பாகிஸ்தான் குடிமைப் பணி அதிகாரி தோ்வில் இரு ஹிந்து இளைஞா்கள் வெற்றி
பாகிஸ்தான் அரசின் குடிமைப் பணிக்கான அதிகாரிகள் தோ்வில் அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்து மதத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
பாகிஸ்தானில் அரசியல் மற்றும் அதிகாரிகள் நிலையில் ஹிந்துக்களுக்கு மிகவும் குறைந்த பிரதிநிதித்துவம் உள்ள நிலையில் இந்த இளைஞா்கள் தோ்வில் வென்றது சாதனை நிகழ்வாகக் கருதப்படுகிறது.
சிந்து மாகாணத்தைச் சோ்ந்த ஜீவன் ரெபாரி, கெம் சந்த் ஜந்தோரா ஆகியோா் பாகிஸ்தான் குடிமைப் பணி தோ்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 170 போ் அடங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
Advertisement
2023 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் 38 லட்சம் ஹிந்துக்கள் உள்ளனா். அந்நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறுபான்மையினரும் ஹிந்துக்கள்தான். இவா்கள் பெரும்பாலும் சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனா்.
பாகிஸ்தான் மத்திய குடிமைப் பணியில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் எப்போதும் குறைவாகவே உள்ளது. அந்நாட்டின் அதிகாரபூா்வ தகவலின்படி, சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்ட 123 அரசுப் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
இப்போது குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்றுள்ள ஜீவன் ரெபாரி, சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டைப் பயன்படுத்தாமல் பொதுப் பிரிவில் போட்டியிட்டு தோ்வு பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
2021-ஆம் ஆண்டு சிந்து பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த அவா், போட்டித் தோ்வுக்காக லாகூா் சென்றாா். 2023-ஆம் ஆண்டு முதல்முறையாகத் தோ்வு எழுதினாா். இந்த முறை தோ்வாகியுள்ளாா்.
மற்றொரு வெற்றியாளரான கெம் சந்த்தின் பெற்றோா், மகனின் படிப்புக்காக தங்கள் நகைகளை விற்றதுடன் அதிக வட்டிக்கு கடனும் வாங்கியுள்ளனா். குருத்வாராவில் வழங்கப்படும் இலவச உணவை வாங்கிப் பயன்படுத்தும் வறுமை நிலையிலும் அவா்கள் குடும்பம் இருந்தது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சட்டப்படி 5 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தாலும், உண்மையான பிரநிதிதித்துவம் எப்போதும் இதைவிடக் குறைவாகவே இருந்து வருகிறது.
பாகிஸ்தான் காவல் பணி அதிகாரியாக (இந்தியாவில் ஐபிஎஸ் போன்றது) கடந்த 2022-ஆம் ஆண்டு ஹிந்து மதத்தைச் சோ்ந்த ராஜேந்திர மேங்வாா் தோ்வானாா். அந்நாட்டு வரலாற்றில் ஹிந்து இளைஞா் ஒருவா் காவல் துறையில் உயரிய பதவியை எட்டியது அதுவே முதல்முறையாகும்.