முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... நிலைத்திருக்கும் அந்தக் கற்சிற்பத்தின் குரல்!

மறைந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் நினைவில்...

Updated On : 14 ஜூன் 2026, 8:15 am IST
இயக்குநர்... - தினமணி கருவூலத்திலிருந்து...
பகிர்:

இயக்குநர் இமயம் பாரதிராஜாவைப் பற்றி இனிப் புதிதாக எழுதுவதற்கோ, பேசுவதற்கோ எதுவுமில்லை என்கிற அளவுக்கு, அவர் மறைவைத் தொடர்ந்து,  கடந்த சில நாள்களாக சகலவிதமான ஊடகங்களிலும் எண்ணற்றோர் எழுதியும் பேசியும் குவித்துவிட்டார்கள். ஆனாலும், அதிகாலைப் பெருவெள்ளமாகப் புகுந்து பெருக்கெடுத்துத் தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்டவரை எவ்வாறு எழுதாமல் இருக்க முடியும்?

எங்கோ மேற்குத் தொடர்ச்சி மலையோரத்திலிருந்து வந்து, புட்டண்ணா கனகல், அவிநாசி மணி (இவர் இயக்கிய ஜானகி சபதத்தில் உதவி இயக்குநர் பாரதிராஜா என டைட்டில் கார்டு வரும்!), ஏ. ஜெகன்னாதன் போன்றோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோதே அக்கினிக் குஞ்சை அடைகாத்து வைத்திருந்தார் பாரதிராஜா.

1977 செப்டம்பர் 15 - முதல் திரைப்படம் பதினாறு வயதினிலே வெளிவந்தது; எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. அதுவரையிலும் தமிழ்ப் படவுலகில் திரைப்படங்களுக்கென எழுதப்படாத எத்தனையோ இலக்கணங்கள் இருந்தன;  இதை இவர் இவரால் மட்டும்தான் சாதிக்க முடியும்; இதை இவரால்தான் நடிக்க முடியும் என்றெல்லாம்.

Advertisement

Advertisement

பாரதிராஜாவின் முதல் படத்திலேயே கற்பிதங்கள் நொறுங்கி வீழ்ந்தன. எல்லாரும் ஏற்கெனவே சொன்னவைதான், கேமராக்கள் கிராமங்களுக்குள் புகுந்தன. மண், மலை, மரம், வயல், வெளி என உள்ளதை உள்ளவாறே காட்டின. கிராமம் என்றால் வெறும் லொகேஷன் மட்டுமல்ல. கூடவே, அந்த மண்ணில் பிறந்து வாழ்கிற மனிதர்களும் அவர்களுடைய குணங்களும் எவ்வித வடிகட்டலும் தூய்மைப்படுத்தலுமின்றி வெளிப்படுத்தப்பட்டன.

சப்பாணியையும் மயிலையும் பரட்டையையும் குருவம்மாவையும்தான் மக்கள்  பார்த்தனர்; கமல்ஹாசனையும் ஸ்ரீதேவியையும் ரஜினிகாந்த்தையும் யாருக்குத் தெரியும்?

மாறுபட்ட செந்தூரப் பூக்களைப் பதினாறு வயதினிலே படத்தில் பார்த்த மக்கள், யார் இவர்? எங்கிருந்து வருகிறார்? என்று தேடித் தேடி பாரதிராஜாவைக் கொண்டாடினர்.

தொடர்ந்தது கிழக்கே போகும் ரயில். சுதாகர், ராதிகா அறிமுகம். முடிதிருத்தும் தொழிலாளியாக வருவார் நாயகன். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சாடல்களுடன் படம்; பெரும் வெற்றியைத் தொடர்ந்தார். எப்போதும்போல ஒரு பேச்சு. கிராமத்தான், இவருக்குக் கிராமத்துக் கதைகள்தான் எடுக்கத் தெரியும்; வேறென்ன தெரியும் என்பதாக. முதுகிற்குப் பின்னால்தான் பேசினார்கள். அவருக்கும் கேட்டிருக்கும்; அடுத்து முற்றிலும் மாறுபட்ட கிரைம் த்ரில்லராக மயிலையும் சப்பாணியையும், திலீப்பாகவும் சாரதாவாகவும் மாற்றி, சிகப்பு ரோஜாக்களை எடுத்துக் காட்டினார்; பின்னால், டிக் டிக் டிக் அடுத்த அல்ட்ரா மாடர்ன் மூவி.

புதிய வார்ப்புகளில் இவரா, கதாநாயகனா என்று வியக்கவைத்த பாக்கியராஜ் நாயகன், நாயகியோ எங்கிருந்தோ வந்த முகம் ரதி அக்னிஹோத்ரி. தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள்.

பாரதிராஜாவின் ஒவ்வொரு படத்தையும் பற்றித் தனித்தனிக் கட்டுரைகளே எழுதிச் செல்லலாம்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அவர் சென்னை புறப்பட்டு வந்தார். ஆனால், இயக்குநரானார். ஆனாலும் அப்போதும் நடித்தார். கல்லுக்குள் ஈரம். இரண்டு நாயகன்களில் ஒருவராக, இயக்குநராகவே. ஒரு கதாநாயகி மருத்துவச்சி, இன்னொரு கதாநாயகி சலவைக்காரப் பெண். அருணாவும் விஜயசாந்தியும். இப்படிப்பட்ட நாயகிகளை அப்போது வேறெவராலும் சிந்தித்துப் பார்க்கவும் இயலாது.

நிழல்கள் – இப்படியொரு படத்தை இப்போது நினைத்தும் பார்க்க முடியாது. வேலையில்லா பிரச்சினையும் காதலும். ரோஹிணி என்பவர் நாயகி. நாயகியா? என்று ஆச்சரியப்படுத்தியிருப்பார். பூங்கதவே தாழ் திறவாய் படத்தைப் பார்த்து முடித்து வெளியே வரும்போது தொற்றிக்கொள்ளும் பதற்றம் நாள்கணக்கில் நம்மைவிட்டு விலகாதிருக்கும் (மதுரையில் மினிப்ரியாவில் ரிலீஸ்!).

அலைகள் ஓய்வதில்லை மெகா ஹிட். கார்த்திக் – ராதா அறிமுக ஜோடி. ஆயிரம் தாமரை மொட்டுகளே... ஓர் இளம்பருவத்துக் காதல் கதை. கிளைமாக்ஸில் நாயகன் பூணூலையும் நாயகி சிலுவை மாலையையும் அறுத்தெறிவார்கள்.

காதல் ஓவியம் எடுத்தார். இன்றைக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்தப் படத்தைப் பார்க்கலாம்; அதன் பாடல்களைக் கேட்கலாம். ஆனால், ஏனோ அப்போது ஓடவில்லை. எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தால் என்ன? பதற்றமாகிவிட்டார் போல. உடனே, இளமைத் துள்ளலுடன் எடுப்பதாக நினைத்து, அலைகள் ஓய்வதில்லையின் வெற்றிகரமான இணையான கார்த்திக் – ராதாவை மீண்டும் நடிக்க வைத்து, வாலிபமே வா வா என்றொரு படத்தை எடுத்தார். ஆனால், யாரும் ரசிக்கவில்லை. அடி!

அதன் பிறகு வந்ததுதான் மண்வாசனை. நாயகி புதுமுகம் ரேவதி, மதுரையில் வளையல் கடையில் கண்டுபிடிக்கப்பட்ட பாண்டியன்தான் நாயகன். உண்மையிலேயே மண்வாசனை.

உலகமே மகா நடிகராகக் கொண்டாடிய சிவாஜி கணேசனை வேறொரு தளத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிகராக முன்னிறுத்தினார் முதல் மரியாதையாக  பாரதிராஜா. ராதாவின் நடிப்பும் வேற லெவல். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படம், இன்று வரையிலும், தமிழ்த் திரையுலகம் இருக்கும் வரையிலும் பேசப்படும் படமாகத் திகழ்ந்துகொண்டிருக்கும். இந்தப் படத்தில் சாதிக் கட்டுமானங்களும் உடைபடும்.

1987-ல் வேதம் புதிது வந்தது. இன்றைக்கு இப்படியொரு படத்தை எடுக்கவும் முடியாது; எடுத்தால் வெளியிடவும் முடியாது. அப்போதே வெளியிட அவதிப்பட்டார் பாரதிராஜா. ஆனால், எவ்வித சமரசமும் செய்துகொள்ள மறுத்து அப்படியே கொண்டுவந்தார். பாலு உங்கள் பெயர், பின்னால் இருக்கிற தேவர் என்ன படித்து வாங்கிய பட்டமா? என்று கேட்பான் அந்தச் சிறுவன். படத்தில் ஒரு பஞ்சாயத்துக் காட்சி வரும் (யூ டியூபில் கிடைக்கிறது). ஒவ்வொரு சாதியைப் பற்றியும் மற்றவர்கள் விமர்சிப்பார்கள். மோதிக் கொள்வார்கள். பாலுத் தேவர் வந்த பிறகு முடிவு வரும்.

இன்றைக்கு எத்தனையோ ‘சமுதாயப் புரட்சிகர’ப் படங்களை எடுத்து எத்தனையோ இயக்குநர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், தமிழ்த் திரையுலகில் சாதி, மதங்களுக்கு எதிராக, காத்திரமான கதைகளுடன், இரண்டையும் இத்தனை கடுமையான விமர்சனங்களுடன் மிக அதிகமான படங்களை எடுத்தவர் அனேகமாக பாரதிராஜா ஒருவராகத்தான் இருப்பார்.

கொடி பறக்குதென ஆசைப்பட்டு ரஜினிகாந்தை வைத்து எடுத்தார். சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் முயன்றிருப்பார். ஆனால், நினைத்த அளவில் பறக்கவில்லை.

நகர்ப்புற விளிம்புநிலை மனிதர்களுடன் என் உயிர்த் தோழன், அப்படியே புதுநெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல்...

பாரதிராஜாவின் பல படங்களை இன வரைவியல் சித்திரங்களாகப் பார்க்கலாம். இவற்றில் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா மூன்றும் கூடுதல் கவனம் பெறும். எல்லா படங்களிலும் அப்படித்தான் என்றாலும் கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே (தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி, தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி) இரண்டிலும் அப்படியே கிராமத்தைக் கொண்டுவந்து, அதே வாசனையுடன் கண் முன் நிறுத்துவார். உறவுகளுக்குள் இருக்கிற சிக்கல்களை மிகச் சிறப்பாகக் கையாண்டிருப்பார் பாரதிராஜா. கருத்தம்மா ஒரு மாஸ்டர் பீஸ். கள்ளிப்பால் பெண் சிசுக் கொலைக்கு எதிராக அப்படியொரு படம். மிகச் சிறப்பாகத் தன் இயலாமையை வெளிப்படுத்தியிருப்பார் பெரியார்தாசன் (கருத்தம்மா, பாரதிராஜாவின் அம்மாவின் பெயர், தன் பெயரின் முதலெழுத்தாகவும் கே என்றே வைத்துக் கொண்டார்). இவற்றைப் போல பசும்பொன்னுக்கும் ஓரிடம் இருக்கிறது.

2000-க்குப் பிறகு கடல் பூக்கள், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி. படங்களில் பாரதிராஜாவின் டச் இருந்தாலும் அந்தக் காலத்தின் ஹிட் மீண்டும் அமையவில்லை.

தொலைக்காட்சிக்காகத் தெக்கத்திப் பொண்ணு என்றொரு மண்வாசனைத் தொடரையும் எடுத்தார். நெப்போலியன், சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின் எல்லாரும் நடித்தது. ஏனோ, நிறைய பேர் இப்போது பேசவில்லை.

பின்னர், படங்களில் நடிக்கத் தொடங்கினார். பாண்டியநாடு மிகச் சிறந்த தந்தையைக் காட்டியது. திருச்சிற்றம்பலமோ மிகச் சிறந்த தாத்தாவை அறிமுகம் செய்தது. திரு. மாணிக்கத்தில் அந்த முதியவரின் நடிப்பு கலங்கடித்துவிடும். புலவர் என்றொரு படம் அவர் நடித்து முடித்த நிலையில் வெளிவரக் காத்திருக்கிறது.

பாரதிராஜாவுக்கு முன்னரும் மதுரை வட்டாரத்திலிருந்து எவ்வளவோ பேர் நாடகங்களின்வழி வந்திருக்கின்றனர். ஆனால், பாரதிராஜா ஒரு பேரலையாகத் திரையுலகில் வந்தார். அவருக்குப் பின்னால் தெற்கிலிருந்து பெருமெடுப்பில் இளைஞர்கள் படையெடுத்தனர். இன்று திரையுலகைக் கட்டியிருக்கின்றனர். பாரதிராஜாவால் நடிகர்களாகவும் தொழில்நுட்ப கலைஞர்களாகவும் இயக்குநர்களாகவும் உருவானவர்கள் எண்ணற்றவர்கள்.

எளிய - சாதாரண முகங்களை அறிமுகப்படுத்தி நடிக்கவைத்து நட்சத்திரங்களாக்கினார் - சுதாகர், ராதிகா, விஜயன், கார்த்திக், ராதா, பாண்டியன், நெப்போலியன், ராஜா, ரேவதி, நிழல்கள் ரவி, வடிவுக்கரசி, அருணா, விஜயசாந்தி, ரேகா, சுகன்யா, ரஞ்சனி, மணிவண்ணன், பாக்கியராஜ்... இயக்குநர்களில் பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, பொன்வண்ணன், சீமான்...

பாரதிராஜாவைத் தொடர்ந்து வந்த திரைப்படங்களில் ஏதோவொரு வகையில் பாரதிராஜாவின் தாக்கம் இல்லாமல் இருக்காது. ஏனெனில், அவர் அத்தனையையும் முயன்று பார்த்திருக்கிறார், நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார். இன்றைக்குத் திரையுலகில் பலர் அவரிடம் பயின்றிருப்பார்கள், அல்லது அவரைப் பார்த்துப் பயின்றிருப்பார்கள், அல்லது அவருடைய கொடிவழியில் எங்கோ தொடர்பில் பயின்றிருப்பார்கள் எனலாம்.

அரசியலிலும் ஆர்வங்கொண்டு இருந்தார் அவர். இடதுசாரி மனநிலையிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். வெளிப்படையாகப் பேசிக்கொண்டும் தேவையான தருணங்களில் நேரடியாகச் செயல்பட்டுக்கொண்டும் இருந்தார்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றை எப்போது பேசினாலும் எழுதினாலும் பாரதிராஜாவுக்கு முன், பின் என்று பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது. ஏனெனில், திரையுலகில் அவரால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.

ராமாயணத்தில் தசரதனாலேயே தாங்க முடியாதது புத்திர சோகம். தனயனை இழந்தபோது தாங்க முடியவில்லை பாரதிராஜாவுக்கும்; தொடர்ந்து தன்னையும் இழந்தார். நிறை வாழ்வுதான். எங்கோ தொலைவில் கிடக்கும் சின்ன ஊரிலிருந்து  வந்து தமிழ்த் திரையுலகில் அழியா முத்திரை பதித்திருக்கிறார்.

என் இனிய தமிழ் மக்களே என்றொலித்த - கோவில் பெருந்தூண்களில் நிலைத்திருக்கும் கருங்கல் சிற்பங்கள் உயிர்ந்தெழுந்து பேசுவதைப் போன்ற – அந்தக் கற்சிற்பத்தின் குரல் இனி நேரில் ஒலிக்காது! ஆனாலும் அந்தப் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்.

summary

In memory of the late Tamil film director Bharathiraja...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.