முகப்பு
உலகம்

ஆளில்லா விமான தாக்குதலை நிறுத்த அமெரிக்கா மறுப்பு

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்த முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறி உள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2013, 11:30 pm IST
பகிர்:

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்த முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறி உள்ளது.

பாகிஸ்தானில் முதன் முறையாக சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பின்னர் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மற்றும் ஜான் கெர்ரி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை தொடரும். இது விஷயத்தில் அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்த முடியாது.

இந்த செயல் பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவதாக உள்ளது என கூறப்படுகிறது. இதை ஏற்க முடியாது.

அய்மன் அல் ஜவாஹிரி தலைமையிலான அல் காய்தா அமைப்பினர் இறையாண்மையை மீறி பொதுமக்கள் மீதும் மசூதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எனவே, இத்தகைய பயங்கரவாத செயலைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆளில்லா விமானத் தாக்குதல் மிகவும் அவசியமாகிறது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் அனைவரையும் உடனடியாக வாபஸ் பெறும் எண்ணம் இல்லை. ஆப்கன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வரை இருப்பார்கள். ஆப்கனில் அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக தலிபான் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவார்கள் என்றனர்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் உள்பட பல்வேறு பிரச்னை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இருதரப்பு உறவை புதுப்பிக்கும் முயற்சியாக கெர்ரி ஒரு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை இஸ்லாமாபாதில் வரவேற்கும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.