போரும் மகளிரும்.. 'ஸ்த்ரீ பர்வம்' நாடக விமர்சனம்

மகாபாரதப் போர்க்களச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட 'ஸ்த்ரீ பர்வம்' நாடகம்.
போரும் மகளிரும்.. 'ஸ்த்ரீ பர்வம்' நாடக விமர்சனம்

தமிழ் நாடகத்தின் நவீன முகமாக அறியப்படுபவர் பேராசிரியர் மங்கை (அரசு). செவ்வியல் மரபையும் நவீனப் போக்கையும் இணைத்துத் தமிழ் நாடகத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்பவர் அவர். அதிகம் பேசப்படாத, ஒடுக்கப்படும் மகளிரின் மெல்லிய விசும்பலை, நம்மைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் வகையில் கலாரூபமாகப் படைத்தளிப்பது அவரது ஒரு முகம். பெண்ணின் போர்முகத்தை அதிரக் காட்சிப்படுத்துவது அவரது மற்றுமொரு முகம். அவரது பனுவலும், நெறியாள்கையும் இதற்கேற்ப வாளும் கேடயமுமாகத் திகழ்வது அவரது தனித்துவம்.

மகாபாரதப் போர்க்களச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு ஒரு போர் என்பது மகளிர் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்பதைச் சித்திரிக்கும் வகையில் தற்பொழுது வெளிவந்துள்ளது அவரது "ஸ்த்ரீ பர்வம்" எனும் நாடகம், சென்னை தரமணியில் 65 நிமிடங்கள் நடைபெற்றது.

முதல் காட்சியில் காந்தாரியும், குந்தியும் போர்க்களத்தில் தத்தம் உறவுகளைத் தேடி அலைகின்றனர். சுற்றிலும் பிணங்கள்! அரவான், அபிமன்யூ, துரோணர், கர்ணன், அசுவத்தாமன் என எண்ணற்ற உயிர்களைப் பலி கொண்ட படுகளம் அது. சோகமும், வலியும், அழுகையும் போரின் குரூரத்தை நம் நெஞ்சில் பாய்ச்சுகின்றன. இந்த வன்முறையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் மகளிரும், குழந்தைகளும் என்பதை அது மறவாமல் பதிவிடுகிறது.

போரின் குரூரத்தை மிக அற்புதமாகக் காட்சிப் படுத்துகிறது மகாபாரதத்தின் "ஸ்த்ரீ பர்வம்" நாடகம். இதற்காகப் போர்க்களப் பதிவுகளைக் காட்சிப்படுத்தும் டிராட்ஸ்கி மருதுவின் கறுப்பு மற்றும் வண்ண ஓவியங்கள் மேடையின் திரையில் ஒளிபரப்பப்பட்டன. நாடக மேடையில் மரபும், புதுமையும் சங்கமிக்கும் (Convention and Digital) ஈர்க்கத்தக்க புது முயற்சியாக இது உள்ளது.

அதே போல் கூத்திலிருந்து ராப் வரை பல்வகை இசை, கதைக்கருவோடு நம்மைக் கரைத்து விடுகிறது.

நாடகம் முழுவதும் நடிக்கும் மற்றொரு பாத்திரம், வெண்ணிற ஆடை! வாழ்வையும், உலகையும், அமைதியையும் நமக்குக் கடத்தும் அருமையான படிமமாக அது அமைந்திருந்தது.

நடிகர்களின் குரலும், மெய்ப்பாடும் இந்தப் படைப்புக்காக அவர்கள் சிந்திய வியர்வையின் கனத்தை உணர்த்தியது.

நாடகத்தில் நம்மைத் தொடர்ந்து வரும் ஒளிப் பயன்பாடு (Lighting Effect) குறிப்பிடத் தக்கது.

மகாபாரதத்தின் ஏதோ ஒரு காட்சி என்பதாக நின்றுவிடாமல், பாலஸ்தீன மக்கள் மீது ஏவப்படும் ஆதிக்கப் போரின் குரூரம் மேடைத் திரையில் நிழற்படக் காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டது, சமகாலப் பொருத்தப்பாடு மிக்கதாக விளங்கியது.

காஸா, தமிழீழம் என விடுதலைக்காகப் போராடும் மக்களை எப்படி அதிகார ஆதிக்கம் கொன்றொழிக்கிறது என்பதையும், மனிதர்களது கனவுகளையும், நம்பிக்கைகளையும் போர் எப்படிச் சிதைக்கிறது என்பதையும் இக்கலைப் படைப்பு நமக்கு அழுத்தமாகக் கடத்துகிறது.

முடிவில்,

"கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக! அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க! "

-எனும் வள்ளலாரின் வைர வரிகளோடு நாடகம் முடிவது, மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.

இந்த நாடகம் நேரடியாகப் பேசிய செய்திகளைக் காட்டிலும், பார்வையாளர்களுக்கு உணர்த்திய பாடங்கள் அடர்த்தியானவை. ஒரு கலைப் படைப்பின் மாபெரும் வெற்றி அதில்தான் உறைந்து கிடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com