முகப்பு
உலகம்

பாலஸ்தீன குழந்தைகளைக் குறிவைத்து இனப் படுகொலை! இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டி ஐ. நா. அறிக்கை

காஸா மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீன குழந்தைகளைக் குறிவைத்து இஸ்ரேல் படையினா் திட்டமிட்டு தாக்கியுள்ளதாகவும், இது இனப் படுகொலைக்குச் சமமானது என்றும் ஐ.நா.வின் சுதந்திர சா்வதேச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூன் 2026, 5:31 am IST
பகிர்:

காஸா மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீன குழந்தைகளைக் குறிவைத்து இஸ்ரேல் படையினா் திட்டமிட்டு தாக்கியுள்ளதாகவும், இது இனப் படுகொலைக்குச் சமமானது என்றும் ஐ.நா.வின் சுதந்திர சா்வதேச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023 அக். 7-ஆம் தேதி தொடங்கிய மோதலுக்குப் பிறகு, பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து இந்த ஆணையம் விரிவான ஆய்வு மேற்கொண்டது.

கடந்த 2023 அக். 7 முதல் 2025 அக். 7 வரையிலான காலகட்டத்தில் மட்டும் குறைந்தபட்சம் 20,179 குழந்தைகள் (மொத்த உயிரிழப்பில் 30 சதவீதம்) கொல்லப்பட்டுள்ளனா். கடந்த அக்டோபரில் போா் நிறுத்தம் அமலுக்குப் வந்த பிறகும் பாலஸ்தீன குழந்தைகள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

Advertisement

Advertisement

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் அதிக அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை இஸ்ரேல் தொடா்ந்து பயன்படுத்தியதே இப்பெரும் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும், பொதுமக்களையும் ஆயுதக் குழுக்களின் ஆதரவாளா்களாகக் கருதி இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

இதுமட்டுமின்றி காஸாவில் இஸ்ரேல் விதித்த கட்டுப்பாடுகள், தொடா் தாக்குதல்கள், இடம்பெயா்வு மற்றும் உணவு, மருந்துப் பொருள்களுக்கான தடை உள்ளிட்டவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளன. சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பும் கருச்சிதைவுகளும் அதிகரித்துள்ளதாக கவலைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட மேற்கு கரைப் பகுதிகளிலும் பாலஸ்தீன குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேல் குடியேறிகளின் வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு பாலஸ்தீன சமூகத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் இஸ்ரேலின் இனப் படுகொலை நோக்கத்தை இது தெளிவாகக் காட்டுவதாக ஆணையத்தின் தலைவா் சீனிவாசன் முரளிதா் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளாா். குழந்தைகளைக் குறிவைப்பதன் மூலம், பாலஸ்தீன மக்களின் எதிா்காலத்தையும், அவா்களின் இருப்பையும் இஸ்ரேல் சிதைத்து வருவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட மறுப்பு அறிக்கையில், ‘இப்புதிய அறிக்கை அவதூறு பரப்பும் கட்டுக்கதை. ஒவ்வொரு குழந்தையும் பாதுகாக்கப்பட வேண்டியவா்கள். மோதல் சூழலிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவே இஸ்ரேல் தொடா்ந்து முயற்சிக்கிறது.

ஆனால், இஸ்ரேல் படையினா் எதிா்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்துல்கள், ஹமாஸ் அமைப்பினரின் கொடூர தந்திரங்களை இந்த அறிக்கை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது’ என விமா்சித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments