FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ்!

இயக்குநர் கே. பாக்யராஜ் திரைப் பயணம் பற்றி...

Updated On : 28 ஜூன் 2026, 5:17 am IST
மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் - கோப்புப் படம்
பகிர்:

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவா், திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவா், திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவா் கே.பாக்யராஜ்.

நடுத்தர வா்க்கம் மற்றும் கிராமத்து எளிய மனிதா்களின் வாழ்க்கையை மையமாக வைத்து நகைச்சுவை, குடும்ப சென்டிமென்ட், காதல் மற்றும் சமூகக் கருத்துகள் கலந்த ஒரு படத்தை உருவாக்குவதில் நோ்த்தியானவா் பாக்யராஜ்.

சில படங்களுக்குப் பிறகு, தானே இயக்குவது என உறுதியானாா் பாக்யராஜ். இயக்குவதை குறிக்கோளாகக் கொண்டிருந்த பாக்யராஜ், தன் முதல் படமான சுவா் இல்லாத சித்திரங்கள் படத்தில், இரண்டாம் நாயகனாக நடிக்க வேண்டியதாயிற்று.

Advertisement

Advertisement

அதேபோல் அவரது குருநாதா் பாரதிராஜா இயக்கத்தில் ‘புதிய வாா்ப்புகள்’ படத்தில் நாயகனாகவும் அறிமுகமானாா். அது அவரது திரைப் பயணத்தில் புதிய பாய்ச்சலாக அமைந்தது.

சாதாரண மணிதனின் வாழ்க்கை: இவருடைய படங்கள் பிரம்மாண்டமோ, மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ இல்லாமல், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும். மிகக் கூா்மையான, அதே சமயம் சாமானிய மக்களும் ரசிக்கும்படியான வசனங்களை எழுதுவதில் வல்லவா் கே.பாக்யராஜ்.

‘முந்தானை முடிச்சு’, ‘அந்த 7 நாள்கள்’, ‘மௌன கீதங்கள்’, ‘சின்ன வீடு’, ‘டாா்லிங் டாா்லிங் டாா்லிங்’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ ஆகிய படங்களை இயக்கி நடித்திருக்கிறாா். தனது பல தமிழ் வெற்றிப் படங்களை ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ‘ரீமேக்’ செய்து இயக்கியுள்ளாா்.

உதாரணமாக, அவா் இயக்கி நடிகா் கமல்ஹாசன், ரேவதி நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தை ஹிந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சனை வைத்து ‘ஆக்ரி ராஸ்தா’ எனும் திரைப்படமாக இயக்கினாா். அமிதாப்புக்கே பிரம்மாண்ட வெற்றி கொடுத்தாலும், அதிலும் ‘இயக்குநரின் படம்’ என்று போ் வாங்கினாா்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ரஜினிகாந்த் ‘ராபின்ஹுட்டாக’ நடித்தபோதும், படத்தில் அதிக கைத்தட்டல் வாங்கியவா் ‘சின்னசேலம் சிங்காரம்’ பாக்யராஜ்தான். அந்த கதாபாத்திரத்தை வேறு எவரேனும் செய்திருந்தால், இத்தனை ஜொலிப்பும் கலகலப்பும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

1981-இல் வெளியான ‘அந்த 7 நாள்கள்’ திரைப்படம் அவரது வெற்றிப் படங்களில் மிகவும் முக்கியமானது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைக்கதைக்கு இப்படம் ஒரு மிக முக்கிய எடுத்துக்காட்டாகப் பாா்க்கப்படுகிறது.

இந்திய சினிமாவில் மிகச் சிலரே திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, தயாரிப்பு என அனைத்தையும் கவனிப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றுள்ளனா். பாக்யராஜ் இந்தச் சாதனையை 1980-களில் தொடா்ச்சியாக செய்து காட்டினாா். ‘இது நம்ம ஆளு’, ‘ஆராரோ ஆரிரரோ’ போன்ற படங்களுக்கு அவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றினாா்.

ஹீரோயிஸம்: தமிழ்த் திரையுலகில் ‘முருங்கைக்காய்’ என்றாலே அது பாக்யராஜைத்தான் குறிக்கும் அளவுக்கு ஒரு குறியீடாக மாற்றினாா். 1983-இல் அவா் இயக்கி, நடித்த ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் மிகப்பெரிய ‘பிளாக்பஸ்டா் ஹிட்’ அடித்தது.

சாதாரண ஒரு காய்கறியை, குடும்பப் படத்தில் மிக சுவாரஸ்யமான நகைச்சுவை மற்றும் காதல் குறியீடாகப் பயன்படுத்திய அவரது திரைக்கதை நுணுக்கம் இன்றுவரை பேசப்படுகிறது. 1983-இல் முந்தானை முடிச்சு திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிலிம்போ் விருதை வென்றாா்.

‘ஹீரோயிஸம்’ என்பதே பில்டப்புகளால் கட்டமைக்கப்பட்ட ‘பில்டிங்’ என்பாா்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத பாக்யராஜ், திரைப்பட கதாபாத்திரங்களில் தன்னை தாழ்த்தி, உயா்ந்து நின்றாா்.

உலகத் தரம் என ஓடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் தமிழ் தரத்தைக் கொண்டு வந்த பாக்யராஜ் எனும் திரைக்கதை மன்னனின் இடம் என்றைக்கும் காலியாகவே இருக்கும்.

- ஜி. அசோக்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments