முகப்பு
உலகம்

வங்கதேசம்: கலீதாவுக்கு ஏப்.22 வரை ஜாமீன் நீட்டிப்பு

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கான ஜாமீனை, வரும் 22-ஆம் தேதி வரை அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை நீட்டித்தது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 12:40 am IST
பகிர்:

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கான ஜாமீனை, வரும் 22-ஆம் தேதி வரை அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை நீட்டித்தது.
வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக நன்கொடை பெற்ற வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை நீட்டிக்குமாறு அவரது வழக்குரைஞர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பான விசாரணையை வியாழக்கிழமை மேற்கொள்ள கடந்த மாதம் 28-ஆம் தேதி நீதிமன்றம் முடிவு செய்தது.
இந்த நிலையில், குறிப்பிட்டபடி கலீதா ஜியாவின் மனுவை வியாழக்கிழமை பரிசீலித்த நீதிபதி முகமது அக்தாருஸமான், ஜியாவுக்கான ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும், வரும் 22-ஆம் தேதிக்குள் கலீதா ஜியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் அவர் உத்தரவிட்டார்.
'ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.10 கோடி டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
கலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் கலீதா ஜியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments