முகப்பு
உலகம்

இலங்கை பிரச்னையில் இந்தியா பொறுப்புடன் செயல்படவில்லை: கோத்தபய ராஜபட்ச

இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போர் 30 ஆண்டுகள் நீடித்திருக்காது என இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபட்ச குற்றம்சாட்டி உள்ளார்.

Updated On : 12 ஏப்ரல் 2013, 1:17 am IST
பகிர்:

இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போர் 30 ஆண்டுகள் நீடித்திருக்காது என இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபட்ச குற்றம்சாட்டி உள்ளார்.

ஐ.நா.சபையின் இந்தியாவுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் எஸ்.பூரி, "இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு ஏன் சரியானது' என்ற தலைப்பில் முன்னணி ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கோத்தபய ராஜபட்ச இலங்கை நாளிதழுக்கு அளித்த பேட்டி: இலங்கையில் பயங்கரவாதம் வளர்ந்ததற்கு இந்திய அரசு முக்கிய காரணமாக இருந்தது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து இந்தியா ஒருபோதும் தன்னை விடுவித்துக்க கொள்ள முடியாது.

Advertisement

Advertisement

பாதுகாப்புப் படையினரின் மூன்று ஆண்டு கால தொடர் போர் காரணமாக, 2009ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டது. அவ்வாறு பயங்கரவாதத்தை ஒழிக்காமல் இருந்திருந்தால் அனைத்து இன மக்களும் போரினால் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

1987ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, ஜெயவர்த்தனே தலைமையிலான இலங்கை அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாட்டில் இந்தியா தலையிட்டது. இதில் ஐ.நா.சபையின் இந்தியாவுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் எஸ்.பூரி முக்கிய பங்கு வகித்தார். அப்போதைய இந்தியாவின் செயல்பாட்டை அறிந்தவர்களுள் அவரும் ஒருவர்.

இறுதிக்கட்ட போரின்போது, கடைசி 100 நாள்கள் நடைபெற்ற ராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பூரி கூறியுள்ளார். ஆனால், பயங்கரவாதம் குறித்து இவர்கள் மொனமாக இருப்பது ஏன்?

பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்காதவர்கள், போர்க்கால அத்துமீறல் குறித்து குரல் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. இலங்கையில் தனி ஈழம் கோரி கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்துக்கு இந்தியாதான் காரணம்.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்ட 1988-ம் ஆண்டில் இந்தியாவில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், மாலத்தீவு மீது தாக்குதல் நடத்தினர். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா பொறுப்புடன் செயல்படவில்லை.

எனவே, இலங்கை உள் நாட்டுப் போர் குறித்து விசாரிப்பதாக இருந்தால், இந்தியாவின் தலையீடு உள்பட ஒருங்கிணைந்த விசாரணை மேற்கொள்வது குறித்து சர்வதேச சமுதாயம் ஆலோசிக்க வேண்டும் என்றார் கோத்தபய ராஜபட்ச.

இடதுசாரி கட்சிகள் கண்டனம்: இந்தியாவுக்கு எதிராக இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்த கருத்துக்கு இடதுசாரி கட்சிகள் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தன.

""வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் செயல்பாடு குறித்து வெளிப்படையாக பேசிய பிறகும் அதைத் தட்டிக் கேட்காமல் இருக்கும் இந்தியாவின் நிலை, அதன் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி. ராஜா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.