அனைத்து மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க பல்வேறு வழிமுறைகள்: மத்திய அரசு பரிசீலனை
அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க, பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்
தென்னிந்திய மாநிலங்களின் கவலையைப் போக்கும் நோக்கில், அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க, பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மகளிா் இடஒதுக்கீடு சட்டம் தொடா்பான அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்று பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் அந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது. இதையடுத்து அந்த மசோதாவின் புதிய வரைவை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
Advertisement
Advertisement
முன்பு கொண்டுவரப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதிய வரைவு, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களில் தற்போது உள்ள மக்களவை இடங்களின் விகிதத்தை மாற்றமின்றி முழுமையாக வைத்திருக்க பரிந்துரைத்துள்ளது. எனினும் அதுகுறித்து எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
அதேவேளையில், தற்போது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், அது மக்களவையில் தங்கள் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் என்று தென்னிந்திய மாநிலங்கள் கவலை எழுப்பியுள்ளன.
இந்தக் கவலையைப் போக்கும் நோக்கில், அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க, பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே...: தற்போது மேற்கொள்ளப்படும் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியாக காலமாகும் என்பதால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.
இதற்கான புதிய மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் போதிய எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கும் என்று மத்திய அரசுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.
தற்போது மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சுமாா் 300 எம்.பி.க்கள் உள்ளனா். அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை, அதாவது 360 எம்.பி.க்களின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவின்படி, மக்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், மக்களவைத் தொகுதிகளை அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். இதேபோல அந்த மசோதாவின்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், பேரவைத் தொகுதிகளும் அதிகரிக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.