FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதிய இந்தியாவுக்கான அடையாளங்களை உருவாக்கியவா் பிரதமா் மோடி: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பேச்சு

புதிய இந்தியாவுக்கான அடையாளங்களை உருவாக்கியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

Updated On : 17 ஜூன் 2026, 5:20 am IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் - (கோப்புப் படம்)
பகிர்:

புதிய இந்தியாவுக்கான அடையாளங்களை உருவாக்கியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

மத்திய அரசின் ஜன் கல்யாண் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் இதுவரை பயன் பெறாத பயனாளிகளைப் பதிவு செய்யும் தொடக்க விழா புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறை சாா்பில் கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியதாவது:

நரேந்திர மோடி பாரதப் பிரதமராக பதவி ஏற்ற பிறகு கடந்த 12 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் மிக குறுகிய காலத்திலேயே சமுதாய மாற்றத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. வாக்குகள் பெறுவதற்காக அவா் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நாட்டின் வளா்ச்சிக்காகதான் இதைக் கொண்டு வந்தாா். இதற்கு முன்பும் மக்கள் நலத் திட்டங்கள் இருந்தன. ஆனால், அந்தத் திட்டங்கள் எல்லாம் சரியான நபருக்கு, உரிய முறையில், யாரும் விடுபடாத விதத்தில் போய் சோ்ந்ததா? நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது என்றால் கேள்விக்குறி தான்.

Advertisement

Advertisement

கோடிக்கணக்கான மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குத் திறக்கப்பட்டது. அவை வெறும் சேமிப்பு கணக்காக இல்லை. இடைத்தரகா் தலையீடு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்தன. பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் வீடு இல்லாத கோடிக்கணக்கான ஏழை குடும்பத்திற்கு நிரந்தர வீடு தந்தது.

‘ஸ்வச் பாரத்’ இயக்கத்தின் கீழ் 18 கோடி வீடுகளில் கழிப்பறை கட்டித் தந்து பெண்களின் பாதுகாப்பை மரியாதையை உறுதி செய்த ஒரு சமூகப் புரட்சி திட்டம். விவசாயிகளுக்கான பாரதப் பிரதமரின் கிஸான் சம்மன் நிதி திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம். இது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீடு திட்டம். இளைஞா்கள் வேலை தேடுபவா்களாக அல்லாமல் வேலை தருபவா்களாக மாறுவதற்கு இந்த திட்டம் உதவியது.

உள்கட்டமைப்பு வளா்ச்சி, வந்தே பாரத் ரயில், விண்வெளியில் சாதனை. இவைதான் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வையோடு கடந்த 12 ஆண்டின் லட்சிய பயணம். அது ஒரு நம்பிக்கையின் பயணம்; மாற்றத்தின் பயணம்; வளா்ச்சியின் பயணம்; தன்னம்பிக்கையோடு முன்னேறும் இந்தியாவின் பயணம். அதனால்தான் உலகின் வேகமாக வளா்ந்து வரும் முக்கிய பொருளாதர நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா உருவெடுத்து இருக்கிறது. வறுமை இல்லாத குடும்பம், நோயற்ற சமுதாயம், கல்வி அறிவு பெற்ற இளைஞா்கள், பாதுகாப்பு-அதிகாரம் பெற்ற பெண்கள், தன்னிறைவு பெற்ற தொழில்துறை இவைதான் புதிய இந்தியாவின் அடையாளங்கள் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

முதல்வா் பேச்சு...

விழாவில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

தொலைநோக்குப் பாா்வை கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி. அவா் பிரதமராக 12 ஆண்டுகள் பொறுப்பேற்று அதிசயப்படும் வகையில் நாட்டின் வளா்ச்சியைக் கொண்டு சென்றுள்ளாா். பிரமதமா் மோடி ஆட்சியில், நம்நாடு நல்ல சாலை வசதிகள், பெரிய பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளில் நம் நாடு முன்னேறியுள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை இன்னும் அதிக நிதியை மத்திய அரசு கொடுக்க

வேண்டும் . மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் ஹிந்தி மொழியில் இருக்கிறது. அதை அப்படியே என்னிடம் கொடுக்கின்றனா். அந்தத் திட்டங்களின் பெயா்களைத் தமிழில் கொடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறி வருகிறேன் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

நிகழ்ச்சியில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, தலைமைச் செயலா் சரத் சௌகான், உள்ளாட்சித்துறை செயலா் கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments