சட்டம் - ஒழுங்கு, குதிரை பேரம், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு... ஆளுநரிடம் பாஜக புகார்!
ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளது பற்றி...
தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளார். பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக நிர்வாகி திருப்பதி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை மற்றும் குதிரை பேரம், அமைச்சர் விஸ்வநாதன் விவகாரம் ஆகியவை குறித்து ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளனர். அமைச்சர்களின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், பெண் குழந்தைகளிடம் நடந்துகொண்ட விதம் குறித்தும், அமைச்சரவையில் இடம்பெறாத விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளது பற்றியும் ஆளுநரிடம் புகார் மனு அளித்தோம்.
புதிய அரசு பொறுப்பேற்று 54 நாள்களில் 151 பாலியல் சம்பவங்கள், 85 படுகொலைகள், 80 க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. முந்தைய திமுக அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முதல்வர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.
தவெக கட்சியினரே தவறுகளில் ஈடுபடுகின்றனர். என்னிடம் பட்டியல் உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. குற்றங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை கொடுங்கள். குற்றங்களுக்கு நடவடிக்கை இல்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு.
அமைச்சர்கள் பலரின் மீதும் குற்றச்சாட்டும் உள்ளது. இந்த அரசில் குதிரை பேரம் நடக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆய்வு செய்ய ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. சட்டத்துறை அமைச்சருக்கே சட்டம் தெரியவில்லை" என்று கூறினார்.
மதுரையில் வைகை ஆற்றில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதற்கு தவெக அரசும் அமைச்சர்களும் நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
BJP Leader nainar nagendran complaint to tn Governor on tvk govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.