ஞானம் அருளும் அம்மன்
சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி, பிரளய நீரை ஒற்றி எடுத்தார்.
பூமியில் பிரளயம் ஏற்பட்ட பிறகு, புதிய உலகம் படைக்க பிரம்மன் கேட்டபோது, சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி, பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியது.
பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் ஒற்றியூர் என்ற பெயர் ஏற்பட்ட தலமே சென்னையில் உள்ள இன்றைய திருவொற்றியூர், அந்த சுயம்பு லிங்கமே இறைவன் திருவொற்றீஸ்வரர்.
பிரளயத்துக்குப் பிறகு முதலில் தோன்றிய ஊராகக் கருதப்படுவதால், அக்காலத்தில் ஆதிபுரி என்றும் அழைக்கப்பட்டது. மூலவர் ஆதியில் தோன்றியதால் ஆதிபுரீஸ்வரர் என்றும், திருவாரூர் தியாகேசரைப் போன்றிருப்பதால், தியாகராஜ சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் படம்பக்கநாதர், புற்றிடம் கொண்டார், எழுத்தறியும் பெருமான், காரணிவிடங்கர், மாணிக்கத் தியாகர் உள்ளிட்ட திருநாமங்களும் இவருக்குண்டு. பெயரைப்போல் இங்கு அமைந்துள்ள அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலுக்குப் பெருமைகளும் ஏராளம்.
Advertisement
Advertisement
அகத்தியருக்குத் திருமணக்காட்சி தந்தது, சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் இறைவன் தாமே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தது, கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார் ராமாயணம் எழுதும் காலத்தில் இப்பகுதியில் தங்கியிருந்தது, பட்டினத்தார், தியாகராஜசுவாமி, வள்ளலார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர், வீணை குப்பய்யர் உள்ளிட்ட அருளாளர்களுக்கு அருள்புரிந்தது, அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரால் பாடப்பெற்றது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
கலிய நாயனாரின் அவதாரத் தலம். 1250 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் கற்கோயில் திருப்பணிகளைச் செய்துள்ளார்.
பழைமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் கோயில். இறைவன் ஆதிபுரீஸ்வரர் சுயம்புப் புற்று லிங்கத் திருமேனியாதலால் அபிஷேகம் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை பௌர்ணமியன்று மாலை 6 மணியளவில் சுவாமி மீது சாத்தப்பட்டிருக்கும் தங்கக் கவசம் எடுக்கப்பட்டு, சுவாமியின் விசுவரூப தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாள்களுக்கு புனுகு, சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். பின்னர் சுவாமி மீது மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்படும்.
சுவாமிமீது சாத்தி எடுத்துக் கொடுக்கப்படும் தைலம் மிகவும் சக்தி வாய்ந்தது. இது குழந்தைகளின் கண்திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு போன்ற அனைத்தையும் அகற்றவல்லது.
மூலவர் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, விஷ்ணு, ஆதிசங்கரர், வட்டப்பாறை அம்மன் சந்நிதிகளும், வெளிப்பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி லிங்கங்களும் அமைந்துள்ளன. பக்தர்கள் அவரவர் நட்சத்திரங்களுக்கான லிங்கங்களை வழிபட்டுப் பயன்பெறலாம். மேலும், வெளிப்பிரகாரத்தில், வளர் காளி, திறந்தவெளி ஆகாச லிங்கம், அண்ணாமலையார், நாகலிங்கம், பால சிவன், காளஹஸ்தீஸ்வரர், பைரவர், சுப்ரமண்யர் ஆகியோர் தனிச் சந்நிதியில் அருள்புரிகின்றனர்.
வட்டப்பாறை அம்மன் (காளி) ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கியதாகவும், ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தெப்பக்குளத்தையொட்டி, கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியும், தலவிருட்சமான மகிழம்பூ மரமும் அமைந்துள்ளது. இம்மரத்தினடியில்தான் சுந்தரர்க்கும், சங்கிலியாருக்கும் சிவபெருமானால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில், இவ்வைபவமானது, ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஞான சக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில் ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள்புரிகிறார். இந்த அம்மனை தரிசித்தால் வேண்டுவனயெல்லாம் நிறைவேறுகிறதாம். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பானது.
தரிசனத்துக்காக காலை 6 } 12 மணிவரையும், மாலை 4 } 8.30 மணி வரையும், வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் நாள்முழுவதும் திறந்திருக்கும் சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி கோயிலை பேருந்து, ரயில் மூலமாக எளிதில் அடையலாம்.
- மு.வெங்கடேசன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.