FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

காதலில் நிகழ்ந்த அழகிய கற்பிதம்!

காதலை மறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. தாயிடம் தலைவியர் காதலை வெளிப்படுத்த இயலாது.

Updated On : 24 மே 2026, 6:28 pm IST
கோப்புப் படம்
பகிர்:

காதலை மறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. தாயிடம் தலைவியர் காதலை வெளிப்படுத்த இயலாது. அதை மறைப்பதற்கான முயற்சியில் சமயோசித அறிவைப் புலப்படுத்துவதைச் சில அகப்பாடல்கள் காட்டுகின்றன.

காதலியைச் சந்திப்பதையே நோக்கமாகக் கொண்ட தலைவன் திருமணத்தைத் தள்ளிப் போட நினைக்கிறான். அவன் வீட்டின் புறத்தே நிற்கிறான். அவனைப் பார்த்துக் கூறுவது போன்று அமைந்த நற்றிணைப் பாடல் ஒன்று நயமிக்க நாடகம் ஒன்றை நடத்திக்காட்டுகிறது.

தலைவன், காட்டுவழியில் உள்ள ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்க வருகிறான். மார்பில் மணங்கமழும் மாலையோடு வந்த அவன், தலைவியைக் கண்டு அவளை அணைக்கின்றான். அவன் அணிந்திருந்த மாலை புத்தம் புதியது. நறுமணம் வீசும் அம்மாலையில் வண்டுகள் மொய்க்கின்றன. தலைவியை அணைத்ததால் அவளது மேனியிலும் அந்த மாலையின் நறுமணம் வீசுகிறது.

Advertisement

Advertisement

தன் மகள் மீது வாசம் வீசுவதைத் தாய் உணர்கிறாள். ஏதோ நடந்திருக்கிறது என்ற உணர்வுடன் வெகுண்ட பார்வையோடு தம் மகளைக் கொலை செய்துவிடுவது போல உற்று நோக்குகிறாள். தலைவியைப் பார்த்து, இது என்ன புது மணம் உன் மீது வீசுகிறதே! இதற்கு முன்னரும் இப்படி வீசியதா? சொல்!' என்று கேட்கிறாள்.

தலைவிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. பதில் சொல்லமுடியாமல் போகிறது. அவள் தோழியின் முகத்தைப் பார்க்கவும், தாயிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசனை செய்கிறாள் தோழி.

தோழி, தன்னையும் தலைவியையும் தாயிடமிருந்து தப்பிக்க அவளுக்கு ஓர் உபாயம் திடீரென்று கிடைத்துவிடுகிறது. அடுப்பிலிட்ட மணமிக்க சந்தன விறகின் கொள்ளியைத் தாயிடம் காட்டி, இதிலுள்ள வண்டு

கள் அவளது தோளில் மொய்க்கின்றதைக் காண்பாயாக; அதனால் வந்த நறுமணம்தான் அது' என்று தாயிடம் சொல்லித் தப்பித்துக் கொள்கிறாள் தோழி.

தலைவியிடம் அந்த நிகழ்ச்சியை இவ்வாறு கூறியது தோழியின் சமயோசித அறிவுக் கூர்மையைக் காட்டுகிறது. நற்றிணையில் வரும் இந்தப் பாடலை இயற்றியவர் பெருவழுதி ஆவார்.

ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை

காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,

உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்

பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு

அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,

கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும்

இனையையோ?' என வினவினள், யாயே;

அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து,

என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!-

யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்?

என, மடுத்த

சாந்த ஞெகிழி காட்டி-

ஈங்கு ஆயினவால்' என்றிசின் யானே.

இது போன்ற கற்பனையில் அமைந்த ஜப்பானிய அகப்பாடல் ஒன்று பொருத்தமுற அமைந்துள்ளது. அதுவும் ஒரு காதல் காட்சிதான்! ஜப்பானியத் தலைவி தன் காதலனைத் தான் குறித்த இடத்துக்கு வரச்சொல்கிறாள். அவனைச் சந்தித்து உரையாடுகிறாள். அன்னைக்குத் தெரியாமல் இந்நிகழ்வு நடக்கிறது. தலைவன் இனிய குரல் உடையவன். மறைவாகச் சந்திக்கும் தன் காதலை அன்னை அறிந்தால் என்ன செய்வது என்று அவள் யோசிக்கிறாள்.

அவள் சொல்கிறாள் தலைவனைப் பார்த்து, மூங்கில் செறிந்துள்ள காட்டிலிருந்து வரும் தலைவனே வா! நாம் பேசிக்கொண்டிருப்போம் அன்னை கேட்டால் காற்றின் இசை என்று சொல்லிவிடுகிறேன்' என்கிறாள்.

தாயிடம் தலைவியின் காதலை மறைக்க வேண்டி, மணம் வீசும் மாலையில் வண்டு மொய்த்தலைச் சமயோசிதமாக நற்றிணைத் தோழி புலப்படுத்தியதுபோல, ஜப்பானியத் தலைவி தன் காதலைத் தாயிடம் மறைக்கவேண்டிக் காற்றின் இசை என்று கூறியதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments