மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடிகர் சித்தார்த், இயக்குநர் அட்லியை மிரட்டுவதற்காகத்தான் பொறுப்புக்கு வந்தீர்களா?: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி!

நடிகர் சித்தார்த், இயக்குநர் அட்லியை மிரட்டுவதற்காகத்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்புக்கு வந்தீர்களா எனத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி... 

News image
Updated On :21 டிசம்பர் 2017, 8:59 am

எழில்

நடிகர் சித்தார்த், இயக்குநர் அட்லியை மிரட்டுவதற்காகத்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்புக்கு வந்தீர்களா எனத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓம் சாய் ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரைச் சேர்ந்த சிவகுமார் படத்தை தயாரித்ததோடு கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ள இந்தப் படத்தை வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார். இசை - ஏ.கே. ராம்ஜி. 

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்தவிழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். 

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது: 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெங்களூரில் இருந்து வந்துள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இவரையும் வாழ்விக்கும். ஆனால் தற்போது இங்குள்ள சூழலில் அப்படி வருபவர்களுக்குத் தயாரிப்பாளர் சங்கம் என்ன பாதுகாப்பு கொடுக்கிறது.? 

இப்போது சினிமாவில் தயாரிப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்தால் முதலில் ஒரு கோடி ரூபாயை முதலீடு செய்யவேண்டும். அதிலிருந்து வாக்களர்களுக்குக் காசு கொடுத்து சங்கத்தில் தலைவர், பொருளாளர் என ஏதோ ஒரு பொறுப்பிற்கும் வந்துவிடவேண்டும். பிறகு நீங்கள் தைரியமாகப் படம் எடுக்கலாம். இதுதான் இன்றைய நிலை.

சமீபத்தில் விஷால், கதிரேசன், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தலைமையில்  தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஆனால் எங்களைப்போன்ற சில தயாரிப்பாளர்களை 12 மணிக்குத்தான் உள்ளே அனுமதித்தார்கள். நாங்கள் கேள்வி எதுவும் கேட்டுவிடுவோமோ எனப் பயந்து ஒரு மணிக்கே தேசிய கீதம் பாடிக் கூட்டத்தை முடித்துவிட்டார்கள். இந்தக் கூட்டத்தில் கடந்த அரையாண்டுக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. போன வருடம் தாணு பொறுப்பில் இருந்தபோது உண்டான கணக்குகளைக் காட்டிவிட்டு கிளம்பிவிட்டனர். அதைத்தான் அவர் காட்டிவிட்டாரே? அப்புறம் நீங்கள் எதற்கு? இந்த நிர்வாகம் சங்க வைப்பு நிதியில் இருந்து பணத்தை முறைகேடாக கையாடல் செய்து விட்டார்கள் எனப் பகிரங்கமாகவே நான் குற்றம் சாட்டுகிறேன். அப்படி இல்லையென்றால் என் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டியதுதானே? கேள்வி கேட்டால் சங்கத்தை விட்டு நீக்குவேன் என நோட்டீஸ் கொடுக்கிறார்கள்.

இப்போது விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலிலும் நிற்கிறார்கள். கேட்டால் கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்கபோகிறோம் என்கிறார்கள். சின்னப் படங்களுக்கு எங்கே கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது? இவர்கள் ஒரு பத்து பேர் தங்களது படங்களைக் காப்பாற்றிக்கொள்ள தேர்தலில் நிற்கிறார்கள். இதனால் சிறிய தயாரிப்பாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

கதை திருட்டுப் பிரச்னை இன்னொரு பக்கம் வெடித்திருக்கிறது. இன்று கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் இல்லாமல் போய்விட்டது. எதற்காகக் கதையைத் திருடி எடுக்கிறீர்கள்? பணத்தைக் கொடுத்து நல்ல கதையை வாங்கி படம் எடுக்கலாமே? ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தை அப்படியே உல்டா செய்து அரண்மனை படம் எடுத்தார்கள். நாங்கள் நீதிமன்றம் மூலமாகச் சென்று அந்தப்படத் தயாரிப்பாளருக்குப் பத்து லட்சம் ரூபாய் வாங்கித் தந்தோம்.

ஆனால் இப்போது சங்கத்தின் செயலாளராக உள்ள கதிரேசன் ரஜினியின் மூன்றுமுகம் பட உரிமத்தை வாங்கி வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தின் கதை, மூன்று முகம் படத்தின் கதைதான் என்று கூறி, அதனால் தனக்கு நஷ்ட ஈடாக மூன்றரைக் கோடி ரூபாய் வேண்டும் எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பழைய பட தயாரிப்பாளருக்கு பத்து லட்சம். ஆனால் இவருக்கு மட்டும் மூன்றரைக் கோடி வேண்டுமாம்? 

Story image

அப்படிப் பார்த்தால் ‘மெர்சல்’ படம் மூன்று முகம் மட்டுமல்ல, குடியிருந்த கோவில், அபூர்வ சகோதரர்கள் மாதிரி நான்கைந்துப் படங்களைத் தழுவித்தான் எடுக்கப்பட்டுள்ளது. அட்லி அப்படியெல்லாம் ஒரு படத்தை மட்டுமே காப்பியடித்து படம் எடுக்கிறவர் அல்ல. மொத்தமாகப் பத்து படங்களை காப்பியடித்துத்தான் படம் பண்ணுவார். எனில் குடியிருந்த கோவில், அபூர்வ சகோதரர்கள் தயாரிப்பாளர்களுக்கு யார் நஷ்ட ஈடு வாங்கி தருவார்கள்? நீங்கள் சங்கத்தில் பொறுப்புக்கு வருவதற்காகச் செலவு செய்த எடுக்க இந்தச் சங்கத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். சித்தார்த்தை, கார்த்திக் சுப்புராஜை, அட்லியை எல்லோரையும் மிரட்டுகிறீர்கள். ரெட் கார்டு போடுவோம் எனச் சொல்கிறீர்கள். இதற்குத்தான் நீங்கள் பொறுப்புக்கு வந்தீர்களா? 

அமேஸான் பிரைம் என ஆன்லைனில் நம் படத்தை விற்பதற்கு வசதி உள்ளது. ஆனால் எத்தனை பேருக்கு இது தெரியும். சங்கத்தில் இருக்கிற சிலர் மட்டும் அதைப் பயன்படுத்தி லாபம் அடைவார்களே தவிர, சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு அந்த வழியைக் காண்பிக்கமாட்டார்கள். 

கேபிள் டிவியில் பாடல் வெளியீட்டு விழாக்களின் வீடியோக்களைக் கொடுத்து காசு வாங்கித் தருகிறோம் எனச் சொல்கிறீர்கள். அப்படி ஏதோ ஒரு கேபிள் டிவிக்குக் கொடுத்தால் மற்ற முக்கியமான சேனல்கள் மூலமா எப்படி அந்தப் படத்துக்கு விளம்பரம் கிடைக்கும்? சின்னப்படங்களைக் கொல்வதற்கான முயற்சிதான் இது. சரி, அப்படி வரும் காசையும் எங்களுக்கா கொடுக்கப்போகிறீர்கள்? அதை நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு செல்வு செய்துவிடுவீர்கள். 

பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, பைரசியை ஒழிக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு அவர் கற்றுக்கொண்ட வித்தையெல்லாம் காட்டுகிறேன் எனக் கோடிக்கணக்கில் சங்கக் காசை செலவு செய்து கடைசியில் மத்திய அரசு நினைத்தால்தான் பைரசியை ஒழிக்கமுடியும் எனச் சொல்கிறார். இதைத்தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக்கொண்டு வருகிறோமே, அதற்க எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்யவேண்டும்? 

நடிகர் சங்கத்தில் இவர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினபோது ஊடகங்களிடம் பேசாதீர்கள், என்னிடம் நேராக வந்து பேசுங்கள் என்று சரத் குமார் சொன்னார். அப்போது நாங்கள் ஊடகங்களிடம்தான் பேசுவோம் என்று சொன்னவர்கள், இப்போது ஊடகங்கள் கேள்வி கேட்கும்போது நாங்கள் நேரடியாகப் பேசிக்கொள்கிறோம் எனச் சொல்கிறார்கள். 

இந்த குறிப்பிட்ட பத்து பேர் மட்டுமே இந்தத் திரைத்துறை அல்ல. மீதி 9௦ சதவீதம் சின்னப்படங்கள்தான். நாங்கள் நன்றாக இயங்கினால்தான் பத்து பேருக்கும் பாதுகாப்பு. இவர்களின் பத்து பேருக்காக மீதி உள்ளவர்களை அழிக்க நினைத்தால் ஒட்டுமொத்த சினிமாவே அழிந்துவிடும். எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து மிரட்டி ஒடுக்கிவிடலாம் என நினைத்துவிடாதீர்கள். இதைவிட பத்து மடங்கு வீரியமாகக் கிளம்பி வருவோம். இந்தத் துறைக்குப் படம் எடுக்கத்தான் வந்திருக்கிறோமே தவிர உங்களைப்போல பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்க அல்ல என்று காட்டமாகப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.