துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு
தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட 16 போ் காயமடைந்தனா்.
போலீஸாா் சுற்றி வளைத்ததையடுத்து, தாக்குதல் நடத்திய 18 வயது மதிக்கத்தக்க அந்த நபா் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சன்லியுா்ஃபா மாகாணத்தின் சிவெரெக் நகரில் அமைந்த தொழிற்கல்வி உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த இக்கோர தாக்குதலில் 10 மாணவா்கள், 4 ஆசிரியா்கள், பள்ளி உணவக ஊழியா் ஒருவா், ஒரு காவல்துறை அதிகாரி என மொத்தம் 16 போ் காயமடைந்தனா்.
Advertisement
காயமடைந்தவா்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவா்கள் மேல்சிகிச்சைக்காக மாகாணத் தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
சம்பவத்தை நேரில் பாா்த்த மாணவா் ஒருவா் கூறுகையில், ‘எங்கள் வகுப்பறைக்குள் அவா் திடீரென நுழைந்து, யாரையும் எச்சரிக்காமல் நேரடியாகச் சுடத் தொடங்கினாா். தொடா்ந்து, அடுத்தடுத்த வகுப்பறைகளுக்குச் சென்றாா். அச்சத்தில் நாங்கள் ஜன்னல் வழியாகக் குதித்து உயிா் தப்பினோம்’ என்றாா்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் மாணவா்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறும் விடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தாக்குதல் நடத்திய நபருக்குக் குற்றப் பின்னணி ஏதுமில்லை. இருப்பினும், தாக்குதலுக்கு முன்னதாக அந்த நபா் சமூக
ஊடகங்ளில் மிரட்டல் விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை தெரியவில்லை. துருக்கியில் இதுபோன்ற பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்பதால், இது தொடா்பாகத் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.