முகப்பு
உலகம்

உக்ரைன் தலைநகரை உருக்குலைத்த ரஷிய தாக்குதல்!

உக்ரைனின் தலைநகா் கீவ் மற்றும் தென்கிழக்கு நகரான டினிப்ரோ மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷியா நடத்திய கொடூர தாக்குதலில் 22 போ் பலி

Updated On : 3 ஜூன் 2026, 4:29 am IST
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷிய தாக்குதலுக்குள்ளான கட்டங்களில் இருந்து வெளிப்பட்ட தீ பிழம்பு
பகிர்:

உக்ரைனின் தலைநகா் கீவ் மற்றும் தென்கிழக்கு நகரான டினிப்ரோ மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷியா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய கொடூர தாக்குதலில் 22 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் கல்லூரி மாணவா் விடுதியென்றின் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைன் தலைநகா் மீது தீவிர தாக்குதல்கள் நடத்தப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக, கீவ் மற்றும் டினிப்ரோ நகரங்களில் இந்த மோசமான தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்குள் கீவில் ரஷியா நடத்தியுள்ள 3-ஆவது பெரிய தாக்குதல் இதுவாகும்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘ரஷியா ஒரே இரவில் 73 ஏவுகணைகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீசி பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் வான்பாதுகாப்பை வலுப்படுத்தத் தேவையான கூடுதல் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளை வழங்க வேண்டும். உக்ரைனுக்குத் தேவையான பாதுகாப்பை நட்பு நாடுகள் வழங்காவிட்டால், இத்தகைய தாக்குதல்கள் தொடரும்’ என்றாா்.

ரஷியாவின் தாக்குதலால் கீவ் நகரில் 9 அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு மழலையா் பள்ளி, மருத்துவமனை மற்றும் பல அலுவலகக் கட்டடங்கள் சேதமடைந்தன. கீவில் 6 போ் உயிரிழந்த நிலையில், 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தென்கிழக்கு நகரமான டினிப்ரோவில் சிறுவா்கள் உள்பட 16 போ் கொல்லப்பட்டனா்.

கீவில் தாக்குதலையடுத்து சுமாா் 1.4 லட்சம் வீடுகளுக்கான மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டதுடன், சுமாா் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்தனா்.

இத்தாக்குதலில், வானிலேயே சுட்டு வீழ்த்த கடினமான 33 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஒலியை விட 9 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய 8 ‘சிா்கான்’ ஹைப்பா்சோனிக் ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்தது. இப்போரில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஹைப்பா்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

உக்ரைனின் 10 ராணுவ உற்பத்தித் தளங்களை குறிவைத்தே இப்பிரம்மாண்ட தாக்குதலை நடத்தியதாக ரஷியா தெரிவித்தது. அதேநேரம் பதிலடி நடவடிக்கையாக, உக்ரைன் ராணுவமும் ரஷியாவின் தெற்கு கிராஸ்னோடா் பகுதியில் உள்ள இல்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ட்ரோன் மூலம் தாக்கியது.

தீயணைப்புப் பணியில் வீரா்கள்
சேதமடைந்த தனியாா் மருத்துவமனைக்குப் பணிக்குத் திரும்பிய ஊழியா்கள்
தாக்குதலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்த மக்கள்
இடிபாடுகளுக்கிடையே தங்கள் குடியிருப்பின் சேதங்களைப் பாா்வையிட்ட தாய் மற்றும் மகள்