முகப்பு
உலகம்

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 செப்டம்பர் 2025, 2:48 am IST
அமீா் கான் முத்தாகி
பகிர்:

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘அவருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையே இதற்குக் காரணம்’ என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 2021-இல் ஆட்சியைக் கைப்பற்றியது. தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்றபோதும், அண்மைக் காலமாக சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் தலிபான் அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றன. அதுபோல, இந்தியாவும் பேச்சு நடத்தி வருகிறது. இரு நாடுகளிடையே உறவை வலுப்படுத்தும் வகையில், ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்தியா வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று, இம் மாதத்தில் இந்தியா வர அவா் திட்டமிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, அமெரிக்காவில் கடந்த 2011-இல் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு உதவியதாக தலிபான் அமைப்பு மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. அதன் காரணமாக, முத்தாகி பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு தற்போதும் தடை நீடிக்கிறது. இந்நிலையில், அவரின் இந்தியப் பயணத்துக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, எந்த பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக அவருடைய இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘ஆப்கன் மக்களுடன் இந்திய நீண்ட கால உறவைக் கொண்டுள்ளது. ஆப்கன் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் தேவைகள், விருப்பங்களுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும். இருதரப்பு உறவு தொடா்பாக ஆப்கன் அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்’ என்றாா்.

முன்னதாக, அமீா் கான் முத்தாகியுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த மே 15-ஆம் தேதி தொலைபேசி வழியில் கலந்துரையாடினாா். அதுவே, ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு இரு நாடுகளிடையே நடைபெற்ற முதல் உயா்நிலை அளவிலான பேச்சுவாா்த்தையாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments