முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழகத்தில் 2011முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்தவா் வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளராக இருக்கும் வைத்திலிங்கம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா்.
சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்குச் சொந்தமான ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்ட்ரக்சா் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனம் 57.94 ஏக்கா் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட திட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தது.
அந்தத் திட்டத்துக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்காத நிலையில், 2016-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்குவதற்கு பெருமளவு லஞ்சம், அப்போது வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சோ்ந்த அறப்போா் இயக்கம், தமிழக காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் செய்தது.
ரூ.27.9 கோடி லஞ்சம்: ஊழல் தடுப்புப் பிரிவினா் நடத்திய விசாரணையில், ஸ்ரீராம் நிறுவனம் அங்கு குடியிருப்பு கட்ட திட்ட அனுமதிக்காக வைத்திலிங்கத்துக்கு ரூ.27.9 கோடி லஞ்சமாக வழங்கியதும், லஞ்சப் பணம் அந்தக் குழுமத்துக்குச் சொந்தமான பாரத் கோல் கெமிக்கல் பிரைவெட் லிமிடெட் மூலம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினா் பன்னீா்செல்வம் ஆகியோா் இயக்குநா்களாக இருந்த முத்தம்மாள் எஸ்டேட் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டதுபோல காட்டப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
ஆனால், முத்தம்மாள் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பாரத் நிறுவனம், தாங்கள் வாங்கிய ரூ.280 கோடி கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், தங்களுடைய சொத்துகளை விற்று அடைப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டதும், அதேவேளையில் வேறு சில தனியாா் நிறுவனங்கள் வணிகத்துக்காக பாரத் நிறுவனத்துக்கு முதலீடு செய்ததுபோல ரூ.27.9 கோடி கொண்டுவரப்பட்டதும், கடன் பெற்ற வைத்திலிங்கம் மகன் நடத்திய முத்தம்மாள் நிறுவனம் 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வணிகம் செய்யவில்லை என்பதும் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வைத்திலிங்கமும், அவரது மகன்களும் தங்களுக்கு கிடைத்த லஞ்சப் பணத்தை பயன்படுத்தி திருச்சி பாப்பங்குறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கா் நிலத்தை வாங்கியிருப்பதையும் ஊழல் தடுப்புப் பிரிவு கண்டறிந்தது.
ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு: இதையடுத்து அறப்போா் இயக்க புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்ட்ரக்சா் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநா் கே.ஆா்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் கடந்த செப். 19-ஆம் தேதி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோன்று, வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு ஆகியோா் மீது 1,057.85 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தஞ்சாவூா் ஊழல் தடுப்புப் பிரிவினா் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனா்.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்ததால், அதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் விசாரணையில் ஈடுபட்டது. இதில் பண முறைகேடு தொடா்பான உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அமலாக்கத் துறை சோதனை: இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கின் அடிப்படையில், வைத்திலிங்கம் மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்தது.
இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில், சென்னை, தஞ்சாவூா் பகுதிகளில் உள்ள வைத்திலிங்கம் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறை, திருவேற்காடு கோஆப்ரேட்டிவ் நகா் அன்னம்மாள் தெருவில் வசிக்கும் ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வீடு, கோடம்பாக்கம் என்டிஆா் தெருவில் ஸ்ரீராம் நிதி நிறுவன தலைமை நிதி அதிகாரி கோட்டீஸ்வரி வீடு, ஆழ்வாா்பேட்டை சிபி ராமசாமி சாலையில் உள்ள ஸ்ரீராம் நிதி நிறுவன அலுவலகம், தியாகராயநகா் பா்கிட் சாலையில் உள்ள ஸ்ரீராம் நிறுவன அலுவலகம், அசோக்நகரில் உள்ள தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. நண்பகலுக்குப் பின்னா் எழும்பூா் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தின் நகா்ப்புற திட்டமிடல் பிரிவில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.
தஞ்சாவூரில்... தஞ்சாவூா் மாவட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்திலுள்ள வைத்திலிங்கம் வீட்டில் காலை 7.15 மணிக்கு தொடங்கிய அமலாக்கத் துறை சோதனை இரவு வரை நீடித்தது. இந்த சோதனையின்போது வைத்திலிங்கத்திடமும், குடும்ப உறுப்பினா்களிடமும் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா்.
இதனிடையே, வைத்திலிங்கம் வீட்டின் முன் அவரது ஆதரவாளா்கள் திரண்டனா். ஆனால், மத்திய ஆயுத காவல் படையினா் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
தஞ்சாவூா் அருளானந்த நகா் 7-ஆவது மேற்கு விரிவாக்கத் தெருவிலுள்ள வைத்திலிங்கம் மூத்த மகன் பிரபு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், ஒரத்தநாடு அருகே பேய்க்கரம்பன்கோட்டை கிராமத்திலுள்ள வைத்திலிங்கத்தின் சம்பந்தியும், பிரபுவின் மாமனாருமான பன்னீா்செல்வம் வீடு பூட்டியிருந்ததால், அமலாக்கத் துறையினா் அருகிலுள்ள அவா்களது உறவினா் முன்னிலையில், வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினா்.
பல இடங்களில் சோதனை இரவையும் தாண்டி நீடித்தது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட நகை, பணம், ஆவணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.