முகப்பு
உலகம்

மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் மீதான வழக்கிற்கு உயர் நீதிமன்றம் தடை

மாலத்தீவுகள் நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு எதிரான வழக்கிற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் இடைக்காலத்

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:28 am IST
பகிர்:

மாலத்தீவுகள் நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு எதிரான வழக்கிற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மாலத்தீவுகள் அதிபராக நஷீத் இருந்தபோது கடந்த ஆண்டு அவரது அரசைக் கவிழ்க்க ராணுவப் புரட்சி நடைபெற்றது. அப்போது குற்றவியல் தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவைக் கைது செய்யுமாறு அவர் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின், அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக முகமது வாஹித் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின், நஷீத் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, நீதிபதியைக் கைது செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

Advertisement

இவ்வழக்கில் அவருக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அவர் தலைநகர் மாலியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சரணடைந்தார்.

அங்கு 11 தினங்கள் தங்கியிருந்த பின், அவர் தூதரகத்தை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து, அவர் கடந்த மார்ச் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மறுநாளே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே, நஷீத் மீதான வழக்கை விசாரிக்க ஹுல்குமாலே நகரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து மாலே உயர் நீதிமன்றத்தில் நஷீத் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நஷீத்தின் வழக்குரைஞர் வாதிடுகையில், ""சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது சட்டப்படியான நடவடிக்கை அல்ல. எனவே, அதை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்'' என்று கோரினார். 

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, சிறப்பு நீதிமன்றத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து தாங்கள் முடிவு செய்யும் வரை நஷீத் மீதான வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். இது நஷீதுக்கு சிறிது ஆறுதலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

முன்னதாக, நஷீத் மீதான வழக்கு என்பது இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அவரைப் போட்டியிட விடாமல் தடுக்கும் அரசியல் உள்நோக்கம் கொண்ட சதி என்று அவரது மாலத்தீவு ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.