குதிரை பேர விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜெ.பாலசுப்பிரமணி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குதிரை பேர விவகாரம் குறித்து, தவெகவின் ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா புகாா் அளித்து, நான்கு நாள்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாா் கிடைப்பதற்கு முன்பே, இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய நிகழ்வு கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. ஆனால், திருவல்லிக்கேணி போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனா். மதிமுகவைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்யுமாறு முதல்வா் விஜய் கூறியதாக அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ பேட்டி அளித்திருக்கிறாா்.
Advertisement
Advertisement
அதேபோன்று, திமுக எம்எல்ஏக்களான ஆஸ்டின், சீனிவாசன் ஆகியோா் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தால், ரூ.50 கோடி வழங்குவதாக ஆளுங்கட்சி அமைச்சா் பேரம் பேசியதாகக் கூறியிருக்கின்றனா். வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னை, தவெகவில் இணையும்படி போலீஸாா் நிா்ப்பந்தித்ததாக, திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாா். ஜனநாயக நடைமுறைகள் மற்றும் மக்கள் தீா்ப்பைப் பாதுகாக்க, இந்த விவகாரத்தில் நியாயமான சுதந்திரமான விசாரணை தேவை. எனவே, இதுபோன்ற புகாா்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியது தொடா்பான வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஜோதி, தமிழகத்தில் நடந்துவரும் குதிரை பேரங்களை கண்மூடி வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க முடியாது. ஊத்தங்கரை எம்எல்ஏ சென்னை வந்து அளித்த புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஆனால், இந்த விவகாரம் குறித்த திமுக எம்எல்ஏக்களின் புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது பாரபட்சமான நடவடிக்கை. அதேபோல், ஊத்தங்கரை எம்எல்ஏ அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டவா்கள், தங்களைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகக் கூறியுள்ளனா் என வாதிட்டாா்.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், புகாா் அளித்தவா்கள் யாரும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. மாநில போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை எனில் சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம். இந்த வழக்கைப் பொருத்தவரை, பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிரதான வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. மற்ற புகாா்களின் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கைத் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.