இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலிலும் தொடரும் விஷால் vs தாணு!

அதை விட்டுவிட்டு இந்தச் சங்கத்துக்கு வருகிறார் என்றால் அதில் நிச்சயம் சுயநலமும் உள்நோக்கமும் உள்ளன...

News image
Updated On :23 டிசம்பர் 2017, 10:00 am

எழில்


நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் என இரு தேர்தல்களுக்கு அடுத்ததாக விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலிலும் விஷால் vs தாணு போட்டி தொடர்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நாளை நடைபெறுகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து விலகினார். விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் அவர் போட்டியிட முடிவெடுத்ததால் தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியிலிருந்து விலகினார். இவர் விஷாலின் ஆதரவுடன் விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தற்போது தலைவராக உள்ள டிஏ அருள்பதி தலைமையிலான அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். அருள்பதிக்கு தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனாலும் இந்தத் தேர்தலிலும் எந்த அணி ஜெயிக்கும் என்கிற ஆர்வம் உண்டாகியுள்ளது. இந்த இரு அணிகள் தவிர கலைப்புலி சேகரன் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுகிறார்.

இத்தேர்தல் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தாணு பேசியதாவது: 

அருள்பதி நியாயமானவர். நீண்ட காலம் சங்கத்தைத் திறம்பட நடத்தியுள்ளார். விநியோகஸ்தர்கள் பிரச்னை புரிந்தவர். அவர் தலைவராக வருவதுதான் நியாயம். அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர். அதை விட்டுவிட்டு இந்தச் சங்கத்துக்கு வருகிறார் என்றால் அதில் நிச்சயம் சுயநலமும் உள்நோக்கமும் உள்ளது. அவர் நிறைய படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை அவர் கவனிக்கட்டும். நான் விநியோகஸ்தராக வாழ்க்கையை ஆரம்பித்தவன். இந்த சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவன். இந்த சங்கத்துக்கு அருள்பதி தலைவராகத் தொடர்வதுதான் திரைத் துறைக்கு நல்லது என்று பேசினார். 

Story image

இயக்குநர் சேரன் பேசியதாவது:

தயாரிப்பாளர் சங்கத்தை சீரழித்தது போதாது என்று இப்போது விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன சாதித்தார் என்று இப்போது விநியோகஸ்தர் சங்க தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார்? அருள்பதி நியாயமனவர், கண்ணியமானவர், நேர்மையானவர். அவர் விநியோகஸ்தர் சங்கத் தலைவராகத் தொடர்வதுதான் நல்லது என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது:

நடிகர் சங்கத்தைக் கைப்பற்றுவோம் என்றார்கள். இல்லாத பழியையெல்லாம் அண்ணன் ராதாரவி மீது சுமத்தி இவர்கள் சங்கத்தைக் கைப்பற்றினார்கள். என்ன சாதித்தார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட் படி ஏறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்றினார்கள். அங்குக் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த பணத்தைக் கோடிக் கணக்கில் கையாடல் செய்துவிட்டு, பொதுக் குழுவில் பதில் சொல்லத் திராணியில்லாமல் தேசிய கீதம் பாடிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இதுதான் விஷால், ஞானவேல் ராஜா குரூப்பின் சாதனை. இது விநியோகஸ்தர் சங்கத்திலும் தொடர அனுமதிக்காதீர்கள். அருள்பதி அணியை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார். 

நாளை காலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விஷால். அவரை எதிர்த்து, நடிகர் ராதாரவி போட்டியிட்டார். தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த தாணு, நடிகர் ராதாரவிக்கு ஆதரவாக நேரடியாகச் செயல்பட்டார். இந்தப் போட்டி தயாரிப்பாளர் சங்கத்திலும் நீடித்தது. அடுத்ததாக விநியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் தொடர்கிறது. 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ள விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். கடந்த முறை பதவி வகித்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தைக் குறை கூறி வந்த, நடிகர் விஷால் தனது தலைமையில் புதுக் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் களம் கண்டார். "நம்ம அணி' என்று உருவாக்கப்பட்ட இந்த அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதே போல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் சார்பில் ஆர். ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 27 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் வாக்களித்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான 1059 வாக்குகளில் 478 வாக்குகள் பெற்று விஷால் பெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணனுக்கு 335 வாக்குகள் கிடைத்தன. கேயார் 224 வாக்குகள் பெற்றார்.

இரு தேர்தல்களிலும் தாணுவுக்கு எதிராக வெற்றி கண்டார் விஷால். நாளையும் விஷால் அணிதான் ஜெயிக்குமா? அல்லது இந்தமுறை தாணு விஷாலைப் பின்னுக்குத் தள்ளுவாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.