13வது நட்சத்திரம் தரும் மகுட யோகம்! ஜோதிடம் சொல்லும் சூட்சம ரகசியங்கள்!
13 என்ற எண்ணின் பின்னால் மறைந்திருக்கும் ஜென்ம நட்சத்திர ரகசியங்கள் பற்றி...

மகுட யோகம்
பதிமூன்று என்ற எண்ணைக் கேட்டாலே பலருக்கும் ஒருவிதமான பயம் ஏற்படும். ஜோதிட ரீதியாகப் பார்க்கும்போது, 13 என்ற எண்ணிற்குள் பல்வேறு சூட்சம ரகசியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜோதிடத்தில் 13வது நட்சத்திரம் விசேஷமானதும், ஒரு செயலில் முன்னேற்றம், உயர்வு மற்றும் வெற்றியை நோக்கிச் செல்ல உதவும் நட்சத்திரமாகவும் ஜோதிடத்தில் கருதப்படுகிறது. எண் கணிதத்தில் 13-ன் கூட்டுத்தொகை 4 ஆகும். பொதுவாக 4ம் எண் ராகுவுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. அதேபோல், தாராபலக் கணக்கிலும் 13-வது நட்சத்திரம் சேஷம தாரையைக் குறிக்கிறது. எனவே, 13 என்ற எண்ணை வெறும் பயத்தின் அடிப்படையில் பார்க்காமல், அதன் பின்னால் உள்ள நட்சத்திரம் மற்றும் தாராபல ரகசியங்களைப் புரிந்துகொள்வது சுவாரஸ்யமான ஜோதிட அணுகுமுறையாகும்.
ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 13வது நட்சத்திரம் வலிமையானதாகவும், முன்னேற்றத்திற்கும் உயர்விற்கும் வழிவகுக்கும் மகுடம் சூடும் நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. ஒருவர் தொழில் ரீதியாக உயர்வு பெறவும், போட்டிகள் மற்றும் எதிர்ப்புகளைச் சமாளிக்கவும், வேலையில் ஒரு முக்கியமான திட்டத்தைத் தொடங்கவும் ஏற்ற காலத்தைத் தேர்வு செய்யும்போது, அவருடைய ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 13வது நட்சத்திரத்தைச் செயல்படுத்தலாம். மகுடம் சூடும் நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தை வழிபடுவது, அல்லது அந்த நட்சத்திரத்தின் அதிபதி எந்த கிரகமோ, அந்த கிரகத்திற்குரிய ஹோரையில் முக்கியமான செயல்களைத் தொடங்குவது ஒரு சூட்சமமான முறையாகப் பார்க்கப்படுகிறது.
உதாரணமாக, ஒரு தொழில் உரிமையாளருக்கு சில நாள்களுக்குள் ஒரு முக்கியமான தொழில் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த தொழில் திட்டம் தொடங்குவதற்காக 13வது நட்சத்திரம் வரும் நாளுக்காகப் பல நாள்கள் காத்திருக்க முடியாத சூழ்நிலை இருக்கலாம். அத்தகைய குறுகிய காலச் சூழ்நிலையில், 13வது நட்சத்திரத்தின் அதிபதிக்குரிய ஹோரையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ஒருவருடைய ஜென்ம நட்சத்திரம் பூசம், அந்த பூசத்திலிருந்து 13வது நட்சத்திரம் பூராடம். பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். எனவே, அந்த நபர் ஒரு புதிய ப்ராஜெக்ட்டைத் தொடங்க வேண்டிய நாளில், சுக்கிர ஹோரையைத் தேர்வு செய்து தனது தொழில் சார்ந்த புதிய முயற்சியைத் தொடங்கலாம். இதுபோன்று, 13 என்ற எண்ணை வெறும் பயத்துடன் பார்க்காமல், அதன் பின்னால் உள்ள நட்சத்திர தெய்வங்கள் மற்றும் ஹோரை ஆகியவற்றை இணைத்துப் பார்ப்பது முக்கியமான ஒன்று என்பது ஜோதிட ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள ஒரு சூட்சமம்.
ஜோதிட வரிசைப்படி உள்ள 27 நட்சத்திரங்களில், நாம் பிறந்த நட்சத்திரத்திலிருந்து 13வது நட்சத்திரம் வரும் நாளில் பெருமாளைத் தரிசித்து, அவருடைய சடாரி மூலம் ஆசிர்வாதம் பெற்ற பிறகு தொடங்கும் அனைத்து செயல்கள் வெற்றியை நோக்கிச் செல்லும். இந்த வழிபாட்டு முறையை, மாதந்தோறும் 13வது நட்சத்திரம் வரும் நாளில் தொடர்ந்து செய்து வரலாம். தொழில் ரீதியான நண்பர்கள், கணவன்–மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள நபர்களில், நம்முடைய ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 13வது நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருந்தால், அவர்களிடமிருந்து நன்மைகள், ஆதரவு மற்றும் செல்வ வளங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
உதாரணமாக, கணவனின் நட்சத்திரம் சுவாதி ஆகவும், மனைவியின் நட்சத்திரம் ரேவதி ஆகவும் அமைந்திருந்தால், சுவாதியிலிருந்து ரேவதி 13வது நட்சத்திரமாக வருவதால், இவர்களுக்கிடையே நல்ல புரிதலும், பரஸ்பர ஆதரவும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் அமையும். ஒருவருடைய 13வது நட்சத்திரம், ஜோதிடத்தில் 6–7ஆம் பாவங்களின் தொடர்புகளுடன் பார்க்கப்படுகிறது. இந்த பாவங்கள் - கூட்டாளி, களத்திரம், அலுவலக வேலைகளில் தடைகளைத் தாண்டுவது, சொந்த தொழில் சார்ந்த சவால்கள், எதிரிகளை வெல்வது, போட்டிகளில் முன்னேறுவது போன்ற அம்சங்களையும் குறிக்கின்றன. எனவே, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அந்த 13வது நட்சத்திரத்தின் அதிபதி, தெய்வம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சக்திகளைப் புரிந்துகொண்டு வழிபடுவது, நம்பிக்கையுடனும் தெளிவுடனும் செயல்பட உதவும். சிலருக்கு 13வது நட்சத்திரம் அவயோகமாக அமைந்தால், அதற்குரிய வெவ்வேறு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 27 ஜென்ம நட்சத்திரங்களுக்கும் உரிய 13வது மகுட நட்சத்திரம், அதன் அதிபதி மற்றும் தெய்வத்தை அறிந்து, அவற்றுக்குரிய வழிபாட்டு முறைகளை அவ்வப்போது முடிந்தவரைப் பின்பற்றி வரலாம். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், நமது ஜென்ம நட்சத்திரத்தின் சக்தியைப் பலப்படுத்தி, எடுத்த காரியங்களில் ஏற்படும் தடைகள் விலகி முன்னேற்றம் பெறுவதற்கான ஆன்மிக வழியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
பிறந்த நட்சத்திரம் 13வது மகுட நட்சத்திரம் அன்று வழிபாடு செய்யும் குறிக்காட்டும் தெய்வங்கள், வழிபாட்டு முறை
1. அசுவினி - ஹஸ்தம்: காயத்ரி தேவியையும், சாந்த சொரூபத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமானையும் வெண் தாமரை மலர்களால் தொடுத்த மாலையைத் தன் கைகளால் சாற்றி, பின்னர் கைகளைக் கூப்பி மனமுருகி வணங்குவது சிறப்பு. சூரியன் பிறந்த நட்சத்திரம் ஹஸ்தம். ஜோதிடத்தில் சூரியன் என்பவரை சிவனாகச் சொல்லப்படுகிறது. அத்தி மரம் தலவிருட்சம் உள்ள கோயிலுக்குச் செல்வது விசேஷம்.
2. பரணி - சித்திரை: சக்கரத்தாழ்வார் மற்றும் முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள் கொண்டு ஜொலிக்கும் அம்பிகையைத் தரிசிக்கலாம். வில்வம் தல விருட்சமான ஆலயங்கள் மற்றும் விஸ்வகர்மா தொடர்புடைய கோயில்களுக்குச் சென்று வரலாம்.
3. கார்த்திகை - சுவாதி: ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்குத் தேன் அபிஷேகம் செய்து, அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது. இதுதவிர, மருத மரம் தலவிருட்சமாக அமைந்துள்ள திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.
4. ரோகிணி - விசாகம்: சுவாமிமலை முருகன் / தோரண கணபதி/ தோரண மலை முருகனை- விளாம்பழத்தை நைவேத்தியமாகப் படைத்து, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பானது. மேலும், முருக பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் சிறப்பானது. அவ்வப்போது விட்டல் பாண்டுரங்கனின் பஜனைகளைப் பாடி வழிபடுவதால் மன அமைதி ஏற்படும்.
5. மிருகசீரிஷம் - அனுஷம்: லட்சுமி நாராயணரையும், மகா பெரியவரையும் தூய தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. மகிழ மரம் தலவிருட்சமாக உள்ள திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் நற்பலன் தரும். தெய்வங்களுக்குக் குடை பிடிக்கும் பாக்கியம் அல்லது கைங்கரியம் கிடைத்தால், அதை அரிய வாய்ப்பாகக் கருதி மனமுவந்து செய்வது சிறப்பு.
6. திருவாதிரை - கேட்டை: ஸ்ரீ வராகப் பெருமாளையும், இந்திரனால் வழிபட்ட தெய்வங்களையும் பன்னீர் மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். செல்வ வளம் பெருகும் காலங்களில், ஸ்வாமிக்கு ஆபரணங்கள், வேல், சூலம் மற்றும் எல்லைத் தெய்வங்களுக்கான ஆயுதங்களை தங்களால் இயன்ற அளவில் சமர்ப்பிக்கலாம்.
7. புனர்பூசம் - மூலம்: வாயுபுத்திரனான வலிமைமிக்க ஆஞ்சநேயரின் வாலுக்கோ அல்லது விநாயகரின் தும்பிக்கைக்கோ 48 நாள்கள் தொடர்ந்து பொட்டு வைத்து வழிபட்டால், வெற்றியின் பாதையை நோக்கி முன்னேறலாம். காளி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பானது. வீட்டிலோ அல்லது கோயிலிலோ மாமரத்தை நட்டு வளர்ப்பது நன்மை தரும்.
8. பூசம் - பூராடம்: மகாலட்சுமியையும், ஜம்புகேஸ்வரரையும், வழிபட்டு வந்தால், சாபங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். வஞ்சி மரக்கன்றினை கோவிலுக்கு வழங்கி வளர்க்கலாம். குரங்குகளுக்கு உணவு அளிப்பதும் சிறப்பான பரிகாரமாகும்.
9. ஆயில்யம் - உத்திராடம்: விநாயகரை வழிபட்டு வருவதன் மூலம் நம்பிக்கையும் மனவலிமையும் பெருகும். பலா விருட்சத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட கோயிலுக்குச் சென்று, அங்குள்ள தெய்வத்திற்குப் பசு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது. உத்திராடம் செவ்வாயின் பிறந்த நட்சத்திரமாகக் கருதப்படுவதால், செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் அன்னதானம் செய்வது சிறப்பானது.
10. மகம் - திருவோணம்: ஹயக்ரீவரையும், வாமன ரூப மகாவிஷ்ணுவையும் வழிபடுவது நற்பலன் தரும். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். லவன்–குசன் தொடர்புடைய கோயில்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு.
11. பூரம் - அவிட்டம்: புதன் பிறந்த அவிட்டம் நட்சத்திரத்தில், லட்சுமி நாராயணன் / ஸ்ரீ அனந்தசயனப் பெருமாளை வாசனைமிக்க மலர்களால் பூஜிப்பது சிறப்பு. வன்னி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நற்பலன் தரும்.
12. உத்திரம் - சதயம்: மிருத்யுஞ்ஜயேஸ்வரரையும், எமன் தொடர்புடைய திருக்கோவில்களில் ஈசனையும் அம்பிகையையும் வழிபடுவது சிறப்பு. கடம்ப மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட கோவிலுக்குச் சென்று வழிபடலாம். குதிரை அல்லது காக்கைக்கு அவ்வப்போது உணவு வழங்குவதும் சிறப்பான பரிகாரமாகும்.
13. ஹஸ்தம் - பூரட்டாதி: சிவபெருமானின் திருவுருவமான ஏகபாத மூர்த்தியையும், குலதெய்வத்துடன் கூடிய எல்லை சாமியையும் வழிபடுவதன் மூலம் திறன்கள் மேம்படும். வீட்டிலோ அல்லது கோவிலிலோ தேமா மரத்தை வளர்ப்பது சிறப்பு. ஏழை நோயாளி / வயதானவர் மரக்கட்டில் வாங்கித் தருவது சிறப்பான பரிகாரமாகும்.
14. சித்திரை - உத்திரட்டாதி: ஸ்ரீ மகா ஈஸ்வரர், வேப்பமரம் தலவிருட்சமாக உள்ள கோவிலில் பசு நெய் தீபம் ஏற்றுவது நற்பலன் தரும். வீட்டில் துளசி வளர்ப்பது சிறப்பு. ஏழை வயதானவர் அல்லது நோயாளிக்குக் கட்டில் வாங்கித் தருவது சிறப்பான பரிகாரமாகும்.
15. சுவாதி - ரேவதி: ஸ்ரீ அரங்கநாதரின் திருப்பாதங்களில் நமஸ்காரம் செய்வதும், காமதேனு வழிபட்ட திருத்தலங்களில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றுவதும் சிறப்பு. கால்நடைகளுக்கு உணவளிப்பதும் நற்பலன் தரும். ரேவதி சனியின் பிறந்த நட்சத்திரம் என்பதால், சனி பகவானை வழிபடுவது சிறப்பானது.
16. விசாகம் - அஸ்வினி: சரஸ்வதி தேவியையும், அஸ்வினி குமாரர்களையும் வணங்குவது சிறப்பு. குதிரை உருவம் கொண்ட சுவாமிகள், குறிப்பாக எல்லை சாமியை வழிபடுவது அவசியம். கோவில்களுக்கு எட்டி மரக்கன்றுகளை வழங்கி, அவற்றுக்கு நீர் ஊற்றி வளர்ப்பது நற்பலன் தரும்.
17. அனுஷம் - பரணி: துர்கா தேவிக்கு முல்லை, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்வது. வீடு / கோயிலில் நெல்லி மரம் வளர்ப்பது விசேஷம். பரணி ராகுவின் பிறந்த நட்சத்திரம் என்பதால், அம்பாளுக்கு மண் பானையில் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்குவது நற்பலன் தரும்.
18. கேட்டை - கார்த்திகை: எல்லை ஸ்வாமி மற்றும் மயில் வாகன கந்தனை வழிபடுவது வெற்றியைத் தரும். கோவிலில் நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொள்வதும், கோவிலுக்கு அத்தி மரம் வழங்குவதும் நன்மை தரும்.
19. மூலம் - ரோகிணி: ஸ்ரீ கிருஷ்ணனைப் பாரிஜாத மலர்களால் அலங்கரித்து வழிபடுவது சிறப்பு. திங்கள் மற்றும் ரோகிணி நட்சத்திர நாளில் நாவல் பழம் நைவேத்தியம் செய்யலாம். பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் தேரை வடம் பிடித்து இழுப்பது விசேஷம்.
20. பூராடம் - மிருகசீரிஷம்: அம்பிகையையும் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரரையும் தேங்காய், பழங்கள் மற்றும் மல்லிகை மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது. கருங்காலி அணிந்து இறைவனைப் பிரார்த்திப்பது நற்பலன்களைத் தரும். இது சந்திரன் பிறந்த நட்சத்திரம்
21. உத்திராடம் - திருவாதிரை: நடராஜர் / சிவபெருமான் / சுயம்பு கருமாரி அம்மனை செம்பருத்தி மலர்களால் அலங்கரித்து, சிவ மந்திரங்களை ஜபித்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இவர்கள் செங்கருங்காலி மாலை அணிந்து வழிபடுவது விசேஷமாகும்.
22. திருவோணம் - புனர்பூசம்: வில், அம்புடன் அருள்பாலிக்கும் ஸ்ரீராமரை வெண் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. காமதேனு மற்றும் மூங்கில் தலவிருட்சம் கொண்ட கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவது நற்பலன் தரும்.
23 அவிட்டம் - பூசம்: கிரகங்களில் சுபக் கிரகமான குருவின் பிறந்த நட்சத்திரம் பூசம். எனவே, தேவகுரு பிரகஸ்பதி, ஸ்ரீ சாய்பாபா, சித்தர்கள் மற்றும் தட்சிணாமூர்த்தியைப் பக்தியுடன் வழிபடுவது சிறப்பு.
24. சதயம் - ஆயில்யம்: வராகி அம்மனையும் ஆதிசேஷனையும் பக்தியுடன் வழிபடுவது தடைகளைத் தாண்டி வெற்றி பெற உதவும். நாக சதுர்த்தி அன்று நாக சிலைக்குப் பால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடுவது சிறப்பு.
25. பூரட்டாதி - மகம்: சூரிய பகவானுக்குச் சிவப்பு செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை, முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்வதும், ஆலமரம் உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும். இது சுக்கிரன் பிறந்த நட்சத்திரம் அதனால் சுக்கிரன் தொடர்புடைய திருத்தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.
26. உத்திரட்டாதி - பூரம்: பார்வதி தேவி/ ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளைப் பக்தியுடன் வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, சங்காபிஷேக பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபடுவது நற்பலன்களையும் வெற்றியையும் தரும்.
27. ரேவதி - உத்திரம்: மகாலட்சுமிக்குக் கதம்ப மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், ஆதரவற்றோர் இல்லத்திற்குக் கட்டில், மெத்தை போன்ற தேவையான பொருட்களை வழங்குவதும் நற்பலன்களைத் தரும்.
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







