படைப்பின் உச்சம்
சங்க இலக்கியத்தில் ஐங்குறுநூறு, மூன்று முதல் ஆறு அடிகள் வரை கொண்ட மிகவும் குறைந்த அடியளவு கொண்ட செய்யுட்களால் இயற்றப்பட்டதாகும். மிகக் குறைந்த அடிகளில் புலவர்கள் அகப்பொருள் சார்ந்த விஷயங்களை இலைமறைவு காயாகச் சித்தரித்துள்ளனர்.
முனைவர் ப. சுடலைமணி
சங்க இலக்கியத்தில் ஐங்குறுநூறு, மூன்று முதல் ஆறு அடிகள் வரை கொண்ட மிகவும் குறைந்த அடியளவு கொண்ட செய்யுட்களால் இயற்றப்பட்டதாகும். மிகக் குறைந்த அடிகளில் புலவர்கள் அகப்பொருள் சார்ந்த விஷயங்களை இலைமறைவு காயாகச் சித்தரித்துள்ளனர்.
நெய்தல் திணையில் அமைந்த அம்மூவனாரின் செய்யுள்(105) ஒன்று, மிகுந்த இலக்கியச் சுவை கொண்டதாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
தோழி, தலைமகன் கற்புக்கடம் பூண்டமையைத் தன் தாய்க்கு முறைப்படி வெளிப்படுத்திய பின்னர், தலைவன் திருமணத்துக்கு வேண்டிய செல்வத்தை ஈட்டிக் கொண்டு திரும்பினான்.
தலைவன் திருமணத்துக்குரிய ஏற்பாட்டுடன் வந்தமையால் தலைவியின் பசப்பு நீங்கியது; உடல் பூரித்தது. அதை தன் தாய்க்குக் காட்டித் தோழி கூறியதாகச் செய்யுள் அமைக்கப்பட்டுள்ளது.
அன்னை வாழி வேண்டு அன்னை முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணந் துறைவன் வந்தெனப்
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே.
அன்னையே! நீ வாழ்க! நான் கூறுவதைக் கேள். முழக்கத்தைச் செய்யும் கடலின் அலைகள் கரைமீது எறிந்த முத்து வெண்ணிறமுடைய மணற் பரப்பிலே கிடந்து மின்னுதற்கு இடமான குளிர்ந்த, அழகிய நீர்த்துறைக்குத் தலைவன் வந்தமையால், என் தோழியின் நெற்றி பொன்னைவிடச் சிறப்பாகச் சிவந்தது. நீ அதைக் காண்பாயாக என்பது பாடலின் விளக்கமாக அமைந்துள்ளது.
அனைத்துப் பனுவல்களும் பல்வேறு விதமான பொருள் தருகின்றன. ஆக, ஒற்றை அர்த்தத்துடன் பனுவல்கள் முடிவு பெறுவதில்லை. அவை பிரதியியல் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுகின்றன என்று பிரெஞ்சு தத்துவ மேதை ழாக் தெரிதாவின் கூற்றைப் பயன்படுத்திச் செய்யுளை அணுகலாம்.
காதல் கொண்ட தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்றான். அந்த வேளையில் தலைவியை வேறு யாரோ அந்நியர் பெண் கேட்டு வருகின்றார். இந்த முறைப்படி நடக்கும் திருமணத்தை அறிஞர்கள் 'நொதுமலர் வரைவு' என்று அழைக்கின்றனர். ஆனால், இந்த வரைவுக்குத் தலைவியின் மனம் ஒப்பவில்லை. தலைவியின் குடும்ப உறுப்பினர்களுக்கு நொதுவை மணம் என்பது உவப்பானதாகவே இருக்கிறது.
ஒளவை துரைசாமிப்பிள்ளை, கடல் அலைகளால் ஒதுக்கப்பட்ட முத்துக்களானது வெள்ளிய மணலின்கண் கிடந்து ஒளிர்ந்தது என்பதைத் தலைவியின் முகப்பொழிவுடன் இணைத்துக் கூறுகிறார். அதாவது தலைவனைக் கண்டவுடன் தலைவி பொழிவடைகிறாள். ஏனென்றால் தனக்கு நொதுமலர் திருமணம் நடக்காமல் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள் என்று குறிப்பிடுகிறார்.
பெருமழைப்புலவர், கடல்அலை தரும் முத்து வெண்மணல் மேற்கிடந்து இமைக்கும் என்றது, தலைவன் செய்த தண்ணளி தலைவியின் திருமேனியின்கண் புத்தொளி செய்து இனி என்றென்றும் பேரின்பம் நல்கும் என்கிறார்.
அ. தட்சணாமூர்த்தி, முத்துக்கள் தலைவன் நாட்டில் மனித முயற்சி இன்றியே கிடைக்கும் என்றது தலைவன் நாட்டின் வளத்தைப் பாராட்டியதாகும். மேலும் தலைவனைத் தண்ணந் துறைவன் என்றது, தன் துறைபோல் தானும் தண்மையான பண்புடையவன் என்று குறிப்பதற்காகவே என்கிறார்.
பழைய உரையாசிரியர், கடல் அலைப்புகளில் வந்த முத்து மணற்கண்ணே கிடந்து விளங்குவது என்பதை, தலைவன் தன் வருத்தம் நோக்காது தலைவிக்கு நிலைபெற்ற இன்பத்தைத் தருவான் என்று கூறுகிறார்.
நான்கு வரிகளை மட்டுமே கொண்ட செய்யுளை உரையாசிரியர்கள் மாறுபட்ட கோணங்களில் விளக்குகின்றனர். இதை உரை வேறுபாடு என்று மட்டும் கூறி எளிமையாகக் கடந்து செல்ல முடியாது. இதை அம்மூவனார் என்ற புலவரின் நெய்தல் திணை சார்ந்த படைப்பியலின் உச்சம்தொட்ட வெற்றியென்றே சொல்லவேண்டும்.