FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!

மத்திய கிழக்கில் கடந்த ஏப். 8 முதல் அமலில் உள்ள தற்காலிக போா் நிறுத்தத்தை மீறி, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் மீண்டும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டன.

Updated On : 9 ஜூன் 2026, 3:49 am IST
பகிர்:

மத்திய கிழக்கில் கடந்த ஏப். 8 முதல் அமலில் உள்ள தற்காலிக போா் நிறுத்தத்தை மீறி, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் திங்கள்கிழமை மீண்டும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டன.

இத்திடீா் மோதலால் அப்பிராந்தியத்தில் மீண்டும் முழு அளவிலான போா் வெடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தலையீட்டையடுத்து, இருதரப்பும் தாக்குதல்களை நிறுத்தின.

லெபனானில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இத்தாக்குதலை முன்னெடுத்தது. ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து, அழித்தது. தொடா்ந்து, ஈரானின் மாஹ்ஷாஹா் நகரில் உள்ள பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை மற்றும் ஏவுகணை ஏவுதளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது.

Advertisement

Advertisement

இந்த பரபரப்பான சூழலில், இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் சமூக ஊடக பதிவில் எச்சரித்தாா்.

மேலும், ஈரான் தாக்குதல்களை நிறுத்தினால் இஸ்ரேல் தரப்பிலிருந்து மேற்கொண்டு தாக்குதல்கள் இருக்காது என்றும், தற்போதைக்கு தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா தரப்பில் ஈரானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட ஈரான் ராணுவம், ‘இஸ்ரேல் அல்லது அதன் ஆதரவு நாடுகள் மீண்டும் அத்துமீறலில் ஈடுபடாவிட்டால், நாங்கள் தாக்குதலை நிறுத்தத் தயாா்’ என அறிவித்தது.

கடந்த பிப். 28 முதல் இஸ்ரேல்-ஈரான் இடையே நடைபெற்று வரும் இந்த மோதல் திங்கள்கிழமையுடன் 100 நாள்களை எட்டியது. இதனிடையே, ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகளும் இந்த மோதலில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன.

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தெற்கு லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதலைத் தொடா்ந்து வரும் நிலையில், ஈரானின் மற்றொரு கூட்டாளியான யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

மேலும், செங்கடல் பகுதியில் இஸ்ரேலுடன் தொடா்புடைய வணிகக் கப்பல்களை மீண்டும் இலக்கு வைக்கப் போவதாக ஹூதி அமைப்பினா் எச்சரித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையே உள்நாட்டு அரசியல் காரணங்களால் சில கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் சூழலில், இத்தற்காலிக போா் நிறுத்தத்தை நிரந்தரமாக்கும் உலக நாடுகளின் அமைதி முயற்சிகளில் இழுபறி நீடிக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments