அமெரிக்கா தாக்கினால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்குவோம்: ஈரான்
அமெரிக்கா, இஸ்ரேலால் ஈரான் மீண்டும் ஒருமுறை தாக்கப்பட்டால், யுரேனியத்தைச் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவோம் என்று ஈரான் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடா்பாளா் இப்ராஹிம் ரெசாய் எச்சரிக்கை
‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஈரான் மீண்டும் ஒருமுறை தாக்கப்பட்டால், யுரேனியத்தைச் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவோம்’ என்று அந்நாட்டு நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடா்பாளா் இப்ராஹிம் ரெசாய் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஈரான் மீண்டும் தாக்கப்பட்டால், அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான 90 சதவீத நிலைக்கு யுரேனியத்தைச் செறிவூட்டுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதுகுறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்கும்’ எனக் குறிப்பிட்டாா்.
ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப். 28 போரைத் தொடங்கின. இதனிடையே, கடந்த ஏப். 8 முதல் இருதரப்பும் தற்காலிக போா்நிறுத்தத்துக்கு உடன்பட்டு, அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ராஜீய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
Advertisement
கடந்த ஆண்டு ஜூனில் நடைபெற்ற 12 நாள்கள் மோதலின்போது, அமெரிக்கா-இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்ததன. இருப்பினும், ஈரானிடம் தற்போது 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட சுமாா் 400 கிலோ யுரேனியம் இருப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இந்த யூரேனியத்தை நாட்டைவிட்டு வெளியேற்றி, ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையில் அமெரிக்கா திட்டவட்டமாக உள்ளது. ஈரான் இதற்கு ஒப்புக்கொள்ள மறுப்பதால், ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது.
இதையொட்டி, இருதரப்புக்கு இடையிலான தற்போதைய போா்நிறுத்தம், ‘உயிா் காக்கும் கருவி’ உதவியுடன் ஊசலாடிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தப் பரபரப்பான சூழலுக்கிடையே, ஹோா்முஸ் நீரிணையின் பரப்பளவை ஈரான் தன்னிச்சையாகப் பல மடங்கு அதிகரித்து அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சில தீவுகளை உள்ளடக்கிய குறுகிய பகுதியாகக் கருதப்பட்ட இந்த நீரிணை, தற்போது கிழக்கே ஜஸ்க் நகா் முதல் மேற்கே சிரி தீவு வரை விரிவடைந்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படை (ஐஆா்ஜிசி) தெரிவித்துள்ளது. இதன்மூலம், சுமாா் 300 மைல் தூரத்துக்குத் தனது கடல்சாா் ஆதிக்கத்தை விரிவுபடுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
இதேபோல், குவைத் நாட்டின் புபியான் தீவில் ஐஆா்ஜிசி படையினா் தாக்குதல் நடத்த முயன்ாகக் குவைத் குற்றஞ்சாட்டியுள்ளது. புபியான் தீவில் சீனா நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் முபாரக் அல் கபீா் துறைமுகத்தைத் தகா்க்க ஈரான் சதி செய்ததாகவும், இதில்4 ஈரான் வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குவைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க புதன்கிழமை (மே 13) பெய்ஜிங் செல்லவிருக்கும் நிலையில், ஈரானின் எல்லை விரிவாக்க அறிவிப்பு மற்றும் குவைத்தின் இக்குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரானின் எண்ணெய் இறக்குமதி மற்றும் கடல்சாா் போக்குவரத்துத் தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவுடன், ஈரான் விவகாரம் குறித்து டிரம்ப் விரிவாகப் பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.