இலங்கை பிரதமராக ராஜபட்சவை அங்கீகரிக்க முடியாது: நாடாளுமன்றத் தலைவர்
பெரும்பான்மையை நிரூபிக்காதவரை ராஜபட்சவை பிரதமராக அங்கீகரிக்க முடியாது என்று இலங்கை நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்காதவரை ராஜபட்சவை பிரதமராக அங்கீகரிக்க முடியாது என்று இலங்கை நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரசியல் களத்தில் அதிபர் சிறீசேனா அண்மையில் மேற்கொண்ட மாற்றங்கள் அரசமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று பெரும்பாலான எம்.பி.க்கள் கருதுவதாகவும் அவர்கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று சிறீசேனா அறிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக கரு ஜெயசூர்யா அறிக்கை ஒன்றை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களில் எனது நிலைப்பாடு என்ன? என்பதை சத்தியத்தின் பெயராலும், நீதியின் பெயராலும் உலகுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அரசின் உயர்மட்டத்தில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு பல எம்.பி.க்கள் எனக்கு கடிதம் எழுதினர்.
விக்ரமசிங்கவுக்கு பதிலாக ராஜபட்சவை பிரதமராக நியமித்தது சட்ட விரோதமான ஒன்று என்று அதில் பெரும்பாலானோர் குறிப்பிட்டிருந்தனர். மேலும், நாடாளுமன்றத்தை முடக்கி வைத்ததும் ஏற்கத்தக்க நடவடிக்கை அல்ல என்றனர்.
நாடாளுமன்றத்தை சட்டப்படி கூட்டாமல் எம்.பி.க்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு எதிராக செயலாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. பிரதமர் பொறுப்பை பொருத்தவரை ஏற்கெனவே இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் விரும்புகின்றனர்.
ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை நான் அவரை பிரதமராக அங்கீகரிக்க மாட்டேன். மாறாக, பழைய நிலையே நீடிக்க உத்தரவிடுவேன் என்று அந்த அறிக்கையில் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அதிபர் சிறீசேனா அண்மையில் அதிரடியாக நீக்கியதுடன், அவருக்கு பதிலாக ராஜபட்சவை அப்பொறுப்பில் நியமித்தார். இது, இலங்கையில் மிகப் பெரிய குழப்பங்களுக்கு வழிவகுத்தது. இதனிடையே, சிறீசேனாவின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய விக்ரமசிங்க, பிரதமர் பதவியில் தாம் இன்னமும் நீடிப்பதாகத் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், இலங்கை நாடாளுமன்றம் விரைவில் கூடவுள்ளதாகவும், ராஜபட்ச மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான பலம் ராஜபட்சவுக்கும் இல்லை; விக்ரமசிங்கவுக்கும் இல்லை. இதனால் உறுப்பினர்களை அணி மாறச் செய்வதற்கான குதிரை பேரங்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை விக்ரமசிங்கவின் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள், ராஜபட்ச அணிக்கு தாவியுள்ளதாகவும், அதற்கு பிரதிபலனாக அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமும் ராஜபட்ச அண்மையில் ஆதரவு கோரியிருந்தார். ஆனால், அதனை அவர் நிராகரித்ததுடன், ராஜபட்சவுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 16 பேர் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இடதுசாரிகளின் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜேவிபி) 6 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில், வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் விளங்கும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற புதிய தலைவர் பொறுப்பேற்பு!
இலங்கை அரசியலில் அடுத்த திருப்பமாக அந்நாட்டின் புதிய நாடாளுமன்றத் தலைவராக தினேஷ் குணவர்த்தனா பொறுப்பேற்றுள்ளார். அவர் சிறீசேனாவின் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பதவியை கரு. ஜெயசூர்யா வகித்து வரும் நிலையில், அவரை நீக்கிவிட்டு தினேஷ் குணவர்த்தனாவை அண்மையில் சிறீசேனா நியமித்தார். அதன் அடிப்படையில், குணவர்த்தனா தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டார். இலங்கை பிரதமர் பதவிக்கு ராஜபட்சவும், ரணில் விக்ரமசிங்கவும் தனித்தனியே உரிமை கோரி வரும் நிலையில், தற்போது நாடாளுமன்றத் தலைவர் பொறுப்பிலும் இருவர் நீடிப்பது புதிய குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது.
ரணில் கட்சி எம்.பி.க்கள் கைது
ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜபட்சவுக்கு 113 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது
மஹிந்த ராஜபட்சவுக்கு 113 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராஜபட்சவுடன், சிறீசேனாவும் கலந்து கொண்டார். அப்போது சிறீசேனா பேசியதாவது:
Advertisement
Advertisement
113 எம்.பி.க்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. நான் எந்த நடவடிக்கையை எடுத்தேனோ, அந்த நடவடிக்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். ராஜபட்சவை பிரதமராக நியமிக்கும் முன்பு, நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யா, துணை பிரதமர் சஜித் பிரேமதேஸா ஆகியோருடன் நான் பேசினேன். அப்போது அவர்களை பிரதமராக நியமிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தேன். ஆனால் எனது விருப்பத்தை அவர்கள் இருவரும் நிராகரித்து விட்டனர்.
இதற்கு தங்கள் கட்சித் தலைவரை (ரணில் விக்ரமசிங்க) எதிர்ப்பதற்கு அவர்கள் விரும்பாததே காரணமாகும் என்றார் சிறீசேனா.
ராஜபட்சவுடன் சிறீசேனா கூட்டணி சேர்ந்தபிறகு, இருவரும் சேர்ந்து கலந்து கொண்ட முதல் பொது கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.