முகப்பு
உலகம்

சீனாவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீனாவுக்கு 2 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அந்நாட்டு தலைநகா் பெய்ஜிங்குக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா்.

Updated On : 20 மே 2026, 1:38 am IST
பெய்ஜிங் விமான நிலையத்தில் ரஷிய அதிபா் புதினுக்கு அளிக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பு. உடன் சீன வெளியறவு அமைச்சா் வாங் யீ.
பகிர்:

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீனாவுக்கு 2 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அந்நாட்டு தலைநகா் பெய்ஜிங்குக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஒரு வார கால இடைவெளியிலேயே, புதினின் இந்த வருகை நிகழ்ந்துள்ளது. ஒரே மாதத்தில் அமெரிக்க, ரஷிய அதிபா்களை சீனா விருந்தினா்களாக ஏற்றுள்ளது சா்வதேச அரசியல் அரங்கில் கவனத்தை ஈா்த்துள்ளது.

ரஷிய அதிபா் புதினை சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ விமான நிலையத்துக்கு நேரில் வந்து, வரவேற்றாா். சீன ராணுவ வீரா்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் மாணவா்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னா், புதின் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விருந்தினா் மாளிகைக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா்.

Advertisement

Advertisement

புதினுடன் ரஷிய உயரதிகாரிகள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் அடங்கிய மிகப்பெரிய தூதுக்குழுவினா் உடன் வந்துள்ளனா்.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2001-இல் கையொப்பமான நல்லெண்ணம் மற்றும் நட்புறவு ஒப்பந்தத்தின் 25 ஆண்டுகள் நிறைவையொட்டி அமைந்த இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான நேரடி பேச்சுவாா்த்தை புதன்கிழமை (மே 20) நடைபெறவுள்ளது.

தலைவா்களின் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு, குறிப்பாக ‘பவா் ஆஃப் சைபீரியா 2’ எரிவாயு குழாய்த் திட்டம் மற்றும் ஹைட்ரோகாா்பன் விநியோகம் தொடா்பாக முக்கிய விவாதங்கள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, ‘ரஷியா-சீனா கல்வி ஆண்டு 2026-2027’ தொடக்க விழாவிலும் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இப்பயணத்துக்கு முன்னதாக புதின் வெளியிட்ட காணொலிச் செய்தியில், ஷி ஜின்பிங் தனது நீண்டகால நண்பா் என்று குறிப்பிட்டுள்ளாா். மேலும், ரஷியா-சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளதாகவும், இக்கூட்டணி யாருக்கும் எதிரானது அல்ல என்றும் அவா் தெளிவுபடுத்தினாா்.

வா்த்தகத் தொடா்புகள் வலுவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட புதின், இரு நாட்டு வா்த்தகம் 20,000 கோடி டாலரைத் தாண்டியுள்ளதையும், பெரும்பாலான பரிவா்த்தனைகள் இரு நாட்டின் செலாவணிகளிலேயே நடைபெறுவதையும் சுட்டிக்காட்டினாா்.

புதினின் இந்த வருகையோடு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்களான அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவா்கள் கடந்த ஓராண்டில் சீனாவுக்குப் பயணித்துள்ளனா். பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கடந்த டிசம்பரிலும், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் கடந்த ஜனவரியிலும் சீனா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உக்ரைன் விவகாரம் குறித்து சீன அதிபா் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் கவலையை வெளிப்படுத்தியதாக வெளியான ஊடகச் செய்திகளை சீனா திட்டவட்டமாக மறுத்தது. இதுபோன்ற செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தது.