கான்ஸ் திரைப்பட விழா! டிரெண்டாகும் ஐஸ்வர்யா ராயின் புடவைகள்!
கான்ஸ் திரைப்பட விழாவின்போது டிரெண்டாகும் ஐஸ்வர்யா ராயின் புடவைகள் பற்றி..
பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவான கான்ஸ் விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இந்த நிகழ்ச்சியில் அணிந்த புடவைகள் டிரெண்டாகியிருக்கிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் ஐவரி நிறத்தில் கட்வா பனாரசி புடவையை அணிந்து வந்திருந்தார். அதற்கு அவர் எம்ட்ராயட்ரி வேலைப்பாடு கொண்ட ஒரு சால்வையையும் அணிந்திருந்தார். அதற்கு மிடுக்கான ரூபி கற்களைக் கொண்ட நகைகளுடன் வந்து அவர் காண்பவர்களை அசத்தினார். இந்த ஆடை, 2025 கான்ஸ் திரைப்பட விழாவில் அதிகம் பேசப்பட்ட, டிரெண்டான ஆடையாகவும் அமைந்திருந்தது.
அதுபோல, எப்போது கான்ஸ் விழா நடைபெற்றாலும், 2002ஆம் ஆண்டு ஐஸ்வர்யா அணிந்துவந்த வெந்தய நிறப் புடவைக்கு மட்டும் மவுசு குறைவதேயில்லை. எப்போதும் அந்த புகைப்படங்கள் டிரெண்டாகிவிடும்.
Advertisement
அந்த புடவையை ஐஸ்வர்யா அணிந்திருந்தபோது, அவரது நிறத்துக்கும், அந்தப் புடவைக்கும் ஒரு போட்டியே நடக்கும். யார் யாருக்கு அழகு சேர்ப்பது என்பதுதான் அந்தப் போட்டி. கடைசி வரை ஐஸ்வர்யா ராய்தான் வெல்வார்.
ஐஸ்வர்யா ராய் பச்சனின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கான ஆடைத் தொகுப்பில் இடம்பெற்ற அசத்தலான புடவைகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் டிரெண்டாகும்.
அதில், 2002 தேவதாஸ் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு, புத்தம் புதிய அறிமுகமாக ஐஸ்வர்யா ராய் பச்சன், பல நட்சத்திரங்களும் பெரிதும் விரும்பும் சிவப்புக் கம்பளத்தில் அடியெடுத்து வைத்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த ஆடை, வெந்தய நிற புடவை. ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா வடிவமைத்திருந்த அந்தப் புடவை, ஐஸ்வர்யாவின் மெல்லிய உடல்வாகுக்கு மிகவும் அழகாக, நிறமும் கூடுதல் அழகைச் சேர்த்திருந்தது. புடவை கரையில் நவீன வேலைப்பாடும் உள் பகுதிகளில் அழகிய வட்டங்களும், அந்தப் புடவையின் நிறத்துக்கு ஏற்ப நகைகளும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அவர் கான்ஸ் திரைப்பட விழா அரங்குக்குள் கால் எடுத்து வைத்தபோது ஒட்டமொத்த கண்களும் காமிராக்களும் அவரைநோக்கியே திரும்பின. மீண்டும் வேறு எங்கும் மீளவேயில்லை என்றும் சொல்லலாம். இன்றும் அந்தப் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அவர் பல கிளாசிக் புடவைகளில் ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுடன் சிவப்புக் கம்பள மரியாதையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவரது புடவைகளில் தனித்துவமான பச்சை நிறப் புடவையும் ஒன்று. 2010-ல் சப்யசாச்சியின் வடிவமைப்பிலிருந்து அவர் தேர்ந்தெடுத்த மெல்லிய பச்சை நிற புடவை, அந்தத் தோற்றத்துக்கு மேலும் அழகுசேர்க்க மேல் நோக்கி வாரிவிடப்பட்ட கொண்டை, ஸ்மோக்கி ஐ என்ற கண்ணுக்கு பிரத்யேக மேக்கப் என அனைத்தும் மக்களை கவர்ந்தது.
பிறகு 2013ஆம் ஆண்டு ஐஸ்வர்யா அணிந்திருந்த சந்தன நிறத்தில் ஜரிகை வேலைப்பாடு கொண்ட புடவை மக்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. அடுத்து, சப்யசாச்சியின் கருப்பு நிற லெஹங்கா புடவையில் கணவர் அமிதாப்புடன் தோன்றியிருந்தார்.
அடுத்தடுத்து அவர் அணிந்து வந்த புடவைகள் ஒவ்வொரு ஆண்டும் பேசப்படுவது போல, இந்த ஆண்டும் அவரது அனைத்துப் புடவைகளும் தற்போது டிரெண்டாகி வருகிறது.