முகப்பு
தமிழ்மணி

பெண் மொழியின் நோக்கங்கள்!

மனம் என்பது மொழிக் கிடங்கு. ஒவ்வொருவர் மனத்திலும் அவரவர் அனுபவித்த உணர்வுகள், விருப்பவிழைவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஆசைகள் என்றனைத்தும் உறைந்து கிடக்கின்றன.

பகிர்:

மனம் என்பது மொழிக் கிடங்கு. ஒவ்வொருவர் மனத்திலும் அவரவர் அனுபவித்த உணர்வுகள், விருப்பவிழைவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஆசைகள் என்றனைத்தும் உறைந்து கிடக்கின்றன. இவை பேசும்போது அனுபவ மொழிகளாக வெளிப்படுகின்றன. வாழ்வியல் அனுபவத்தில் ஆணின் அனுபவம் வேறு; பெண்ணின் அனுபவம் வேறு. இத்தகைய அனுபவ ஊடாட்டங்களுக்கு ஏற்ப, ஆணின் மொழியும் பேச்சும், பெண்ணின் மொழியும் பேச்சும் வேறுபடுகின்றன.

இங்குதான் பெண்ணியவாதிகள் பெண் பேச்சு, பெண் எழுத்து, பெண் மொழி என்பதைக் கையில் எடுக்கிறார்கள். தந்தைவழிச் சமுதாயத் தோற்றத்தில் ஆணின் தலைமைத்துவ அதிகாரம் மொழியைக் கட்டமைத்தது. ஆண், தான் வாழும் அல்லது தான் விரும்பும் சமுதாயத் தேவைகளுக்கு ஏற்ப பெண்ணின் பண்புகளையும், ஆணின் பண்புகளையும், வரையறுத்தான்.

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல்

Advertisement

Advertisement

நிச்சமும் பெண்பாற் உரிய என்ப'

(கள. 1045)

என்று பெண்ணின் பண்புகளையும்,

பெருமையும் உரனும் ஆடுஉமேன',

(கள. 1044)

என்று ஆணின் பண்புகளையும் வரையறுத்தான். இப்பாலினப் பண்புகள் பிறப்பால் அமைந்தவை அன்று: பெண், ஆண் என்ற பாலின வேறுபாடு மட்டும் பிறப்பால் அமைந்தவை. மற்றைய உணர்வுகளான அச்சம், வீரம், மடம், அறிவு என்பவை எல்லாம் சமூகத்தால் வரையறுக்கப்பட்டவை. ஆணின் எதிர்பார்ப்

புணர்வு இலக்கிய மொழியாக பெண் என்ற வரையறைகளைக் கட்டமைத்தது. இப்பண்புகள், மொழிவழி இலக்கியங்களில் புகுத்தப்பட்டன.

பிறப்பிலிருந்தே வந்தது போல பேசப்பட்டன. நனவிலிமனப் பதிவுகளாகவும் வளர்த்தெடுக்கப்பட்டன. ஆண்பிள்ளையானாலும் சாண்பிள்ளை; பெண் சிரிச்சா போச்சு என்றெல்லாம் போதிக்கப்பட்டது. தொல்காப்பியம் களவுக்காலச்சூழலில் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலைக்களன்களைச் சொல்லும் போது,

சொல்லெதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்

அல்ல கூற்றுவழி அவள் வயினான

(கள.1056)

தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்

எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை

(கள.1064)

என்ற நூற்பாக்களின் வழி களவுக்கால உணர்வுச் செயல்பாட்டு நிலைகளில் குறிப்

பாகத்தான், பெண், தன் உள்மன உணர்வுகளைப் புலப்படுத்த வேண்டும்: தலைவன் சொல்லுக்கு எதிர்மொழிதல் கூடாது என்று அவள் பேசும் மொழிச்சூழல்கூட, தந்தை வழிச் சமுதாயம் நினைக்கும் நினைத்த சமூக வரையறைக்குள் ஒடுக்கப்பட்டுள்ளது.

அவள் உணரும் விருப்ப விழைவுகளைக் கூடத் தன் தலைவனிடம் வாய்விட்டு வெளிப்படையாகச் சொல்லக் கூடாது என்று ஒரு வட்டத்தில் நிறுத்தியது. இதையெல்லாம் மீறித்தான் ஒளவையாரும், வெள்ளிவீதியாரும் சங்க இலக்கியத்தில் பேசி இருக்கிறார்கள்.

இந்த இடத்தைத்தான் பெண்ணியவாதிகள் முன்னெடுத்து மொழிகிறார்கள். பிறப்பால் வந்தவை போன்று தம்மீது சுமத்தப்பட்ட கற்பிதங்களை எடுத்து மொழிய வேண்டும். உலகெங்கும் வரலாற்றிலும் பெண்கள் பற்றிய முந்தைய வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. பெண் தனக்கே உரிய வரலாற்றுப் படிமங்களை மீட்டெடுக்க வேண்டும்; இத்தகைய புரிதலுக்குப் புதிய வரலாற்றை உருவாக்க வேண்டும்; அவளது எழுத்தில் படைக்க வேண்டும் என்ற கருத்துகளை விவரித்தனர்.

பெண் அடக்கப்பட்டு இருக்கிறாள், ஒடுக்கப்பட்டு இருக்கிறாள் என்று மீண்டும் மீண்டும் ஆணின் புலம்பலாக, அதாவது ஆண் சார்ந்த பெண்மொழியாக' எழுதாது, உனக்கென ஒரு மொழியை உருவாக்கு. அது அனுபவ மொழியாக, உள்ளதை, உணர்ந்ததை, வீரியமாக வெளிப்படுத்தும் மொழியாக இருக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் பெண் மொழியை உருவாக்குகிறார்கள்; பெண்மொழி வெளிப்பாட்டில் உடல்மொழி அரசியலும் உண்டு. பெண்ணுடலை வர்ணிப்பது இங்கு நோக்கமன்று.

பெண் மொழி என்பது அவளது மனத்தின் மொழி. பெண் தன் ஆழ்மன உள இயங்கியலை, தன் சுய அடையாளத் தேடல்களை வெளிப்படுத்துவது. நடைமுறை வாழ்க்கையை, மனத்தின் வலிகளை, உடம்பின் அனுபவ அதிர்வுகளை உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்துவது பெண் மொழி!

பெண் மொழியின் இயல்பை உணர்த்தியவர்களுள் லூசி இரிகரே, ஹெலன் சிக்ஸஸ், ஜுலியா கிறிஸ்துவா, ஜூலியட் மிச்செல் போன்ற பிரெஞ்சு பெண்ணியத் திறனாய்வாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் ஆணாதிக்க மொழியிலிருந்து விடுபட்டு, பெண் தனக்கேயுரிய கவித்துவ மொழியை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்.

மொழி' என்பது உற்பத்திச் சுரங்கம், அமுதசுரபி; இந்தச் சுரங்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தனது நனவிலி மன அனுபவங்களை, சிந்தனைத் தெறிப்புகளைத் தங்களது படைப்பு

களில் பெண்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பது பெண் மொழியின் அடிப்படை நோக்கங்களுள் ஒன்றாக அமையும்.

மெய்ப்பாடு' என்பது மனம் உணரும் தீவிர உணர்வுகளை, உடல்களின் வழி வெளிப்படுத்தும் மெüனமொழியே. அதாவது மெய்யின்கண் தோன்றுவது. பெண்ணும் தன் உள்மன அனுபவங்களை, ஆழ்மன விருப்ப விழைவுகளை, வெறுப்புகளை மனத்தின் வலிகளை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை உள்ளதை உள்ளபடி தமது எழுத்துகளில் வெளிப்படுத்துவது உடல்மொழி.

பெண் மொழியானது உலகப் பொதுமைப் பார்வை கொண்டது. விரிந்த தளங்களை நோக்கிப் பயணம் செய்வது. பெண் தன் படைப்பில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு பேச்சும், எழுத்தும், உணர்த்தும் உணர்வுகளும், அனுபவங்களும் அவளுக்கானது மட்டுமன்று; அனைத்துப் பெண்களுக்கும் உரிய உலகப் பொதுமைத்தனம் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.