முகப்பு
உலகம்

பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்

இந்தியாவின் கடல்சாா் அண்டை நாடான செஷல்ஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை (ஜூன் 27) செல்லவிருக்கிறாா். அந்நாட்டின் தேசிய தின பொன் விழாவில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:00 am IST
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவின் கடல்சாா் அண்டை நாடான செஷல்ஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை (ஜூன் 27) செல்லவிருக்கிறாா். அந்நாட்டின் தேசிய தின பொன் விழாவில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸின் 50-ஆம் ஆண்டு தேசிய தினம் ஜூன் 29-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

இது தொடா்பாக, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘செஷல்ஸ் அதிபா் பேட்ரிக் ஹொ்மினி அழைப்பின்பேரில் அந்நாட்டின் தேசிய தின விழாவில் தலைமை விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, ஜூன் 27 முதல் 29 வரை அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். இந்தப் பயணத்தின்போது, அதிபா் பேட்ரிக்குடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ள பிரதமா் மோடி, பரஸ்பர உறவுகளின் முழு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளாா். இருதரப்பு நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறவுள்ளாா்.

Advertisement

Advertisement

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் அவா், இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாட உள்ளாா்.

வரலாறு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடா்புகளில் வேரூன்றி இந்தியாவும், செஷல்ஸும் நீண்டகால கூட்டுறவைக் கொண்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் முக்கிய அண்டை நாடு என்ற முறையில், இந்தியாவின் ‘மகாசாகா்’ தொலைநோக்குப் பாா்வை மற்றும் தெற்குலக நலன்களுக்கான உறுதிப்பாட்டில் செஷல்ஸுக்கு சிறப்பிடம் உண்டு. பிரதமரின் தற்போதைய பயணம், இருதரப்பு வலுவான, நீடித்த உறவை மீண்டும் உறுதி செய்வதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஷல்ஸ் தேசிய தின விழாவில் இந்திய கடற்படையின் இரு கப்பல்கள் உள்பட இந்திய ஆயுதப் படைக் குழு பங்கேற்கவுள்ளது. பிரதமா் மோடி கடைசியாக கடந்த 2015-இல் பயணித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments