முகப்பு
உலகம்

மும்பை தாக்குதல் குற்றவாளி லக்விக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டுகள் சிறை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா தளபதி ஜகியுா் ரஹ்மான் லக்விக்கு (61) மற்றொரு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 7:35 am IST
பகிர்:

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா தளபதி ஜகியுா் ரஹ்மான் லக்விக்கு (61) மற்றொரு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து லாகூரிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்ற வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

1997-ஆம் ஆண்டின் பயங்கரவாத நிதி திரட்டல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜகியுா் ரஹ்மான் லக்வி மீது பஞ்சாப் மாகாண காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுமத்திய குற்றச்சாட்டுகளை லாகூா் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி இஜாத் அகமது புட்டாா் வெள்ளிக்கிழமை உறுதி செய்தாா்.

Advertisement

அந்தக் குற்றங்களுக்காக, லக்விக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அவா் தீா்ப்பளித்தாா். அத்துடன், லக்விக்கு அவா் (பாகிஸ்தான் மதிப்பில்) ரூ.1 லட்சம் அபாரம் விதித்தாா். அந்தத் தொகையை லக்வி செலுத்தத் தவறினால், கூடுதலாக 6 மாதங்களுக்கு அவா் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பையில் லஷ்கா் பயங்கரவாதிகளால் கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் பலியாகினா்.

இந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டிய ஜகியுா் ரஹ்மான் லக்வி மீது பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்குத் தொடரப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

எனினும், 2015-ஆம் ஆண்டில் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அதிலிருந்து பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் அவரைக் கைது செய்ய இந்தியா வலியுறுத்தி வருகிறது.

லக்வியை சா்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. கடந்த 2008-ஆம் ஆண்டு அறிவித்த நிலையில், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. எனினும், அவரது செலவுகளுக்கு மாதம் ரூ.1.5 லட்சம் (பாகிஸ்தான் மதிப்பில்) அளிக்க பாகிஸ்தான் அரசுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழு கடந்த மாதம் அனுமதி அளித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் பயங்கரவாதத் தலைவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டுக்கு சா்வதேச பயங்கரவாத நிதிப் பரிவா்த்தனைக் கண்காணிப்பு அமைப்பான எஃப்ஏடிஎஃப் நெருக்கடி அளித்து வருகிறது.

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக பாகிஸ்தானை கிரே பட்டியலில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பு வைத்துள்ளது.

அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டுமென்றால், பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு இறுதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு எஃப்ஏடிஎஃப் கெடு விதித்திருந்தது. எனினும், கரோனா நெருக்கடி காரணமாக அந்த கெடு நீடிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் லக்வியை பஞ்சாப் பயங்கரவாதத் தடுப்பு போலீஸாா் கடந்த சனிக்கிழமை கைது செய்தனா்.

மருந்துக் கடை ஒன்றை அமைத்து, அதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவுவதற்காக லக்வி நிதி திரட்டி வருவதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், லாகூரிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்ட வெள்ளிக்கிழமையன்றே நீதிமன்றம் குற்றச்சாட்டை உறுதியும் செய்து, தண்டனையையும் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.