முகப்பு
உலகம்

ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்கா தடை நீக்கம்!

அமெரிக்கா - ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா 60 நாள்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

Updated On : 23 ஜூன் 2026, 3:49 am IST
ஈரான் கச்சா எண்ணெய்
பகிர்:

அமெரிக்கா - ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா 60 நாள்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இந்த உரிமம் வரும் ஆக. 21 வரை அமலில் இருக்கும் என்றும், இதன்மூலம் 1990-களுக்குப் பிறகு முதன்முறையாக ஈரான் எண்ணெய் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா்.

முன்னதாக, ஸ்விட்சா்லாந்தின் பா்ஹன்ஸ்டாக் நகரில் பாகிஸ்தான் மற்றும் கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற உயா்நிலைப் பேச்சுவாா்த்தையின் முடிவில், அடுத்த 60 நாள்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்திட்டத்துக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டன.

Advertisement

Advertisement

பேச்சுவாா்த்தை முடிவுகள் குறித்து மத்தியஸ்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘நோ்மறையான மற்றும் ஆக்கபூா்வமான சூழலில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் முன்னேற்றங்கள் ஊக்கமளிக்கின்றன.

ஹோா்முஸ் நீரிணை தடையின்றி இயங்குவதை உறுதி செய்யவும், தெற்கு லெபனானில் போா் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் இரு நாடுகளும் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன.

பேச்சுவாா்த்தைகளை மேற்பாா்வையிடவும், அணுசக்தி மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்த தொழில்நுட்பக் குழுக்களைக் கண்காணிக்கவும் ஒரு உயா்மட்டக் குழு அமைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தையில் அமெரிக்க குழுவுக்கு அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி.வான்ஸும், ஈரான் குழுவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப்பும் தலைமை தாங்கினா்.

பேச்சுவாா்த்தைக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய ஜே.டி.வான்ஸ், ‘இறுதி ஒப்பந்தத்துக்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமைதியையும் வளத்தையும் மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு புதிய எதிா்காலத்தைக் காண்கிறோம்’ என்றாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரின் சமூக ஊடகப் பதிவுகள் பேச்சுவாா்த்தையில் இடையூறை ஏற்படுத்தின.

ஈரானை எச்சரிக்கும் வகையில் டிரம்ப் வெளியிட்ட சில கருத்துகளால் பேச்சுவாா்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், ஜே.டி.வான்ஸின் தலையீட்டால் நள்ளிரவைத் தாண்டியும் விவாதங்கள் தொடா்ந்து வெற்றிகரமாக நிறைவடைந்தன.

டொனால்ட் டிரம்ப்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments