி அமமுக உறுப்பினரது ஆதரவு பெறப்பட்ட விதம் தமிழகத்தில் குதிரை பேரம் என்ற சொல் மிகப் பரவலான உச்சரிப்பைப் பெறச் செய்தது.

மேலும், அஇஅதிமுகவில் ஒரு பிரிவு (25 பேர்)  சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆட்சிக்கு ஆதரவாக நின்று, அடுத்தடுத்த நாள்களில் கரைந்து காணாமல் போயுள்ளது. ஆனாலும், அப்பிரிவிலிருந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவு வந்து 20 நாள்களுக்குள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்த மறுகணமே ஆளுங்கட்சியில் ஒட்டிக்கொண்டு தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளனர் (அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை உண்டாம்! பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்). ஆதரவளித்துள்ள அணிகளுக்கு ‘புதிய சோபாக்கள்’ சென்றடைந்துள்ளன என்பதாக செய்திகள் எங்கும் எதிரொலிக்கிறது. குதிரை பேரத்தின் ஒரு விநோத மாற்றத்தை மாநிலம் தற்போது கண்டு வருகிறது.  

தேர்தல் செயல்முறையையே கேலிக்கூத்தாக்குகிற இத்தகைய அரசியல் நகர்வுகளில் -ஆளும் வர்க்கத்தினரால் ஆட்டுவிக்கப்படும் ஆட்டத்தில் - வாக்காளர்கள் வெறும் பார்வையாளர்களாகச் சுருக்கப்பட்டு நிற்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கட்சி சித்தாந்தங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள், மக்களுக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் தங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்ளும்போது அது “மக்களே உங்கள் வாக்குகளுக்கு எந்த மதிப்புமில்லை” என்ற உதாசீனச் செய்தியை அவர்கள் முகத்தில் வீசுகிறது.

குதிரை பேரத்தின் தீக்குணங்கள்

இறையாண்மை எனும் கோட்பாடு, ஒரு தேசம், அதன் மக்களின் விருப்பத்தை உண்மையாகப் பிரதிபலிக்கும் ஒரு அரசியல் அமைப்பால் ஆளப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால், அரசியல் (குதிரை) பேரங்கள் நிகழும்போது, ​​இறையாண்மைக் கோட்பாடு பெருநலிவடைகிறது; கொள்கைகள் சகட்டுமேனிக்குச் சமரசம் செய்யப்படுகின்றன; அரசியல் ஒரு கீழ்நிலைப் பேரமாகவே மாறிவிடுகிறது; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் ஆணையை (Peoples’ Mandate) பாதுகாப்பவர்களாக இருப்பதற்குப் பதிலாக அதிகாரப் போட்டிகளின் பகடைக் காய்களாக உருள்கின்றனர்.

அரசியல் கட்சிகள் நிகழ்த்தும் குதிரை பேரங்களின் மிக ஆபத்தான விளைவுகளில் ஒன்று, ஜனநாயக நெறிகள் அப்பட்டமாக மீறப்படுவதாகும். ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பணம், பதவிகள் அல்லது பிற வசதிவாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டுத் தங்கள் கட்சிகளிலிருந்து வேறிடந்தாவும்போது, ​​ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தின் சாராம்சமே அழிக்கப்படுகிறது. தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் நம்பிக்கையை எந்த அச்சமும் குற்றவுணர்வுமில்லாமல் மீறுகின்றன அரசியல் குதிரைகள்! தேர்தல் மூலம் மக்களிட்ட ஆணையை நேரடியாகச் சீர்குலைக்கும் ஒரு அரசியல் துரோகச் செயலே இடம்விட்டு இடந்தாவலென்பது.

காரணமற்ற கட்சித் தாவல்கள், அரசியல் முறைகேடுகள், திரைமறைவு பேரங்கள் ஆகியவை வாக்காளர்களிடையே பரவலான ஏமாற்ற உணர்வுகள் வளர வழிவகுத்துள்ளன. அரசியல் கட்சிள், அரசியல்வாதிகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்புமே பலவீனப்படுத்தப்படுகிறது. கொள்கைகளை விட்டுக்கொடுத்து, நெறிமுறையற்ற வழிகளை மேற்கொள்வது, எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளின் மனப்போக்கு ஆகியன குதிரை பேரங்கள் இந்திய அரசியலின் ஒரு அதிமுக்கிய அங்கமாகத் தொடர்வதை உறுதி செய்கின்றன.

இந்திய அரசியலில் குதிரை பேரங்கள் தொடர்வதற்கு, அரசியல்வாதிகளின் ‘நாணிலா’ அதிகார ஆசை, கட்சித் தாவல் தடைச் சட்டம் உண்மையில் வலுவில்லாதிருப்பது, அரசியலில் பணத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது உள்ளிட்ட பல காரணங்களை அடுக்கலாம்.

ஆனால், அழியாத உண்மை யாதெனில், அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ‘அறம்’ கசக்கிறது என்பதுதான். அதனால்தான் மெலிதான தமிழ் மரபுத் ‘துண்டு போர்த்தலை’க் கடந்து, தடித்த ரகசியம் போர்த்த குதிரை பேரங்கள் நாளும் நிகழ்கின்றன நம்நாட்டில், நாணம் சிறிதுமில்லாமல்.

 [கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

summary

How did horse-trading emerge in politics from business?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.