முகப்பு
தமிழ்மணி

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர்முதலி'களாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

Updated On : 28 ஜூன் 2026, 5:53 pm IST
பகிர்:

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர்முதலி'களாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர். ஏனைய ஆழ்வார்களுக்கு முந்தித் தோன்றிய கால முதன்மையாலும் திவ்வியப்பிரபந்தங்களை முதலிற்பாடி அவர்களுக்கு வழிகாட்டிய கருத்து முதன்மையினாலும் முதலாழ்வார்கள் என்னும் பெயர் ஏற்பட்டது இவர்களுக்கு.

இம்மூவரையும் 'நற்றமிழர்' என்றே கொண்டாடுகிறது ஆறாயிரப்படி குருபரம்பரை. கவிஞானியராகிய இம்மூவரின் திருவந்தாதிகளும் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்னும் பெயரில் நாதமுனிகள் தொகுத்த நாலாயிரத்தில், இயற்பா ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன.

இவை மூன்றும் தனித்தனி நூறு பாசுரங்கள் கொண்டவை. 'நாரணற்கு ஏற்றிய ஞானச் சுடர் விளக்கு'களாய் போற்றப் பெறும் இப்பனுவல்கள் சமயமரபிலும் தமிழ் இலக்கியப் பரப்பிலும் ஒருசேர ஒளிவீசுகிற சிறப்புமிக்கவை.

Advertisement

Advertisement

இம்மூவருள் ஒருவரான பூதத்தாழ்வார் தம்முடைய இரண்டாம் திருவந்தாதியில் 74-ஆம் பாசுரத்தில்,

யானே தவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்

யானே தவம்உடையேன் எம்பெருமான்! யானே

இருந்தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்

பெருந்தமிழன் நல்லேன் பெரிது என்று பாடுகிறார்.

தம்முடைய வாக்கு இறைவன் புகழ் பாடவே பயன்பட்டதனால், 'யானே தவம் செய்தேன்' என்றும் 'யானே தவம் உடையேன்' என்றும் எக்களிப்புக் கொள்கிறார் ஆழ்வார். 'சிறந்த தமிழ்மொழியினாலாகிய நல்ல தமிழ்மாலைகளை உன்னுடைய இணையடிகளுக்கே சூட்டினேன்; ஆதலின் பெருந்தமிழனும் நானே; உனக்குப் பெரிதும் நல்லனாயிருப்பவனும் நானே' என்கிறார்.

இறைவன் திருவடிகளுக்குத் தமிழ்மாலை சூட்டியதையே இங்குத் தவமும் தவத்தின் பயனுமாகக் குறிக்கிறார் அவர். ஒரு பிறப்பிற் செய்த தவத்தின் பயனன்று, ஏழ்பிறப்பிலும் ஒருபொழுதும் வீணாகாமல் எப்பொழுதும் ஈட்டிய தவத்தின் பயன் இது. ஆதலின், தாம் பெற்ற நன்மை பெரிது என்பதைத்தான், 'நல்லேன் பெரிது' என்பதில் உணர்த்துகிறார் அவர். இவ்விடத்தில் 'நன்று பெரிதாகும்' என்னும் தொல்காப்பிய உரியியல் நூற்பா (826) நினைத்தற்குரியது.

பூதத்தாழ்வார் இங்கே ஒரு படைப்பாளிக்குரிய கர்வத்துடன் தம்மைப் 'பெருந்தமிழன்' என்றும் தம்முடைய படைப்பை, 'இருந்தமிழ் நன்மாலை' என்றும் குறிப்பிடக் காண்கிறோம். பெருமிதத்தின் அடிப்படையிலான பேச்சு இது.

கல்வியடியாகப் பெருமிதம் (தொல். நூ.123) தோன்றும் அன்றோ?

இதையடுத்து, 'பெருகுமத வேழம்' என்னும் பாசுரத்தில் வேங்கடமலையில் நிகழும் இயற்கைக் காட்சி ஒன்றைக்காட்டி இறையருளை விளக்க முற்படுகிறார் பூதத்தாழ்வார்.

பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்நின்று

இருகண் இளமூங்கில் வாங்கி அருகிருந்த

தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்

வான் கலந்த வண்ணன் வரை (75)

மதயானை ஒன்று தன் பெண் யானையின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, இரண்டே கண் வளர்ந்த முற்றாத இளமூங்கிலை வளைத்து எடுத்து, அதைத் தேனிலே தோய்த்து, தன்

துதிக்கையிலே தாங்கி, 'இந்தா பிடி' என்று தன் பெண் யானையிடம் நீட்டுகிறதாம்.

இத்தகைய காட்சிக்கு இடமான கார்மேகத்துடன் ஒத்த நிறமுடைய பெருமான் உறையும் மலை இது வன்றோ? என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.

இன்கவிக்கு உதாரணமாக ஈட்டுரைகாரர் நம்பிள்ளை (7-9-6) எடுத்துக் காட்டும் பாசுரம் இது.

'ஆழ்வாரே! நீர் பெருந்தமிழராயின் ஒரு கவிசொல்லும் பார்ப்போம்' என்றானாம் திருவேங்கடத்து இறைவன். அந்நிலையில் ஆழ்வார் இப்பாசுரத்தை அருளிச் செய்ததாகக் குறிப்பிடுவர் நம்பிள்ளை.

காலத்தால் முந்திய முதலாழ்வார்கள் சங்கப் புலவர்களைப் போலவே இயற்கையெழிலைத் துய்த்து அதன் இனிமையை எடுத்துரைக்க வல்லவர்கள்.

இது போன்றதொரு இயற்கைப் புனைவினை அகநானூற்றுப் பாடலொன்றில் பார்க்கலாம்; பாடியவர் காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் என்னும் புலவர்.

ஈன்று அணிமை கடந்த தன் பெண்யானையினுடைய பசியையும் கன்றினுடைய பசியையும் தீர்ப்பதற்காகப் பசிய கண்ணினையுடைய ஆண் யானையானது முற்றா மூங்கிலைக் கொண்டுவந்து உண்ணும்படிச் செய்கிறதாம்.

திரையனுடைய வேங்கட மலையில் நிகழும் காட்சியாக இதைக் காட்டுகிறார் அவர்.

ஈன்றுநாள் உலந்த மெல்நடை மடப்படி

கன்று பசி களைஇய, பைங்கண் யானை

முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்

வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை

(85: 6 - 9)

என்பன பாடல் அடிகள்.

இந்தக் காட்சியில் சிறிய மாற்றம் செய்திருக்கிறார் ஆழ்வார். கன்றினை நீக்கிக் களிறு, பெண் யானை ஆகிய இரண்டினை மட்டுமே காட்டுகிறார். அகநானூறு காட்டும் 'முற்றா மூங்கில்' இங்கு, 'இருகண் இளமூங்கில்' ஆகிறது. அங்கு வெறிதே மூங்கிலாய்ச் சொன்னது, இங்குத் தேன்கலந்த மூங்கிலாய்ச் சிறப்புப் பெறுகிறது. 'வென்வேல் திரைய'னுக்குரியதாக அகநானூறு காட்டும் 'வேங்கடநெடுவரை' ஆழ்வாரின் 'வான் கலந்த வண்ணன் வரை'யாகக் காட்சி தருகிறது.

இப்படிச் சங்க இலக்கியத்தடம் பற்றி நடக்கும் ஆழ்வார் பாசுரம், அப்பாடலைப் போலவே உள்ளுறை பொருளும் உணர்த்தி நிற்கிறது. பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறும் முறையில் அமைந்தது அகநானூற்றுப் பாடல்.

பைங்கண் யானை தன் பெண் யானைக்கும் கன்றுக்கும் உணவளிப்பதாகவுள்ள இயற்கை வருணனை பொருள் தேடச் சென்ற தலைவன் விரைவில் திரும்பி வந்து, தன் தலைவியை மகிழ்விப்பான் என்பதை உணர்த்துகிறது.

இவ்வாறே ஆழ்வார் பாசுரத்திலும் குறிப்பால் புலப்படும் கருத்தும் இங்கு அறியத்தக்கது.

'ஆண் யானை பெண் யானைக்கு விரும்பியது கொடுத்துக் காக்கும் இடமான திருவேங்கடமலை திருமாலுக்குரியது' என்னும் கருத்தானது, 'அங்குப் பிராட்டியோடு உறையும் பெருமான் நம்மையும் அன்பு கொண்டு காப்பான்' என்பதே ஆகும்.

இவ்வாறு சங்க இலக்கியத்தடம் பற்றி நடக்கும் சிறப்பைக் கருதியே ஏனைய கவிகள் எல்லாம் இருக்க இதை வைணவ உரையாசிரியர்கள் இன்கவிக்கு எடுத்துக்காட்டிச் சிறப்பித்தனர் எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments