முகப்பு
வெள்ளிமணி

வில்வம் ஏற்கும் பெருமாள்

மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கும் ஆற்றல்மிக்கவர் திரிலோக்கி சித்தர்.

Updated On : 3 ஜூலை 2026, 4:40 pm IST
பகிர்:

மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கும் ஆற்றல்மிக்கவர் திரிலோக்கி சித்தர். இவர் யோகம் பயின்று, ஜோதி ஸ்வரூபமாக இறையுடன் ஐக்கியமான இடம் அவர் பெயராலேயே "திரைலோக்கி' என அழைக்கப் பெற்று, தற்பொழுது "திருலோக்கி' என வழங்கப்படுகின்றது.

சோழர் காலத்தில் மிகவும் செழித்திருந்த ஊர். கருவூர்த் தேவர் திருவிசைப்பா செய்வித்த சிவாலயம் அருகில் இருக்கிறது. அக்காலத்தில், "திரைலோக்கிய மாதேவியார் சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டுத் தகவல்கள் மூலம் அறிகின்றோம்.

பரசுராமர் சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால், "ஸ்ரீ பரசுராமேஸ்வரம்' என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. இவ்வூரில் தொன்பெருமை வாய்ந்த மூன்று கோயில்களுள் ஒன்றான ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோயிலைப் பார்ப்போம்.

Advertisement

Advertisement

திருமாலும் தாயாரும் இணைபிரியாதவர்கள். ஆயினும், ஒரு சமயம் ஸ்ரீ மகாலட்சுமித் தாயாரானவள் தான் ஒருக்கணமும் சுவாமியை விட்டுப் பிரியாதவளாய் இருக்க எண்ணி வேண்டினாள்.

மார்க்கண்டேய மகரிஷி சொன்ன உபாயத்தின்படி, பூலோகம் வந்த திருமகள் சரக்கொன்றை மரங்களால் நிறைந்த இங்குள்ள வனத்தில் எழுந்தருளியுள்ள சிவ

பெருமானாகிய சுந்தரேஸ்வரரைச் சிந்தித்து தவத்தில் ஆழ்ந்தாள்.

அச்சமயத்தில் திருமகளின் மூன்று சுவாச கலைகளும் மும்மூன்று இலைகளைக் கொண்ட அதிசய வில்வதளங்களாக உருவெடுத்தன. அவை தெய்வீகச் சக்தியுடைய வில்வ விருட்சங்களாக அப்பகுதி முழுவதும் பரவின.

தாயாரின் ஆழ்ந்த தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷபாரூடராகக் காட்சியளித்தார். அவருடனே பாற்கடலில் (க்ஷீர சமுத்ரம்) அறிதுயில் கொண்டுள்ள அனந்த சயனராகத் திருமாலும் காட்சியளித்தார். மேலும் மகாலட்சுமி விரும்பியவாறு தம்மை விட்டு எப்போதும் நீங்காத வண்ணம் தமது திருமார்பில் நிரந்தரமாக உறைந்திருக்கும் வரத்தை திருமகளுக்கு வழங்கினார்.

தாயார் உறைந்திருக்கும் வில்வ தளங்களையே தாமும் உவந்து ஏற்பதாகவும், அவற்றினால் தம்மை அர்ச்சித்து இத்தலத்தில் வழிபடுவோருக்கு சகல நன்மைகளையும் தந்தருள்வதாக திருமாலும் அருள, அன்று முதல் இத்தலத்தில் வில்வ தளங்களை மட்டும் பெருமாளுக்குச் சாற்றும் வழக்கம் உண்டாயிற்று. தவிர இக்கோயிலுக்குரிய விருட்சமும் வில்வம்தான்.

மூலவரான ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். கருவறையில், தெற்குப்புறத்தில் திருமுகமண்டலத்தின் அருகே ஸ்ரீ லக்ஷ்மி தேவியும், வடபுறத்தில் திருப்பாதங்கள் அருகே ஸ்ரீ பூமாதேவியும், நாபிக்கமலத்திலிருந்து பிரும்மாவும் எழுந்தருளியிருக்கின்றனர்.

ஐந்து தலை ஆதிசேஷன் மீது சங்குசக்கரதாரியாக கீழ்த்திசை நோக்கியவராய் சயனித்த வண்ணம் காட்சி தருகின்றார் இந்தப் பெருமாள். இவர் சுதா மூர்த்தமாக இருப்பதனால் திருமஞ்சனம் நிகழ்த்தப்பெறுவது இல்லை. இத்தலத்தில் தாயாரும் "க்ஷீரநாயகி' என்கிற திருநாமத்துடன் தெற்குப் பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் விளங்குகின்றாள். தாயார் தமது வழிபாட்டுக்காக மூழ்கி நீராடிய தீர்த்தம் லட்சுமி தீர்த்தம் அல்லது க்ஷீர தீர்த்தம் எனப்படுகிறது.

இப்பெருமாளையும் தாயாரையும் வில்வத்தினால் அர்ச்சித்து பால் சம்பந்தப்பட்ட உணவுகளை நிவேதித்து வழிபட்டால் பிரிந்தவர் கூடுவர், தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும், குழந்தைப்பேறு உண்டாகும், பால் பொருள்களை வியாபாரம் செய்பவர்கள் மேன்மை பெறுவர்.

மகாமண்டபத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும், அடுத்து விஷ்ணு துர்கையும் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறார்கள். ஆழ்வார்களையும், நரசிம்மரையும், விஸ்வக்சேனரையும் வெளிப்புற மண்டபத்தில் தரிசிக்கலாம்.

விஷக்கடி, தோல் ஒவ்வாமை வியாதிகள் முதலியவற்றால் அவதிப்படுவோர் இங்குள்ள கருடாழ்வாருக்கு பருப்புப் பூரணம் சேர்த்த மோதகங்களை நிவேதித்து நன்மை அடைகின்றனர். இங்குள்ள ஆஞ்சநேயரின் திருவடிகளில் புது வஸ்திரத்தில் கட்டிய மட்டைத்தேங்காயை சமர்ப்பித்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

சிறப்புமிக்க ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோயிலுக்கு ஜூலை 12 }ஆம் தேதி, காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

தரிசனத்துக்காக காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்தக் கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளுக்கு அருகில் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

- சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments