
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவான புஷ்பா திரைப்படம் மாநில எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடையும் பாவனையும் உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக அல்லு அர்ஜுன் மிகப் பிரபலமாகிவிட்டார்.
இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை(டிச. 5) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், புஷ்பா-2 திரைப்படத்தை கண் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோரும் கண்டுகளிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, புஷ்பா படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தை இப்போது ஒவ்வொருத்தரும் பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம்.
புஷ்பா-2 திரைப்படத்தை பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய பார்வையாளர்களும் திரையரங்குகளில் பார்க்க முடியும். இதற்காக ‘கிரேட்டா செயலியில்’ ஒலி விரிவாக்கங்கள் மற்றும் எழுத்துக் குறிப்புகள் (சப் டைட்டில்ஸ்) ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த வசதியை பயன்படுத்த, அவர்கள் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கொண்டு, புஷ்பா படத்தை மேற்கண்ட வசதிகளுடன் தங்களுக்கேற்றாற்போல் அமைத்து படத்தைக் கண்டு மகிழலாம் எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.