FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பக்தியும், பயமும்...

அண்மையில் ஒரே நாளில் திருப்பதி கோயிலுக்கு ரூ. 4 கோடிக்கும் அதிகமான உண்டியல் காணிக்கை வந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

Updated On : 11 ஜூலை 2026, 6:44 am IST
அயோத்தி ராமா் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

பூ மண்டலம் பூக்கத்தொடங்கிய நாள் முதற்கொண்டு மானுடம் பரம்பொருளை நாத்தழும்பேற வாழ்த்தி வழுத்தி வந்திருக்கிறது என்பது வெள்ளிடை மலை. எட்டி நின்று பரமனை வழிபடும் அடியார்களின் இறையன்பை எத்தகைய மொழி வல்லமையாலும் உணர இயலாத உணர்ச்சி மிகு விழுமியங்கள். ஆனால், நாட்டில் நாள்தோறும் புகழாய்ந்த ஆலயங்களில் நடக்கும் முறைகேட்டை கேட்கும் போதும், ஊடக வாயிலாக அறியும்போதும் நம்மை எமன் காட்டுகிற நரஉலக பயம் பற்றிக் கொள்கிறதே!

நானூறு ஆண்டுகள் லட்சக்கணக்கில் உயிர்துறந்தும், சிறை புகுந்தும், தொடர்ந்து போராடியும் பெற்ற ஆலயம் அல்லவா அயோத்தியின் ஸ்ரீ இராமபிரான் திருக்கோயில்! உலகின் கண்வாழும் கோடானுகோடி பக்தர்கள் வாரி வழங்கிய பெருஞ் செல்வத்தால் அல்லவா அற்புத ஆலயம் எழுந்தது. புகழ்பெற்ற வழக்குரைஞர் பராசரன் காலில் காலணி அணியா விரதம் பூண்டு ஆசனத்தில் அமராது, நின்றபடியே பலமணி நேரம் அடுக்கடுக்கான ஆதாரங்களை நீதிமன்றம் முன் சமர்ப்பித்து நீதியை நிலை நிறுத்திய பிறகு பெற்ற தீர்ப்பு அல்லவா அந்த பிரமாண்ட கோயில் கொள்ள காரணமாயிற்று!

அந்த ஆலயத்தில் நிதி முறைகேடா? அதுவும் கோயிலின் அறங்காவலர்களா இந்த முறைகேட்டில் ஈடுபட்டது? ஒரு சொல், ஒரு இல், ஒரு வில் என்ற பேரறத்தை பேணிக்காக்க மானுட சட்டை தாங்கி வாழ்ந்த அயோத்தி மன்னன் இராமன் பிறந்த புண்ணிய பூமியிலா புகழுக்கோர் களங்கம்.

Advertisement

Advertisement

அண்மையில் ஒரே நாளில் திருப்பதி கோயிலுக்கு ரூ. 4 கோடிக்கும் அதிகமான உண்டியல் காணிக்கை வந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. உலகின் மிகப் பெரிய பொருள் வளமிக்க கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனின்பால் பக்தியால் தன் பணத்தை, ஏனைய செல்வங்களான நிலம், வீடு போன்றவற்றை இறைவனுக்குக் காணிக்கையாக மனமுவந்து அளிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இறைவனை மிக அருகில் இருந்து தரிசிப்பவர்கள் அல்லர். எப்போதும் இறைவன் திருமேனியை தீண்டா உத்தமர்கள்.

கோடானு கோடி பரம பக்தர்கள் ஒரு மண்டலம் அனுதினமும் நீராடி, இறைவனின் திருநாமங்களை நாமாவளி கொண்டு சேர்ந்திசைத்து, இருமுடி சுமந்து சுவாமி ஐயப்பனை தன் ஊனக்கண்களைக் கொண்டாவது தரிசிக்க வேண்டும் என்று, தொல்லை பல ஏற்று இனி அல்லன இல்லை என்று நம்பி நாளும் பூஜிக்கிறார்கள்.

சபரிமலையில் அங்கேயும் அர்ச்சகர்கள் துணை கொண்டு கள்ளத்தனமாக தங்கத்தை சுருட்டி விட்டனர் என்று அறிந்தபோது நாடே கொதித்துப் போனது. பாமரன் இன்னும் நம்புகிறான் இறைவனிடம் வேண்டினால், வேண்டிய முழுவதும் தருவான் என்று. ஆனால், பரமனுக்கு பக்கத்தில் இருப்பவர்கட்கு இந்த உணர்வு இல்லையே? ஏன்?

அவர்களின் பக்தி தூய்மையானது இல்லை என்பதால் பொன்னுக்கும், பொருளுக்கும் விரும்பி அழியாப் பழியை சுமக்கின்றனர். முன்னை காலத்தில் மன்னர்களும், இன்னபிற செல்வந்தர்களும் கோயிலில் வீற்றிருக்கும் என்பெருமானுக்கு பலவகைகளில் நிவந்தங்களை அளித்து அனைத்து கோயில் உற்சவங்களும் குறையின்றி நடைபெற அட்டவணை வகுத்து தந்தார்கள். காலப் போக்கில் கோயில்கள் நின்றன. நிவந்தங்கள் தொலைந்து போயின. 'சிவன் சொத்து குலநாசம்' என்று திருநீற்றைக்கூட அளவுடன் பெற்று மகிழ்வார்கள், சான்றோர்கள்.

அந்நியர் படையெடுப்பால், கொள்ளையடிப்பால் கோயில்கள் தகர்ந்து போயின. அரிய கலை படைப்புகள் சேதமுற்றன. பெரும்பான்மை மக்களும் அடிமைகளாய், வந்தேறியவர்களின் காலடியில் நின்று சேவகம் புரியும் நிலையினராய் வாழத்தொடங்கினர். காலம் கரைந்து காவலர்கள் நம்மவர்கள் ஆன பின்பும் கொடுமைகள் பல புதிய அவதாரம் எடுப்பது எங்ஙனம்?

'பக்தியுடையார் காரியத்திற் பதறார்' என்றார் மகாகவி பாரதியார். இவர்கள் தன் பொல்லாப் பணியால் மீளா பழியுற்றனரே! 'கோயிற் பூசை செய்வோர் சிலையை விற்றல் போலும்' என்று பாரதி மனம் நொந்து பாடுவார். இவர்களை எண்ணித்தான் அன்றே பாடியுள்ளார் போலும்! உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் கண்ணனே என்பான் போலதான் புழங்கும், அனைத்திலும் இறைவன் உறைந்து உள்ளான் என்பதை உணராதவர்கள் கையில் பொறுப்பும், அலுவலக அதிகாரமும் அமையப் பெறுமானால் இத்தகைய விபரீதங்கள் விளையக் காரணமாகின்றன.

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பதில் பொருள் உண்டு. இம்மையில் நாம் செய்கிற பாவ, புண்ணியங்கள் ஏனைய பிறவியில் தொடரும் என்பதை மழலைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டும்.

'ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்' தன்மையாலும் 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழியை உணர்த்தும் வகையாலும், அகம் தூய்மை வாய்மையால் காணப்படும் என்ற முறையாலும் மழலைப் பருவத்தே தொடங்கி வாழ்நாள் வரை வாழ வைக்கும் முறையை இல்லம் தொடங்கி கல்விக் கூடம், பணியிடம் வரை சமூகத்தை ஒழுங்குபண்ணும் முறை வேண்டும்.

தான் சம்பாதிக்கும் பாவ-புண்ணியங்களில் தன் உற்றார், உறவினர்க்கும் பங்கு உண்டு என்று நினைத்த வேடன் தான் தேடிய தீயவற்றில் உண்டாகும் பாவத்தை தன் மக்கள் ஏற்க விரும்பவில்லை என்று தெரிந்த பின்னர் வால்மீகி முனிவரானார்.

ஒரு மனிதன் இறக்கும்போது எதுவும் கூடவே செல்லாது எனினும், அவன் தன் வாழ்நாளில் செய்தவற்றால் ஏற்பட்ட பாவ புண்ணியங்கள் கூடவே செல்லும். அதன் விளைவு, அடுத்த பிறவிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு புதுக் கணக்கு தொடங்கப்படும் என்பதை உணர்ந்தால் இறைவனிடத்தில் பக்தியும், பயமும் உண்டாகும்.

பக்தியால் அன்பும், தொண்டும் வளரும். பயத்தால் தீமை செய்யும் எண்ணம் எழாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments