தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது பற்றி...
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்தது.
திருப்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜெ. பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புகார் அளித்து நான்கு நாள்களுக்கு பின் வழக்குப்பதிவு செய்ததும், புகார் கிடைக்கப் பெறும் முன்பே ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதும், பேரம் பேசியதாக கூறப்படும் நிகழ்வு ஊத்தங்கரையில் நடந்த போது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறை உள்ள போது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் அந்த மனுவில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தது; மதிமுக-வைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யக் கூறும்படி முதல்வர் விஜய் தெரிவித்ததாக வைகோ பேட்டியளித்தது; திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சீனிவாசன் ஆகியோர், தங்களை ராஜினாமா செய்யும்படியும், பதிலுக்கு அமைச்சர் பதவியும், 50 கோடி ரூபாயும் வழங்குவதாக ஆளுங்கட்சி அமைச்சரே பேரம் பேசியதாக தெரிவித்தது; வழக்கில் கைது செய்த தன்னை தவெக-வில் இணையும் படி போலீசார் நிர்பந்தித்ததாக திமுக எம்.எல். ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தது போன்ற புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
ஜனநாயக நடைமுறையையும், மக்கள் தீர்ப்பையும் பாதுகாக்க, இந்த விவகாரத்தில் நியாயமான, சுதந்திரமான விசாரணை தேவை என்பதால், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், தவெக எம் எல்.ஏ.விடம் பேரம் பேசியது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஜோதி, தமிழகத்தில் நடந்து வரும் குதிரை பேரங்களை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
ஊத்தங்கரையில் இருந்து வந்து சென்னை வந்து எம்.எல்.ஏ. அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தமான புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் பாரபட்சமான நடவடிக்கை. ஊத்தங்கரை எம்.எல்.ஏ. புகாரில் கைது செய்யப்பட்டவர்கள், தங்களிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகக் கூறியுள்ளனர் என வாதிட்டார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், புகார் அளித்தவர்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. மாநில போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றால் சிபிஐ-க்கு மாற்றலாம். இந்த வழக்கில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதால், சிபிஐ-க்கு மாற்றக்ப்கூடாது என வாதிட்டார்.
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், மற்ற புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாததால் விசாரணையை மாற்ற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பி, மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
Horse trading talk to TVK MLA: Verdict reserved in case seeking transfer to CBI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.