பழம்பெரும் நடிகர் "என்னத்த' கண்ணையா மறைந்தார்

சென்னை, ஆக. 7: பழம்பெரும் நடிகர் "என்னத்த' கண்ணையா (87) உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். சென்னை, லாயிட்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந
பழம்பெரும் நடிகர் "என்னத்த' கண்ணையா மறைந்தார்
Published on
Updated on
1 min read

சென்னை, ஆக. 7: பழம்பெரும் நடிகர் "என்னத்த' கண்ணையா (87) உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

சென்னை, லாயிட்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, தனுஷ், விஷால் உள்பட தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், 1924-ல் மதுரையில் பிறந்தார்.

70 வருட கலைப் பயணம்: டி.கே.சண்முகம், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரது நாடகக் குழுக்களில் இணைந்து 1942-ல் கலைப் பயணத்தைத் தொடங்கிய கண்ணையா, 1950-ல் "ஏழை படும்பாடு' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த "நான்' திரைப்படத்தில் கண்ணையா பேசிய "என்னத்த' என்ற வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகே அவர் "என்னத்த' கண்ணையா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். உடன் "ஒளிவிளக்கு', "கண்ணன் என் காதலன்', "பாசம்' உள்ளிட்ட படங்களிலும், சிவாஜியுடன் "சொர்க்கம்', "வீரபாண்டியன்', "மருமகள்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் "ஊர்க்காவலன்', "மன்னன்', "சிவா' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குணச்சித்திர வேடம், நகைச்சுவை வேடம் என பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த கண்ணையா, பி.வாசு இயக்கத்தில் "தொட்டால் பூ மலரும்' என்ற திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த "வரும்.... ஆனால் வராது.....' என்ற நகைச்சுவை காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தனுஷ் உடன் "படிக்காதவன்', அருண் விஜய் உடன் "தவம்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், இறுதியாக விஷாலுடன் "வெடி' திரைப்படத்தில் நடித்தார்.

மறைந்த கண்ணையாவுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி ராஜம் 4 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார்.

கண்ணையாவின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு: 80156 15535.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com