முகப்பு
தமிழ்மணி

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!

சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.

பகிர்:

சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம். இந்த நூலின் ஒரு பாடலை கீழ்க்கண்ட பாடல் வழி சுவைப்போம்.

அன்பின் ஐந்திணை எனச் சிறப்பிக்கப் பெறும் அகத்திணை இலக்கியத்தில் தோழி என்னும் மாந்தர் பெறும் இடம் மிகவும் இன்றியமையாதது; பெரும் பொறுப்பு வாய்ந்தது. ஐந்திணை இலக்கியத்துத் தோழி என்னும் ஆளைப் படைத்த பயன் என்ன? பால் வயத்தால் தாமே கண்டு ஒருவருக்கொருவர் அன்பு பூண்ட களவுக் காதலர்கள் கற்பாக வேண்டும். வெளிப்

படையாக மணந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதே அகத்திணையின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற வருபவளே தோழி. இதனால், தோழி கற்பொழுக்கத்திற் காட்டிலும் களவொழுக்கத்தில் இன்றியமையாதவள் என்பது விளங்கும்.

Advertisement

தோழியின் மதிநுட்பத்தையும் சொல்லாற்றலையும் நன்கு புலப்படுத்தும் பாடலொன்று குறிஞ்சிக் கலியில் உள்ளது. இதில் வரும் தோழி தலைவியை நட்பாக்கி வைக்க வேண்டும்' என்ற தலைவனுடைய வேண்டுகோளை ஏற்கிறாள். அவன் தன்னிடம் கூறியவற்றையும், அந்தச் சொற்

களைத் தன்னில் தாங்கிக் கொள்ள இயலாத தன்மையையும், அவனது நோக்கத்தையும் அவள் தலைவியிடம் எடுத்துக் கூறுகிறாள். கேட்ட தலைவி ஒன்றும் கூறாமல் இருக்கிறாள், அதைக் கண்டு தோழி தனக்குத் தானே கூறுவதுபோல், தலைவனின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்' என்று சொல்கிறாள்.

தலைவனின் உயரிய ஆளுமைப் பண்புகள் வெளிப்படும் வகையில் தோழி தலைவியிடம் பேசுகிற குறிஞ்சிப் பாடல் பெருஞ்சுவை பயப்பதாகும். ஒளிபயக்கும் நகைகளை அணிந்தவளே! தலைவன் என்னிடம் ஒன்றை வேண்டுபவனைப் போல, மிகவும் எளியவனாய் நின்று பேசினாலும், அவன் உண்மையில் எளியவன் அல்லன்.

இந்த உலக மக்களையெல்லாம்

அரசோச்சிக் காப்பாற்றக் கூடிய அளவு வலிமையுடையவன். மெய்ப்பொருள் கூறும் நூல்களைக் கூற வல்லவர்களை வழிபட்டு நின்று, அந்தப் பொருளை அறிந்தான் போலே நன்மக்களைக் கண்டால் தோன்றும் மன அடக்கம் உடையவன்.

பொருளற்ற வறியவரின் துன்பத்தைத் தன் கொடைப் பண்பால் நீக்க வல்ல கருணையும் உடையவன். இத்தகைய ஓர் ஆண்மகன் தன் ஆண் தகைமையைக் கைவிட்டு என்னிடம் பல முறையும் கூறிய சொற்களைச் சொல்வேன் கேட்பாயாக! எனத் தலைவனின் உயர்ந்த பண்பு நலன்கள் வெளிப்படும் வகையில் தோழி முதலில் தலைவியிடம் பேசுகின்றாள்.

ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும்

சொல்லும், உலகம்

புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்;

வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான்போல்,

நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்;

இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க

வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன்;

அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு

என்னைச்

சொல்லும் சொல் கேட்டீ, சுடரிழாய்! பன்மாணும்' (கலித்தொகை 47 - 1 - 8)

இத்தகைய உயர் பண்புகள் பொருந்திய தலைவனின் வேண்டுகோளைத் தலைவி ஏற்க வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துவது போலப் பேச்சைத் தொடங்கிய தோழி தொடர்ந்து, நறுநுதலை உடையவளே! தலைவியாகிய நீ இன்றி உயிர்வாழேன்! என்று அவன் கூறுகிறான்.

அத்துணைச் சிறப்பு வாய்ந்தவன் இவ்வாறு எளி வந்து சொல்வதை யாராலும் நம்ப முடியாது. இந்நிலையில் யான் படும் துன்பம் வேறு யாருக்கும் இருக்க முடியாது' என தனது நிலையைத் தலைவிக்குத் தெளிவுபடுத்துகின்றாள்.

நின் இன்றி அமையலேன் யான்' என்னும்

அவனாயின்

அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கு இங்கு

அரிதாயின்

என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ?

நறுநுதால்!

(கலி.தொ 47-9-11)

மற்றொரு நாள் அவன் என்னிடம், யான் வருந்துவதை நீ அறியவில்லை, தன் வாழ்வைப் பற்றி தனியே முடிவெடுக்க மகளிரால் இயலாது. சிறந்த தோழியரோடு கலந்து பேச வேண்டும்' என்று கூறித் தலைவியைச் சிந்திக்கச் செய்ய வேண்டிய தோழியின் அறிவார்ந்த சிந்தனையும், அறிவுரையும் படிக்க தலைமக்களின் பண்புகளும், அறநெறிகளும் புலனாகும். அகத்திணையின் நோக்கத்தை நிறைவேற்ற தோழி எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் கலித்தொகையின் குறிஞ்சிப்பாடல் எழிலுற இயம்புகின்றது.

அறியாய் நீ, வருந்துவல் யான்' என்னும்

அவனாயின்;

தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும்

அரிதாயின்;

அளியரோ எம்போல் ஈங்கு இவன்

வலைப்பட்டார்?'

(கலித்தொகை 47 - 12 - 14)

அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே பெற்று மிளிரும் குறிஞ்சித் தலைவனையும், அகத்திணையின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோழிக்கு இருக்கும் கடமையையும் கபிலர்பெருமான் எடுத்துக் கூறுவதை படித்துத் துய்ப்போம்.

கலித்தொகையில் வரும் உரையாடல்களின்அறிவு நுட்பங்களும், ஏனை அருமைகளும் அறிந்து இன்புறவல்ல தமிழறிஞர்களுக்கு இவ்வுண்மை நன்கு புலப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.