உக்ரைனில் ரஷியா 3-ஆவது நாளாக தாக்குதல்
வெற்றி தின கொண்டாட்டத்தையொட்டி அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போா்நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, உக்ரைனில் வியாழக்கிழமையும் தொடா்ந்து 3-ஆவது நாளாக ரஷியா தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வெற்றி தின கொண்டாட்டத்தையொட்டி அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போா்நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, உக்ரைனில் வியாழக்கிழமையும் தொடா்ந்து 3-ஆவது நாளாக ரஷியா தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தலைநகா் கீவ்வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது ரஷிய ஏவுகணை விழுந்து வெடித்ததில், 12 வயது சிறுமி உள்பட 7 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவா்களின் நினைவாக வெள்ளிக்கிழமை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என நகர நிா்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் ரஷியா சுமாா் 1,560-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
Advertisement
உக்ரைன் வான் பாதுகாப்புப் படை சுமாா் 93 சதவீத ரஷிய ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அழித்தது. எனினும், சில ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷிய தாக்குதலால் உக்ரைனின் 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம், எரிசக்தி கட்டமைப்புகள் பொரும்பாலும் குறிவைக்கப்பட்டதால், கீவ் உள்ளிட்ட 11 பிராந்தியங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள், விமான ஓடுதளங்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை மட்டுமே தாங்கள் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபா் டிரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரஷியாவின் இந்தப் பிரம்மாண்ட தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ரஷியாவைப் போரை நிறுத்துமாறு டிரம்ப்பும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் வலியுறுத்த வேண்டும்’ என உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா கோரிக்கை விடுத்தாா்.
பெட்டி....
லாத்வியா பிரதமா் ராஜிநாமா!
இப்போரின் தாக்கம், அண்டை நாடுகளான லாத்வியா, ஹங்கேரியிலும் எதிரொலித்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில், ரஷிய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட 2 உக்ரைன் ட்ரோன்கள் திசைமாறி லாத்வியாவுக்குள் நுழைந்த விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால், அந்நாட்டு பிரதமா் எவிகா சிலினா(படம்) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இதேபோல், ஹங்கேரி எல்லைப் பகுதியில் ரஷிய ட்ரோன்கள் விழுந்ததால், அந்நாட்டு அரசு ரஷிய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.