FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

Updated On : 11 ஜூன் 2026, 5:01 am IST
பகிர்:

முதுமுனைவர் அரங்க. பாரி

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவருக்குள் ஓர் ஏக்கம் இருந்தது. "சினிமா எங்கள் கிராமத்துக்கு வந்திருக்கிறது. ஆனால், சினிமாவில் எங்கள் கிராமம் வந்ததில்லையே... அதை வரவைப்பேன்' என்பதுதான்அந்த ஏக்கம்.

அந்த ஏக்கத்தினோடே சுகாதார ஆய்வாளர் அரசுப் பணியைத் துறந்து, 1970-களில் அல்லி நகரம் என்னும் கிராமத்திலிருந்து சென்னைக்குப் பயணமான பாரதிராஜா, 56 ஆண்டுகளுக்குப் பின்னர் "பத்மஸ்ரீ' என்னும் பெருமைமிகு விருதுடன், தேசிய - மாநில அளவிலான சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த திரைக்கதையாளர், சிறந்த சமூகப் பொறுப்புணர்வுப் படைப்பாளி போன்ற சாதனைப் பதக்கங்களுடன் உயிரற்ற உடலாய்த் தன் தாய்மண்ணுக்குத் திரும்புகின்றார்.

Advertisement

Advertisement

இடைப்பட்ட காலத்தில் தமிழ்த் திரையுலகையே நகரத்திலிருந்து கிராமத்துக்குப் பயணப்பட வைத்துள்ள அவரது திரையுலகப் பங்களிப்பை நான்காகப் பகுக்கலாம். கதைக்கரு, கதைக்களம், கதைமாந்தர், கதைமொழி என்று நான்கு தளங்களிலும் பாரதிராஜா தமிழ்த் திரையுலகுக்குப் புதிய வடிவத்தைத் தந்துள்ளார்.

1977-இல் தான் இயக்கிய முதல் படமான "16 வயதினிலே' படத்துக்காக சிறந்த இயக்குநர் என்னும் விருதைப் பெறுவதற்குக் காரணமாக இருந்தது அதன் கிராமியக் கதைக்கருவே. கிராமியம் என்பது தமிழ்நாட்டின் அடையாளம் மட்டுமல்ல; இந்திய அடையாளமும் கூட. அதனால்தான், "16 வயதினிலே' திரைப்படம் "படகரெல்ல வயசு' என்று தெலுங்கிலும் "சால்வா சாவன்' என்று ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது.

புராணங்கள், இதிகாசங்கள், தெய்விகத் திருவிளையாடல்கள் என்று இருந்த தமிழ்த் திரையுலகம் சுதந்திரப் போராட்டம், நாட்டு விடுதலை எனப் பயணித்து சமூகம் மற்றும் குடும்பங்களைப் பேசுபொருளாக்கிக் கொண்டது. அதிலும் மேல்தட்டு சமூகங்களையும் குடும்பங்களின் சிக்கல்களையும் நடப்புகளையும் பேசிய தமிழ்த் திரையுலகில் 16 வயதினிலே திரைப்படம் பெரும் உடைப்பை உருவாக்கியது.

இடைநிலைச் சமூகக் குடும்பங்களின் வாழ்கையைப் பேசத்தொடங்கியது. விதவையான குருவம்மா (காந்திமதி), பள்ளிப்படிப்பை முடித்திருந்த மயிலு (ஸ்ரீதேவி), கிராமத்து அடாவடியான பரட்டை (ரஜினிகாந்த்), கிராமத்து அப்பாவி வெகுளியான சப்பாணி (கமல்) என "16 வயதினிலே' திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல கதைக்கருவும் அக்மார்க் கிராமியமே.

பருவ வயது மங்கையான மயிலு தன் கிராமத்துக்கு வருகைதரும் நகரத்து மருத்துவரிடம் (சத்யஜித்) தன்னைப் பறிகொடுத்த பின்னர் கைவிடப்பட்ட அவளுக்காகச் சிறைத் தண்டனை ஏற்கும் சப்பாணி என்று ஒரு கிராமத்து வாழ்வு தமிழகக் கிராமங்களை மிக எளிதாகக் கவர்ந்திழுத்தது. இந்தப் படத்தின் இன்னொரு பலமாக அமைந்த இளையராஜாவின் இசையும், பாடல்களும் கிராமியத்தன்மை கொண்டவையே.

தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, கடல் பூக்கள் என்று பாரதிராஜாவின் புகழ்பெற்ற படங்களின் அடையாளமாக அமைந்தது கிராமியம் என்னும் கதைக்கருவே. இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு இயக்குநர்களும் கிராமியம் சார்ந்த திரைப்படங்களை எடுக்கத் தொடங்கினர்.

தமிழ்ச் சினிமாவை வளர்த்தெடுத்த நிறுவனங்களான ஏவிஎம், ஜெமினி, விஜயா-வாகினி உள்ளிட்டவை பெரும் படப்பிடிப்பு அரங்கங்களைக் கொண்டிருந்தன. இந்த அரங்குகளை இயக்குநர்கள் பயன்படுத்த அதன் கதைக்கருவே காரணமாக இருந்தது. இந்த நிலையில், கதையின் கருவில் மாற்றம் ஏற்படும்போது அது கதையின் களத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால், திரைப்படக் குழுவினர் கிராமங்களையும் வெட்ட வெளிகளையும் கடற்கரைகளையும் நோக்கி நகரத் தொடங்கினர். "16 வயதினிலே' திரைப்படம் மைசூரூ, கொள்ளேகால் போன்ற பகுதியில் படமாக்கப்பட்டது. கருவின் மாற்றம் களத்தில் வெளிப்பட்டதைப் போலவே களத்தின் மாற்றம் கருவிலும் வெளிப்படத் தொடங்கியது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலையும், தேனி, மதுரை போன்ற தென்மாவட்டங்களும் தமிழ்த் திரையுலகின் படப்பிடிப்புத் தளமாக மாறின.

தமிழ்க் கதாபாத்திரங்கள் பாரதிராஜாவுக்குப் பிறகு கிராமத்துப் பெயர்களை ஏற்கத் தொடங்கின. குறிப்பாக பரட்டை, சப்பாணி, குருவம்மா, மயிலு, (16வயதினிலே) ராக்கம்மா (கருத்தம்மா), பாலுத்தேவர் (வேதம் புதிது), குயிலு, பொன்னாத்தா (முதல்மரியாதை) என்று பாரதிராஜாவின் கதாபாத்திரங்கள் கிராமத்துப் பெயர்களை ஏற்றன. இதனால், கதாபாத்திரங்களுக்கும் கிராமத்து மக்களுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது.

திரை நடிகர்களின் தேர்விலும் பாரதிராஜா ஒரு புதிய போக்கை உருவாக்கினார். அழகிய தோற்றம், பெரும் உடற்கட்டு, குரல் வளம், நடனம் சண்டைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமின்றி எளிய தோற்றமும் இயல்பான உடல்மொழியும் கொண்டவர்கள் கதை நாயகர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர். அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டவர்களே "கிழக்கே போகும் ரயில்' சுதாகர், "புதிய வார்ப்புகள்' பாக்யராஜ், "மண்வாசனை' பாண்டியன், "புதுநெல்லு புதுநாத்து' நெப்போலியன், "அலைகள் ஓய்வதில்லை' கார்த்திக் போன்றவர்கள். நாயகர்கள் மட்டுமின்றி ராதிகா, ராதா, ரேகா, ரேவதி, ரஞ்சிதா என்று நாயகிகளும் அறிமுகம் செய்யப்பட்டனர். கதையின் நாயகர் தேர்விலும் பாரதிராஜா ஏற்படுத்திய மாற்றங்கள் பெருமைக்குரியவையே.

புதுமுகங்களை மட்டுமின்றி புகழ்பெற்ற நடிகர்களையும் தன் திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் புதிய நோக்கிலும் வெளிப்படுத்தியவர் பாரதிராஜா. கமல்ஹாசனை "16 வயதினிலே' திரைப்படத்தில் வெறும் கோவணத்தைக் கட்டி நடிக்க வைத்தார். இவ்வாறே, நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜியையும், ராதாவையும் முதல்மரியாதை திரைப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் வெளிப்படுத்தி புகழ்பெற வைத்தவர் பாரதிராஜா. ராஜ தோற்றமும் செல்வச் செருக்கும் வெளிப்பட்ட கதாபாத்திரங்களை மாற்றிவிட்டு, கிராமத்தின் எளிய மனிதர்களாய், இயல்பான தோற்றத்தில் வெளிப்பட வைத்தமை தமிழ்த் திரையுலகைக் கிராமங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கியது.

பாரதிராஜா திரைப்படங்களின் இன்னொரு சிறப்பு அதன் மொழி. அடுக்கு மொழியில், வசன நடையில் வெளிப்பட்ட பராசக்தி ஒரு மாற்றம் என்றால் கொச்சை மொழியில் வெளிப்பட்ட பாரதிராஜாவின் திரைமொழி இன்னொரு மாற்றமாகும். குறிப்பாக, "என் இனிய தமிழ் மக்களே... உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா' என்று கரகரத்த குரலில் வெளிப்படும் பாரதிராஜாவின் குரலில் தொடங்கி, "ஆத்தா நான் பாஸôயிட்டேன்; ஆத்தா வைய்யும் காசுகொடு; மயிலு... ஆத்தா ஆடு வளத்தா.. கோழி வளத்தா, நாய் வளக்கல.. இந்த சப்பாணியத்தான் வளத்தா; சப்பாணின்னு சொன்னா சப்புனு அறஞ்சிடு, (16 வயதினிலே), எவடி அவ எம்பாட்டுக்கு எதிர்பாட்டு படிக்கிறவ' (முதல் மரியாதை) என்பது மட்டுமின்றி கிராமத்து பழமொழிகளையும் சொலவடைகளையும் திரைப்படங்களில் புழங்க வைத்தவர் பாரதிராஜா.

தெக்கத்தி சீமையின் பேச்சு வழக்கைத் திரைமொழிக்குள் கொண்டு வந்ததில் பாரதிராஜாவே முன்னத்தி ஏர். இவ்வாறே, "மூச்சுக்கு மூச்சு பாலுத்தேவர் பரம்பர, பாலுத்தேவர் பரம்பரங்கிறீங்களே.. பாலுங்கிறது உங்க பேரு.. தேவருங்றது நீங்க படிச்சி வாங்குன பட்டமா' என்ற வசனம் தமிழ்த் திரையுலகில் எழுதப்பட்ட புதிய வேதமே.

தமிழ்த் திரையுலகில் அதிக திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜா என்னும் திரைசூரியன் இன்று (ஜூன் 10) மறைந்து விட்டது. பாரதிராஜாவின் தாக்கமின்றித் தமிழ்த் திரையுலகம் இயங்காது. தமிழ்த்திரையுலகின் வரலாற்றில் பாரதிராஜா கிராமத்து மண்ணில் செய்யப்பட்ட பொன்மகுடம். கிராமத்துத் தறியில் நெய்யப்பட்ட பட்டாடை. பாரதிராஜா திரையில் மறையலாம்... அவரது திரைப்படங்கள் மறையாது.

தமிழ் சினிமா உள்ளவரை பாரதிராஜா என்கிற அல்லி நகர மண்வாசனை நாடோடித் தென்றலாக வீசிக் கொண்டிருக்கும்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments